மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 12ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்ற மிகவும் பின்தங்கிய இந்தப் பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு மருத்துவமனையையும் கூட, அரசாங்கம் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், அந்த மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவை இயங்க வைப்பதற்கு போதிய வசதிகளற்ற கட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பரந்தனில் இருந்து கொக்குளாய் செல்லும் 88 கிலோ மீற்றர் நீளமான வீதியில் ஒன்பது இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்தச் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் நீண்டநேரம் பொது மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரமங்களைக் கொடுக்கும் இந்த சோதனைச் சாவடிகள் அனைத்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.