மலேசிய மடல்:
– நக்கீரன்
கோலாலம்பூர், அக்.21
மலேசியத் தமிழர்களின் வாழ்வில் அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொன்னான நாள். 204 ஆண்டுகளுக்கு முன்னம் இதே நாளில்தான் முதன் முதலில் மலாயாத் திருநாட்டில் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அந்த வகையில், இன்றைய நாள், மலேசியத் தமிழ்க் கல்வி நாள்!.
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அல்லது தமிழகத்திற்கு அப்பால், ஈழத்தை அடுத்து இந்த மலையகத்தில்தான் தமிழர்கள் தம் தாய் மொழியான தமிழுடன், பண்பாடு, கலாச்சாரம், தமிழ்வழிக் கல்வி, கலை மேம்பாடு உள்ளிட்ட தமிழியக் கூறுகளுடன் இன்றளவும் வாழ்கின்றனர்.
இதற்கெல்லாம் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் விளங்குபவை தமிழ்ப் பள்ளிகள்தான்.
1816-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் ‘பினாங்கு ஃப்ரீ ஸ்கூல்’ என்னும் பள்ளியில் தமிழ்க் கல்வி முதன்முதலாக தொடங்கப்பட்டது. அதனையொற்றி 204 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ்க் கல்விக்காக மலேசிய இந்திய சமுதாயம் ஆற்றியுள்ள பணி மகத்தானது.
பிரிட்டிஷ் ஆட்சியின்கிழ் இருந்த மலாயா, 1957 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது. அதற்கு முன் 1950களில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகையப் பள்ளிகளின் துணையோடுதான் கடந்த 204 ஆண்டுகளாக தமிழ் மொழி, இலக்கியம், இன அடையாளம், சமய மறுமலர்ச்சி, பண்பாட்டுக் கூறு, காலத்திற்கேற்ற கலை வளர்ச்சி ஆகிய அனைத்தும் வழிவழியாக மலேசியத் தமிழர்களை பற்றிக் கொண்டுள்ளன.
இவ்வாறு மலேசியாவில் நிலைபெற்றுள்ள தமிழ்க்கல்விக்கு சிறப்பான வரலற்றுப் பின்னணி உண்டு. மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டிலும் பொருளாதார மறுமலர்ச்சியிலும் தமிழ்ப்பள்ளிகள் ஆற்றியுள்ள பங்கு எழுதி மாளாது. இந்த மண்ணில் தமிழைப் பயின்று அதன்வழி வாழ்வில் சிறந்தவர்கள் ஏராளம்.. . ஏராளம்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன் முதலாக மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெறுவதற்கும் நாட்டின் மூத்த பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கும் இந்தத் தமிழ்ப் பள்ளிகள்தான் மூலமும் முதலும் ஆகும்.
அன்றைய மலாயாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேய நிருவாகத்தினர், அப்போது, ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ என்று அழைக்கப்பட்ட பினாங்கில் ஃப்ரீ ஸ்கூல் என்ற பெயரில் ஒரு கல்விச் சாலையைத் தொடங்கினர்.
உண்மையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கத்தான் இந்தப் பள்ளி உருவாக்கப் பட்டது. அப்படி உருவான ஆங்கில பாடசாலையில் இணைக் கல்வியாக தமிழைக் கற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் முதன்முதலாக தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்ட் அட்சிங்ஸ் என்பவர்தான் இந்தத் தமிழ் வகுப்பை, 21 அக்டோபர், 1816-இல் தொடங்கினார்.
ஏசு பிரான் பிறப்பதற்கும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன், சங்க காலத்து மறத் தமிழர்கள் இந்த மலாயா நாட்டின் வட புலத்தில் உள்ள யான் மண்டலத்தில் வந்திறங்ககிய வரலாரும் உண்டு. வில்லோடும் வாளோடும் கலமேறி கடல் கடந்து இந்த மண்ணில் வெற்றிக் கொடிய நாட்டிய வரலாற்றுப் பின்னணிக்கு கடாரமே தங்க சான்று.
