திலீபனை நினைவு கூரும் விடயத்தில் ஒன்றாகச் செயற்பட்ட தமிழ் கட்சிகள் கடந்த வாரம் மறுபடியும் ஒன்றுகூடிய பொழுது அக்கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்திருந்தார். சுமந்திரனின் வருகையை எதிர்த்து அனந்தி சசிதரன் கூட்டத்தில் இருந்து வெளி நடப்புச் செய்தார்.
சுமந்திரனையும் வைத்துக் கொண்டு கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவரைப் போலவே தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் உள்ள சில தரப்புக்கள் சுமந்திரனை நீக்கி விட்டு இந்தக் கூட்டை பலப்படுத்த வேண்டும் என்று கருதுவதாகத் தெரிகிறது. தமிழ்த்? தேசிய அரசியலை தேசிய நீக்கம் செய்யும் சுமந்திரனை நீக்கினால்தான் தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம் என்று நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் கூட்டமைப்பில் இருந்தோ அல்லது கட்சிகளின் ஒருங்கிணைப்பில் இருந்தோ சுமந்திரனை நீக்குவது சாத்தியமா ? என்பதே. சுமந்திரன் நீக்கம் என்பது தனியே சுமந்திரன் எனப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் நீக்குவது அல்ல. சுமந்திரன் எனப்படுபவர் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைக்கிறார் என்றுநம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. சுமந்திரன் ஒரு அரசியல் செயல் வழியின் பிரதிநிதி. சுமந்திரனை கூட்டமைப்பின் பட்டத்து இளவரசனாக மேலுயர்த்தியது சம்பந்தரே. சுமந்திரனின் எல்லா நடவடிக்கைகளுக்கும் சம்பந்தரின் ஆசீர்வாதம் உண்டு. எனவே சுமந்திரனை நீக்கினால் எல்லாம் சுத்தமாகி விடும் என்று கருதுவது ஒரு பிரச்சினையை தனிநபர் மையப்படுத்தி பார்க்கும் ஒரு போக்குத்தான்.
மாறாக அதனை அதன் கட்டமைப்புக்குள்ளால் விளங்கிக் கொள்ள வேண்டும். கட்டமைப்புக்குள்ளால் விளங்கிக் கொள்வது என்பது 2009க்குப் பின்னரான கூட்டமைப்பை அதன் உயர்மட்ட கட்டமைப்புக்குள்ளால் விளங்கிக் கொள்வதுதான். கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் மாவையும் ஒருவர். ஆனால் அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் குறைவு. அதனால்தான் அவர் இருக்கத்தக்கதாக சம்பந்தர் சுமந்திரனை பட்டத்து இளவரசனாகக் கட்டி எழுப்பினார். எனவே மாவையைக் காய் வெட்டி சுமந்திரனை அடுத்த கட்டத் தலைவராக வளர்த்தெடுத்தமை என்பது சம்பந்தரின் நீண்டகாலத் திட்டம். அதை நோக்கியே அவர் எல்லாவற்றையும் கட்டமைத்தார். கடந்த 10 ஆண்டுகால அரசியலில் கூட்டமைப்பு அடைந்திருக்கும் தோல்விகளுக்கு அதிக பொறுப்பை சுமந்திரனும் சம்பந்தரும் ஏற்க வேண்டும். அவை கூட்டு முடிவுகள். தனிய ஒரு சுமந்திரனின் முடிவுகள் அல்ல. அந்தக் கூட்டு முடிவுக்கு மாவையும் ஒருவிதத்தில் பொறுப்புதான். கட்சித் தலைமை தன் கையை விட்டு போன போது மாவை தானே தன்னுடைய இயலாமையை ஏற்றுக் கொண்டு ஒதுங்கி விட்டார். வடமாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை வேட்பாளராக சம்பந்தர் நிறுத்தியதும் மாவை ஒதுங்கிக் கொண்டார். தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக போராடவில்லை. போராடும் திராணியும் இல்லை.
