சொர்க்க லோகத்தில் உள்ள ஓர் அரங்கில் கலைவிழா ஒன்று நடைபெற்றது. மங்கள விளக்கு ஏற்றப்பட்டு எம்.எஸ். அம்மாவின் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. ஈழத்து கா. சிவதம்பி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவதாக டி கே பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம் சரஸ்வதி பாக்கிய ராஜா முத்துக்குமார சுவாமி சர்மா ஆகியோர் கர்நாடக இசை விருந்தளித்தனர். அடுத்து கமலா லக்ஷ்மணன், பால சரஸ்வதி ஏரம்பு சுப்பையா, வீரமணி ஐயர் போன்றோரின் பரத நாட்டியம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது. இதையடுத்து எம். ஆர் ராதாவின் நாடகக்குழுவினரின் நாடகம் அரங்கேறியது. நடிகர் திலகம் சிவாஜி கனேசன் ஆச்சி மனோரமா போன்ற கலைஞர்கள் பங்குபற்றினர்.
அடுத்து தென்னிந்திய சொல்விற்பன்னர்களும் ஈழத்து பேச்சாளர்களும் ஒருங்கிணைந்து பட்டிமன்றம் நடத்தினர். கி வா ஜெகந்நாதன் தலைமை தாங்கினார். பட்டிமன்ற தலைப்பு ‘பூவுலகில் கொரானா தொற்று. நன்மையளிக்கிறதா? தீமையளிக்கிறதா? ஆச்சரி
யித்தடன் செவி மடுத்தாலும் நன்கு ரசித்தனர். பாயாசம் இல்லாமல் கல்யாண சாப்பாடா? என்பது போல மெல்லிசை இல்லாமல் கலைவிழாவா? என்பதற்கிணங்க இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது. கவிஞர் கண்ணதாசன், மருதகாசி, வாலி, முத்துக்குமார் ஆகியாரின் பாடல் வரிகளுக்கு ஜி ராமநாதன், கே வி மகாதேவன் எம் எஸ் விஸ்வநாதன், போன்றோர் இசையமைக்க டி. எம் செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எம் எல் வசந்தகுமாரி, பிபி ஶ்ரீநிவாஸ், ஸ்வர்ணலதா ஆகியோர் எல்லோரையும் இசைவெள்ளத்தில் மூழ்கடித்தனர். இதற்கிடையில் பிரதம் விருந்தினராக எம்.ஜி ராமச்சந்திரன் வருகை தந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த எம் ஜி ஆர் தன் காரியதரிசியிடம் “எல்லாரும் நல்லா பாடுறா ஆனாலும் பாடகர்கள் போதாது வேறு யாரும் இல்லையா” என்று கூறினார் காரியதரிசி ” சார் பூவுலகில் எஸ் பி பி என செல்லமாக அழைக்கப்படும் பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கிறார். ஆனால் அவரை எவ்வாறு அழைக்கலாம்? என்று கூறினார். மக்கள் தலைவர் ” அவர் தான் எனக்காக ஆயிரம் நிலவே பாடினார். அவர் மிக நன்றாக பாடுவார். கவலைப்படாதே எம தர்மராஜன் எனக்கு நெருங்கிய நண்பன் அவரிடம் விசாரிக்கிறேன் என்று பகர்ந்துவிட்டு உடனேயே தர்மராஜனை அணுகி விசயத்தை விளக்கினார். அவரும் சித்திரகுப்தனை அழைத்து பூவுலகில் உள்ள எஸ்பிபி யின் ஆயுளைப் பற்றி விசாரித்தார். சித்ரகுப்தன் ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு செப்டம்பர் 25 ஆம் திகதி எஸ்பிபியின் ஆயுள் முடிகிறது என்று கூறினார். அப்படியா என்று கூறிய யமதர்மராஜன் எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து “நண்பா நானே நேரில் சென்று அவரை அழைத்து வருகிறேன்” என்று கூறினார்.
உடனேயே பூவுலகம் புறப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவமணையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். செப். 25ஆம் திகதி மதியம் 1.04 மணியளவில் தன் கூட அழைத்துப்போக ஆயத்தமானார். ஆனால் பூவுலக வாசிகள் அவரை விடுவதாக இல்லை. அவர்களிடம் மக்கள் திலகம் தான் அவரை அழைத்து வரக்கூறினார் என்று கூற மக்கள் மிக்க மரியாதையுடன் கண்களில் நீர் மல்க பாடும் நிலா பாலுவுக்கு விடை கொடுத்தனர். அவகளிருவரும் விண்ணுலகை அடைந்தவுடன் பூமழை பொழிந்தது. அங்குள்ள கலைஞர்கள் யாவரும் இளைய நிலா பாலுவை வரவேற்றனர். இனி தேவ சபையில் அவரது இசை தொடரட்டும். அவரது புகழ் பெருகட்டும். நாம் அனைவரும் பாடி விட்டுச்சென்ற பாடல்களை இங்கே உள்ள பாடகர்கள் பாடக்கேட்டு பாலா என்னும் இசை மேதையுடன் ஐக்கியமாகி வாழ்வோமாக. உலகம் உள்ளவரை அவருடைய பாடல்களை மக்கள் கேட்பர்.
திருமதி. ஜானகி இராமகிருஸ்ணன்- மொன்றியால்