(கடந்தவாரத் தொடர்ச்சி)
மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரர் ஆதிக்குடிகளின் (நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) பட்டியலில் தமிழர்களை சேர்க்காது விட்டாலும் மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் செறிந்து வாழ்ந்தார்கள், அந்த நிலப்பகுதியை ஆண்டார்கள் என்பதை காகவண்ண தீசன் (கிமு 210 – 205) வாயிலாகக் கூறுகிறார். அதாவது தமிழர்கள் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள பகுதியை ஆண்டார்கள் என மகாவம்சம் கூறுகிறது.
அதற்கு முதல் சோணாட்டில் இருந்து சேனன், கூத்தியன் (கிபி 237 -215) ஆகியவர்கள் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள்.
இந்த இருவரையும் ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அசேலன் (கிபி 215 – 205) அரியணை ஏறினான். இவன் மூத்தசிவனின் மகன் ஆவான். இவனை சோழநாட்டில் இருந்து படையெடுத்து வந்த எல்லாளன் (கிபி 205 – 161) ஆட்சியில் இருந்து கவிழ்த்து விட்டு 44 ஆண்டுகள் நீதி தவறாத ஆட்சி செய்தான்.
துட்ட கைமுனு (கிமு 161-137) நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன். அவனது பாட்டன் பெயர் கோத்தபாய. அவனது பூட்டன் பெயர் யத்தல தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன், மகாநாகனது தந்தை பெயர் மூத்தசிவன்! துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளத்தோடு காணக் கூடிய ஒரு இனக் குழு தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை (கெலனியா) ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள்.
தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சியாக துட்டகைமுனு அனுராதபரத்தைக் கைப்பற்றப் படை எடுத்துச் சென்ற போது வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களை வென்றான் என மகாவம்சம் கூறுகிறது. அதற்கு அவன் எடுத்த காலம் 6 மாதங்களாகும்
மகாவம்சம் தமிழ் அரசர்களைத் தமிழர்கள் என்றும் நாக வம்ச அரசர்களை நாகர்கள் என்றும் பிரித்துக் கூறுகிறது. மதம் மாறிய தேவநம்பிய தீசனையோ அல்லது அவனது முன்னோர்களையோ அல்லது அவனது சந்ததிதியினரையோ தமிழ் அரசர்கள் எனக் கூறவில்லை.
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கு (கிமு 205 – கிமு 161) உரியவை.
ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது.
மகாவம்சம் பல கற்பனைக் கதைகளையும் சில வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்ட நூல் என்பது நினைவு கொள்ளத்தக்கது. அதன் ஆசிரியர் மகாநாப தேரர் மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சம் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார்.
மகாவம்சம் மூலமே தமிழர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இலங்கையில் செறிந்து வாழ்ந்தார்கள் என்பது தெரிய வருகிறது. மகாவம்சம் நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடுவர்) ஆகியவர்களையே ஆதிக் குடிகள் என்கிறது. தமிழர்கள் விடுபட்டுள்ளார்கள்.
நாகர்கள் வடக்கு (நாகதீபம்), தென்மேற்குப் (கல்யாணி) பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்கர், இராட்சதர் பெரும்பாலும் மகியங்கன பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆவர். நாளடைவில் அவர்கள் நாகர்களோடு கலந்து விட்டார்கள்.
பூர்வீக குடிகளில் கிபி எட்டாம் நூற்றாண்டுவரை நாக வம்சத்தினரே அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்டு வந்திருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டுவரை நாக என்ற விகுதிப் பெயரோடு நாகர்கள் இலங்கையை ஆண்டு வந்துள்ளார்கள். தீசன் என்ற விகுதிப் பெயர் உடையவர்களும் நாகர்களே. மேலும் நாகர், இயக்கர் போன்றோர் தமிழர்களைப் போல் திராவிட இனத்தவர் ஆவர்.
நாக வம்ச அரசர்கள் தங்கள் அடையாளத்தை தொடர்ந்து பேணி வந்திருக்கிறார்கள். பல அரசர்களது பெயர்களில் நாகன் அல்லது தீசன் என்ற பின்னொட்டு காணப்படுகிறது.