எனவே கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் அவரும் இருக்கத்தக்கதாக சம்பந்தரும் சுமந்திரனும் சேர்ந்து முடிவுகளை எடுத்தார்கள். இந்த முடிவுகளுக்கு மாவை மட்டுமல்ல கட்சியின் ஏனைய பிரதானிகளும் ஒன்றில் கட்டுப்பட்டார்கள் அல்லது எதிர்க்காமல் விட்டார்கள். அவர்கள் எதிர்க்காமல் விட்டதற்கு பிரதான காரணம் கட்சிக்குள் தமது அடுத்த கட்ட பதவி உயர்வுகளை பாதுகாத்துக் கொள்வதுதான். எனவே இதில் சம்பந்தன் சுமந்திரன் எடுத்த முடிவுகளை ஆதரித்த எல்லோருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.
எல்லாருமாக சேர்ந்துதான் கட்சியை அழித்தார்கள். கட்சி இப்பொழுது கண்டிருக்கும் தோல்விக்கு சம்பந்தனும் சுமந்திரனும் மட்டும் பொறுப்பில்லை. சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த முடிவுகளை அனுசரித்து போன அனைவருமே பொறுப்புதான். ஒருமுறை ஒரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எனக்கு தனிப்பட்ட முறையில் சொன்னார். “சம்பந்தன் ஒரு ஜனநாயக சர்வாதிகாரி” என்று. அதாவது கட்சியின் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் அவர் ஒரு சர்வாதிகாரி போல முடிவுகளை எடுக்கிறார் நடைமுறை படுத்துகிறார் என்று பொருள். எனவே இது விடயத்தில் சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலின் ஒரு கருவியே சுமந்திரன். எனவே அவரை நீக்குவது என்பது சம்பந்தன் கடந்த பத்தாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு அரசியல் செய்முறையை முற்றாக நீக்குவதுதான். அது முடியுமா?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தன்னோடு சிறீதரனையும் கூட்டுச் சேர்த்துவிட்டார். ஏற்கனவே அவர் மகாண சபை மட்டத்திலும் உள்ளுராட்சி சபை மட்டத்திலும் பலமான ஒரு ஆதரவு தளத்தைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் கட்சிக்குள் தனக்கென்று தேசிய மட்டத்தில் பலமான ஆதரவுக் கட்டமைப்பை கொண்டிருப்பது சுமந்திரன் மட்டும்தான். மாவைக்கு அப்படி ஒரு கட்டமைப்பு கிடையாது. குறிப்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரை மாவைக்கு ஏதோ ஒரு கொஞ்சம் முக்கியத்துவம் இருந்தது. அதுவும் இப்பொழுது இல்லை. யாழ்பாணத்தில் உள்ள சில மூத்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மாவையோடு நிற்கிறார்கள்தான் எனினும், பொதுச் சபையைக் கூட்டினால் அதில் மாவையை விட சுமந்திரனின் கையே மேலோங்கி நிற்கும் என்று ஒரு பலமான ஊகம் உண்டு.
எப்படியென்றால் அம்பாறை மாவட்டத்தில் தேசியப் பட்டியலை கலையரசனுக்கு வழங்கியதன் மூலம் சுமந்திரன் அணி தனது ஆதரவு தளத்தை அங்கே பலப்படுத்தியிருக்கிறது. அதோடு அண்மை வாரங்களாக சுமந்திரன் கிழக்கில் அதிகம் மினக்கெடுகிறார். அங்கே காணி சம்பந்தப்பட்ட வழக்குகளை அவர் கையாளப் போகிறார். இப்படிப் பார்த்தால் கிழக்கில் பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் சுமந்திரன் தனது பிடியை மேலும் பலப்படுத்த முயற்சிக்கிறார். திருகோணமலையில் நிலைமை சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. வடக்கில் வவுனியா மன்னார் முல்லைத்தீவில் பொதுக் குழு உறுப்பினர் மத்தியில் சம்பந்தர் சுமந்திரன் அணிக்குப் பலமான பிடி உண்டு. கிளிநொச்சியிலும் அப்படித்தான்.
