பாராளுமன்றத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
20வது திருத்தச் சட்டத்திற்குப் பின்னால் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களைப் பாதிக்கும் விடயங்கள் அதிகமாக உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். அதற்கு மேலாக இந்த திருத்தச் சட்டத்தில் எமது தமிழ் மக்களை குறிவைத்தும் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்கின்றோம். அவற்றுள், தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.
20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
20 ஆவது சட்டத்திருத்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இரும்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் 20 ஆவது திருத்த சட்டத்தின் பின்னால் இருப்பதாக உணர்வதாக அச்சம் வெளியிட்டார்.
யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்றும் கட்சி பேதம் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்துஇந்த சட்ட திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் கூறியதாவது,
மத்தியில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிப்பீடம் ஏறும்போது நாட்டைப் பற்றிச் சிந்திக்காது, நாட்டு நலன்கள் பற்றிச் சிந்திக்காது தமது கட்சிகளின், அங்கத்தவர்களின், ஆதரவாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றிவருவது இந் நாட்டின் துர்திஷ்ட வரலாறாகத் தொடர்ந்து வந்துள்ளது. லீ குவான் யூ க்களாக பரிணமிக்க விரும்புபவர்கள் தமது பக்கசார்பான சிந்தனைகளைக் கைவிட்டால்த்ததான் நாட்டிற்கு நன்மை செய்யலாம். லீ குலான் யூ சீன பௌத்த பாதையில் செல்லவில்லை. அவர் சிங்கப்பூர் மக்கள் அனைவரையும் நேசிப்பவர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் நாட்டை முன்னேற்றவிடாது. ஆகவே இந்த 20வது திருத்தச்சட்டம் மூலமாக அதிகாரத்தை தனிமனிதர் ஒருவரிடம் குவிக்கும் எண்ணத்துடன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது.
மனித நாகரிகம் முன்னேற முன்னேற எவ்வாறு ஜனநாயக பண்புகளை மேலும் மேம்படுத்தி மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் சகவாழ்வுடன் கூடிய வாழ்க்கையினை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் சிந்தித்து செயற்பட்டுவரும் இந்தவேளையில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டி புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டில் இடம்பெறுகின்றது.
ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சி பண்புகளின் பரிணாமம் திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் என்று மட்டும் நான் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நான் இதனை பார்க்கின்றேன். தமிழ் மக்கள் தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்டு வரும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்வதற்கு காணப்படும் ஒரு சில ஜனநாயக இடைவெளிகளையும் அடைத்து இம்ம்புக் கரம் கொண்டு எமது போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திட்டமும் இதன் பின்னால் இருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஜனாதிபதி செயலணி (Task force)என்ற அமைப்பின் கீழ் சிறுபான்மையினரின் காணிகள் திணைக்களங்களினால் கையேற்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் தமிழ்ப்பேசும் மக்கள் தமது உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளிக்கொண்டுவராது அவர்களை கட்டுப்படுத்த வடக்கு கிழக்கில் குவித்துள்ளார்கள். வனத் திணைக்களம் போன்றவை மக்களின் பாராம்பரிய காணிகளைக் கையேற்றுக் கொண்டிருக்கின்றனர். அரச அரவணைப்பின் பின்னணியில் சட்டத்திற்கு புறம்பாக எமது வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. மகாவலியின் கீழ் பிற மாகாண மக்கள் எங்கள் மாகாணங்களில் குடியேற்றப்படுகின்றனர். ஆனால் வாக்குறுதி அளித்த மகாவலி நீர் ஒரு சொட்டேனும் வடக்கு நோக்கி வரவில்லை. எமது எந்திரிகளின் கூற்றுப்படி அது என்றுமே வராது. இது தான் வடக்கு கிழக்கின் இன்றைய நிலைமை.
உலகில் அநேகமான நாடுகளில் ஜனாதிபதி முறை ஆட்சி இல்லை. அப்படியாயின் அந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறதா? அல்லது ஜனாதிபதி முறையுள்ள நாடுகளில் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல் இருக்கின்றதா? ஆகவே மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை தவிர்த்து இந்நாட்டின் சாபமாக உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக களைந்து மக்களுக்கு நேரடியாக பொறுப்புக்கூறக் கூடிய சட்டத்தின் ஆட்சியை பலபப்டுத்த நாம் முயற்சிக்க வேண்டும். நீதித்த துறை, பொலிஸ் துறை போன்ற நிறுவனங்கள் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்திப்பதே நாட்டை பற்றி நேசிக்கும் ஒவ்வோருவரின் கடமையாகும்.
நீதித்துறை, காவல்த்துறை மற்றும் பொது அலுவலர் சேவையை ஒரே நிறைவேற்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டுவருவது பாரிய எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.
இந்த அரசு இன்னும் 6 மாதகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கும் போது இத்தகைய ஒரு சட்ட திருத்தத்தை அவசரகதியில் கொண்டுவர முனைவதானது அவர்களுக்கு பின்னால் இருக்கும் இரகசிய நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதையே தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.
ஒரு உதாரணத்தை இனித் தருகின்றேன்.
குழுநிலை நேர திருத்தங்களின் போது நடைபெறப்போகும் 20வது திருத்தச்சட்டத் திருத்தங்கள் கணக்காளர் நாயகத்தின் அதிகாரங்களை கட்டுப்படுத்தவிருக்கின்றன. அரசாங்கம் அல்லாது அரச கூட்டுத்தாபனம் நூற்றிற்கு ஐம்பது சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும் கொம்பனிகள் கணக்காய்வுக்கு கணக்காளர் நாயகத்தால் உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் வெளியேற்றப்படவிருக்கின்றன.
அப்படியானால் ஜனாதிபதியின் செயலகமும், பிரதம மந்திரியின் செயலாளரும் முன்னர் கணக்காளர் நாயகத்தின் ஆய்வில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து பின்னர் இருவரையும் குழுநிலை நேர திருத்தப்படி திரும்பவும் ஆய்வுக்கு உட்படுத்த விளைந்த காரணம் யாது? முக்கியமான கேள்வி என்னவென்றால் அரசாங்கத்தால் உரிமை கொண்டாடப்படும் கம்பனிகள் இதுவரை காலம் நடைபெற்ற கணக்காளர் ஆய்வில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளமையின் காரணம் யாது?
யார் யார் எல்லாம் இந்த 20 ஆவது சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கு இன்று பாடுபடுகிறார்களோ, யார் யார் எல்லாம் இதற்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இதே சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்ட திருத்தும், உங்கள் மீதும், உங்கள் பிள்ளைகள் மற்றும் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்தாதீர்கள். இரண்டு தரப்பிலும் உள்ள எனதருமை சகாக்களே! இந்த 20 ஆவது சட்ட திருத்தம் நாளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட அனுமதிக்காதீர்கள்.
மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும்.” என்றார் அவர்.