பாண்டுகாபயன் கிமு 377 – 307
மூத்தசிவன் கிமு 307 – 247
தேவநம்பிய தீசள் கிமு 247 – 207
துட்ட கைமுனு கிமு 101 – 77
சாத்தா தீசன் கிமு 77 – 59
துலாத்தன கிமு 59
இலங்க தீசன் கிமு 59 – 50
கல்லாட நாகன் கிமு 50 – 44
வட்டகாமினி கிமு 44
வட்ட காமினி கிமு 29-17
மகா தீசன் கிமு 17 -03
கோரநாகன் கிபி 03-09
குடக்கண்ண தீசன் கிபி 16 -38
பாதிக அபயன் கிபி 38 -66
மகாநாகன் கிபி 66 – 78
காமினி அபயன் கிபி 78 – 88
கனிராஜ தீசன் கிபி 88 – 91
குலபாயன் கிபி 91-92
சீவலி கிபி 92
இளநாகன் கிபி 95-101
சந்தமுக சிவா கிபி 101 – 110
யசலாக தீசன் கிபி 110 – 118
சுபராஜா கிபி 118 – 124
வசபன் கிபி 124 – 168
வங்கநாப தீசன் கிபி 168 – 171
முதலாம் கஜபாகு கிபி 171 -193
மகா இளநாகன் கிபி 193 – 199
பாதிக்க தீசன் கிபி 199 – 223
கனிஷ்ட தீசன் கிபி 223 -241
குஞ்சநாகன் கிபி 241 – 243
குடநாகன் கிபி 243 – 244
சிறிநாகன் கிபி 244 – 263
வோகர தீசன் கிபி 263 – 285
அபயநாகன் கிபி 285 – 293
சிறிநாகன் 2 கிபி 293 – 295
விஜயகுமாரன் கிபி 295 -296
சங்க தீசன் கிபி 296 – 300
சங்க போதி கிபி 300 – 302
மேகவண்ண தீசன் கிபி 302 – 315
யெத்த தீசன் கிபி 315 – 325
மகாசேனன் கிபி 325 – 352 (சான்று மகாவம்சம்)
இளநாகன், சோரநாகன், குஞ்சநாகன், மகாநாகன் போன்ற நாகர்கள் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். தேவநம்பிய தீசன் தொட்டு நாகர்களில் பெரும்பான்மையினர் பவுத்த மதத்துக்கு மாறினார்கள்.
ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவில் பவுத்த நாகர்கள் சிங்கள இன அடையாளத்தையும், சிங்களமொழி அடையாளத்தையும் பவுத்த தேரவாத தேரர்கள் செயற்கையாக உருவாக்கினார்கள். சிங்கள மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு, கன்னட மொழியை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.
சிங்கள மொழி பாளி, சமற்கிருதம், ஹெல (எலு) தமிழ் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ளது.
நாகர் தமிழ் பேசவில்லை. தமிழையொத்த மொழியைப் பேசியிருக்கலாம். மணிமேகலை என்ற பவுத்த காப்பியத்தில் சாதுவன் என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அவனது மனைவி ஆதிரை. அவன் அவளைப் பிரிந்து ஒரு கணிகையோடு வாழ்கிறான். அப்போது வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டிவிடுகிறாள்.
சாதுவன் தன் மனைவி மேல் ஆசையும், அன்பும் கொண்டவன். இழந்தவற்றை மீண்டும் அடைந்து ஆதிரையை சுகமாக வாழவைக்க வேண்டும் என்று விரும்பினான். எனவே வங்கத்துக்கு வாணிகம் செய்யப் புறப்பட்ட வணிகர்களோடு சாதுவனும் சேர்ந்து கொள்கிறான்.
கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்துவிடுகிறான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள் (நாகர்கள்) அவன் ஊனைத் தின்னலாம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு அவனை எழுப்புகிறார்கள்.
சாதுவன் அவர்களுடைய மொழியை செவ்வனே கற்றுத் தேறியவன் ஆதலின் அவர்கள் பேசியது அவனுக்கு விளங்குகிறது. அவர்கள் அவனைத் தங்கள் தலைவனிம் கூட்டிச் செல்கிறார்கள்.
அங்கே … கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்துகொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் … நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும் அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலவன் தன் ஏவலாளர்களிடம் சொல்கிறான். அவை வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான்.