யாழ்ப்பாணத்தில் தீவுப் பகுதியும் சரவணபவனுக்கு நெருக்கமான பகுதிகளும்தான் சுமந்திரனுக்கு எதிராக காணப்படுகின்றன. அதிலும் சரவணபவன் இம்முறை தோற்று விட்டார். எனவே அவருடைய நிலைமையும் ஒப்பீட்டளவில் பலவீனம்தான். எனவே பொதுக் குழுவில் மாவை சுமந்திரனை விடப் பலவீனமாகவே காணப்படுகிறார் என்று ஒரு கருத்து உண்டு. இவ்வாறு தனது பலவீனமான நிலையை சரி செய்வதற்காக மாவை கட்சிக்கு வெளியே ஏனைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஓர் உபாயத்தைக் கையிலெடுத்திருக்கிறாரா?
இதிலவர் ஒரு கட்டம் வரை நகர்ந்திருக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகும் பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் முழுமையாக இணையுமா என்பது தெரியவில்லை. கடந்த கூட்டத்தில் அவர்கள் பங்குபற்றவில்லை. அதே போல சுமந்திரனின் வருகையால் அனந்தி போன்றவர்களும் வெளியேறக் கூடிய நிலைமைகள் உண்டு. விவாகரத்துப் பெற்ற தம்பதியை ஒரு தேவை கருதி ஒன்றாக வைதிருப்பதைப் போன்றது இக்கூட்டு என்று அக்கூட்டில் உள்ள ஒரு கட்சித் தலைவர் என்னிடம் சொன்னார்.
கடந்த கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்குபற்றியிராத ஒரு பின்னணியில் மாவை விக்னேஸ்வரனை வீடு தேடிச் சென்று சந்தித்தார். சந்திப்பின் நோக்கம் கூட்டுக்குள் இருந்து விக்னேஸ்வரன் வெளியேறாமல் நிலைமைகளைச் சுமுகமாக வைத்திருப்பதே. ஏனெனில் சந்திப்புக்கு சில நாட்களுக்கு முன் விக்னேஸ்வரனின் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடந்தது. அதன் பின் வெளியான செய்திகளின் படி கூட்டமைப்புத் தன்னை பலப்படுத்துவதற்காகத்தான் இவ்வாறான கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனவே விக்னேஸ்வரனின் அணியும் கூட்டுக்குள் இருந்து வெளியேறக் கூடிய நிலைமைகளைத் தடுக்கும் நோக்கத்தோடு மாவை அவரை சந்தித்தவரா? அச்சந்திப்பில் கட்சிகளின் கூட்டு கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தியதாகத் தகவல்.
ஆனால் கொள்கை அடிப்படையில் கூட்டை மேலும் பலப்படுத்துவது என்று சொன்னால் பிழையான வழியில் கட்சியை செலுத்திய சுமந்திரனை நீக்க வேண்டும் என்று அனந்தியைப் போன்றவர்கள் கேட்கின்றார்கள். “சுமந்திரன் நீக்கம்” எனப்படுவது அதன் பிரயோகத்தில் கூட்டமைப்பு நீக்கம்தான். கடந்த பத்தாண்டுகளின் முடிவில் தமிழரசுக் கட்சி பெற்ற தோல்விகளுக்கு அல்லது கூட்டமைப்பு பெற்ற தோல்விகளுக்கு பொறுப்பேற்று மாவையும் உட்பட கட்சித் தலைமைகள் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த பிழைகளைச் சரி செய்யும் விதத்தில் கட்சியை மீளக் கட்டமைக்க வேண்டும் என்றும் கட்சியிலிருந்து விலகிய சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்வாறெல்லாம் கட்சியை ஒரு புதிய தடத்தில் ஏற்றுவது என்று சொன்னால் அதற்கு கட்சியை சுமந்திரன் நீக்கம் செய்ய வேண்டும் என்று தாயத்திலும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் ஒரு தொகுதியினரும் வலிமையாக நம்புகிறார்கள். ஆனால் இப்போதுள்ள நிலைமைகளின் படி அது சாத்தியமே இல்லை. ஆயின் கூட்டின் எதிர்காலம் ?