“என்னை விடவும் றோவின் பெரிய அதிகாரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்திருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தால்தான் அவர்கள் என்னை றோவின் ஆள் என்று அடையாளம் கண்டிருக்க முடியும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேர்காணலின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே சட்டத்தரணி மணிவண்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் ஆதரவாளர்கள், சட்டத்தரணி மணிவண்ணன் அவர்கள் றோவின் ஆள் என விமர்சனம் வைப்பது தொடர்பான கேள்விக்கு, மணிவண்ணன் அவர்கள் மேலும் தெரிவித்தாதவது,
உண்மையிலேயே நான் றோவின் ஆட்கள் என்று றோவுக்கு தெரியுமா? என்று எனக்கு தெரியாது. நான் நினைக்கின்றேன் றோ அதிகமாக ஆட்களை இறக்கி இருப்பது யாழ்ப்பாணத்திலாகத்தான் இருக்கும். நான் றோவுக்கு வேலை செய்கின்றேன் என்றால் அது இரகசியமான விடயம். ஒன்றில் றோ சொல்ல வேண்டும் இவர் என்னோட ஆள் என்று அல்லது நான் சொல்ல வேண்டும் நான் றோவின் ஆள் என்று. புலனாய்வு விடயத்தில் றோவும் சொல்லமாட்டாது நானும் சொல்ல மாட்டேன்.
அப்படி என்றால் இவர்களிடம் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்ததுபோல், மிகப் பெரிய புலனாய்வுக் கட்டமைப்பு இருக்கின்றதா? இல்லை புலனாய்வுக் கட்டமைப்பு இருக்கின்றதா? அதாவது தொழிநுட்ப ரீதியாக வளச்சியடைந்த புலனாய்வுக் கட்டமைப்பு இருக்கின்றதா? நான் அறிந்த வகையில் நாங்கள் உருவாக்கவில்லை அப்படி என்றால் தொக்கி நிற்பது ஒரு விடயம் மாத்திரமே.
ஒன்று அவர்கள் றோவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு யார் தங்களை போல வேலை செய்கின்றார்கள் என்று கண்டு பிடிக்கலாம். அல்லது அவர்களும் றோ அல்லது வேறு ஒரு மிகப் பெரிய புலனாய்வுக் கட்டமைப்புக்கு வேலை செய்கின்றார்கள் என நினைக்கவேண்டி உள்ளது.” என்றார்.