மயக்கத்தை உண்டாக்கும் கள், உயிர்க்கொலை இந்த இரண்டையும் குற்றமற்ற மக்கள் தவிர்த்தார்கள். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதும் … உறங்குவதும் உறக்கத்திற்குப் பின் விழிப்பதும் போலவே. இந்த உண்மையினால் … நல்லறத்தைச் செய்பவர்கள் நல்லுலகை அடைவார்கள்; நல்லது அல்லாதவற்றைச் செய்பவர்கள் கொடிய நரகத்தை அடைவார்கள். அதனால் அறிவுடையோர் இவைகளைத் தவிர்த்தார்கள். சாதுவன் பவுத்தன் என்பதால் அவன் பவுத்த கோட்பாடுகளை நாகருடைய தலைவனுக்கு எடுத்துக் கூறினான்.
நெடுங்காலமாகக் கலம் கவிழ்ந்து வந்து கரையொதுங்கிய மக்களை நாங்கள் உண்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்த பொருள்கள் இவை. மணம் நிறைந்த மரம், மெல்லிய துகில், நிறையப் பணம் இவைகளை எடுத்துக்கொள் என்கிறான்.
அந்தப் பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான்.
இந்தக் கதையில் இருந்து நாகர்கள் பேசிய மொழி தமிழ் அன்று. அது அவர்களுக்கு உரித்தான மொழி அல்ல என்பது புலப்படுகிறது. எனவே தேவநம்பிய தீசன் தமிழ் அரசன் என்பதும் அவன் மகிந்த தேரரோடு தமிழில் பேசினான் என்பது தவறான அல்லது பிழையான அனுமானமாகும்.
அப்படியென்றால் தேவநம்பிய தீசன் மகிந்த தேரருடன் பேசிய மொழி எது? மகாவம்சம் விடையளிக்கிறது. இருவரும் நாட்டில் (மக்கள்) பேசிய மொழியில் (in the language of the land – Chapter IV) உரையாடினார்கள் என்கிறது மகாவம்சம். பெரும்பாலும் அந்த மொழி பிராக்கிரத மொழியாக இருந்திருக்க வேண்டும்.
சரி, இந்த நாகர்கள் என்ன ஆனார்கள்? அவர்களில் பெரும்பான்மையோர் பவுத்தர்கள் என்பதால் காலப் போக்கில் அவர்கள் சிங்கள மொழி பேசி சிங்களவர்கள் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிறுபான்மை வேதமத நாகர்கள் தமிழர்களோடு சங்கமமாகிவிட்டனர்.
அதற்குச் சான்றாக தமிழர்களிடம் காணப்படும் பெயர்கள், இடப்பெயர்கள், வழிபாட்டுத் தலங்கள் சாட்சி பகருகின்றன. தமிழர்கள் நாக என்ற முன்னொட்டை தங்கள் பெயரில் வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகம்மா, நாகேஸ்வரன், நாகமணி நாகலிங்கம், நாகரத்தினம், நாகையா, நாகராசா, நாகமணி, நாகேஸ்வரன், நாகேஸ்வரி, நாகபூசணி நாகப்பன், நாகலட்சுமி, நாகராணி போன்ற பெயர்களை குறிப்பிடலாம். இதே போல் நாகபட்டினம், நாகதீவு (நயினாதீவு), நாகதீபம் நாகபடுவான், நாகர்கோயில் போன்ற இடப்பெயர்கள் இந்து நாகர்கள் வட பகுதியில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது.
நாகபூசணி அம்மன் கோயில், நாகதம்பிரான் கோயில் நாகர்களை நினைவுபடுத்தும் இலங்கையின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களாகும்.
தேவநம்பிய தீசனுக்கு முந்திய அரசர்கள் வேத நெறியைப் பின்பற்றிய நாக அரசர்களே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 367-307) ஆவான். அவனது மகனின் பெயர் மகா சிவன். சங்க இலக்கியங்களில் சிவன் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை. எனவே கிமு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகவம்ச அரசர்களுக்கு சிவன் என்ற பெயர் இருந்தது வியப்பாக இருக்கிறது.
முடிவாக சமயத்தால் தமிழர்களும் நாகர்களும் ஒன்றாக இருந்தும் மொழியால் வேறுபட்டு இருந்தார்கள். வேதநெறியைப் பின்பற்றிய நாகர்கள் வேத நெறியைப் பின்பற்றிய தமிழர்களோடு சங்கமாகிய பின்னரே அவர்கள் தமிழர்களோடு கரைந்து தமிழ் பேசியிருக்க வேண்டும்.