ஆனாலும், அந்த வரலாற்றில் இடையில் தொய்வு ஏற்பட்டு விட்ட நிலையில், அதைப் புதுப்பித்துத் தந்த ஆங்கிலேயர்களுக்கு ஒருவகையில் தமிழர்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும்; இரப்பர்த் தோட்டங்களிலும் செம்பனைத் தோட்டங்களிலும் குறைந்த ஊதியத்தில் நிறைவான உழைப்பை சுரண்டுவதற்கென்று குத்தகைத் தொழிலாளர்களாஅக தமிழர்கள் அழைத்து வரப்பட்டாலும் அதிலும் ஓர் நன்மை விளைந்தது.
தமிழர்கள் வாழ்ந்த தோட்டங்கள்தோறும் தமிழ்ப்பள்ளிகள் உருவாகின. இப்படி உருவான பள்ளிகளின் எண்ணிக்கையில் மெல்ல சரிவு ஏற்பட்டு, 2011 ஆம் ஆண்டளவில் 523 தமிழ்ப்பள்ளிகள் மட்டும் நிலைபெற்றன. தோட்டங்கள் துண்டாடப்பட்டு தொழிலாளர்கள் இடம் பெயர்ந்ததாலும் பல தோட்டங்கள் அழிக்கப்பட்டு மேம்பாட்டுத் திடங்கள் நிறைவேற்றப்பட்டதாலும் தோட்டப் புறங்களைவிட்டு நகர்ப்பகுதிகளுக்கு தமிழ்த் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தனர். இதனால், மாணவர்கள் பற்றாக்குறையாலும் போக்குவரத்து சிக்கலாலும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன.
ஆரம்ப பாடசாலைகளாக இருக்கும் தமிழ்ப் பள்ளிகள்தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உயர்க்கல்வி நிலையங்களிலும் தமிழ்ப் படிக்க அடித்தளமாக விளங்குகின்றன. ஆசிரியர் கல்விக் கழகத்தில் தமிழ் இடம்பெற்றுள்ளதற்கும் தமிழ் ஆரம்பப்பள்ளிகள்தான் ஆதாரம்.
மொத்தத்தில் பாலர் பள்ளி முதல் முனைவர் பட்டம் பெறும் பல்கலைக்கழகம் வரை மலேசியத் தமிழர்கள் தமிழைக் கற்கவும் தமிழிய மரபோடு வாழவும் இந்தத் தமிழ்ப் பள்ளிகளே பேரளவில் துணை புரிகின்றன..
இத்தகைய சூழ்நிலையில், இந்திய மாணவர் சமுதாயத்தின் நலம் கருதி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், ஏழு தமிழ்ப் பள்ளிகளைக் கட்டினார். சுதந்திர மலேசியாவில் புதிய பள்ளிகளைக் கட்டித்தந்த ஒரேப் பிரதமர் இவர்தான்.
இதன் தொடர்பில் அப்போதைய மஇகா தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், அப்போதைய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தமிழ்ப் பள்ளி வரலாற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் வண்ணம் அக்டோபர் 21-ஆம் நாள், மலேசிய தமிழ்க் கல்வி தினமாக அண்மைய ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.
இதன் தொடர்பில், “மலேசியாவில் நிலைபெற்றுள்ள தமிழ்க் கல்வியின் எதிர்காலம் சவால் நிறைந்தது. ஆனாலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த சவால்களை எதிர்கொண்டால் மலேசியத் தமிழ்க் கல்வி தன் பயணத்தை செவ்வனேத் தொடரும்” என்று ‘மலேசியத் தமிழ்க்கல்வி – 204 ஆண்டுகள்’ விழாக் குழுவின் தலைவருமான கமலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரின் கடப்பாடும் நினைவுகூர வேண்டிய தருணம் இது. இதில், தமிழ்ப் பள்ளிகளில் பணி புரிந்த-புரியம் ஆசிரியர்களின் பங்களிப்பும் அயராத உழைப்பும் சமுதாயத்தில் என்றென்றும் மதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் தமிழ்ப் பற்றும் சமூக உணர்வும் பாராட்டிற்குரியது.
மலேசியாவில் தமிழ்க் கல்வி நிலைபெற வேண்டுமென்றால், இதில் இந்தியப் பெற்றோரின் பங்களிப்பும் கடப்பாடும்தான் முதன்மையானது என்று மலேசியத் தமிழ்க் கல்வி நாள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் பள்ளிகள்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24