கதிரோட்டம் 23-10-2020
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கக் கூடாது என்ற பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சிங்கள அமைப்புக்களும் இலங்கை அரசும் அதனோடு ஜனாதிபதி பிரதமர் என அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் எதுவெனில், பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த வழக்கை கொண்டு சென்று அதில் வெற்றியைக் கண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய கருத்தாடல் என்பது முக்கியமானது.
2009ம் ஆண்டிற்கு பின்னர் ஆரம்பிக்கப்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு பெருமளிவில் கிடைக்கவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகள்; இயக்கம் சார்ந்த அமைப்புக்களில் புலம்பெயர்ந்த நாடுகளில் செயற்பாட்டாளர்களாக விளங்கியவர்கள் பெரியளவில் நாடு கடந்த தமிழீழ அரசின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியதை நாம் அறிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அது பலருக்கு தென்பட்டதாக தகவல்களும் வெளியாகவில்லை.
ஆனால் விடுதலை புலிகள் அமைப்பு பலம் பெற்று விளங்கியபோது அதன் செயற்பாடுகளிலும் பின்னர் அவ்வப்போது இடம்பெற்ற இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும், முக்கிய பங்கெடுத்த சட்டத்தரணி உருத்திரகுமாரன் விசுவநாதன் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராகப் பதவி வகித்து வருவது இங்கு குறிப்பி;டத்தக்கது.
எனினும் பிரித்தானியாவில் முதலில் தொடரப்பட்ட வழக்கு, அதனைத் தொடர்ந்து பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு முன்பாக கொண்டு செய்யப்பட்ட மேன்முறையீடு செய்யும் வழக்கு விசாரணையை முன்னின்று நடத்தியவர்கள் பிரித்தானியாவில் செயற்படும் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் தான் என்பதை அறிகின்றபோது, அவர்களை உலகத் தமிழர்கள் அனைவரும் பாராட்டி மகிழவேண்டும் என்றே நாம் குறிப்பிட விரும்புகின்றோம். அவர்களின் முயற்சி சாதாரணமானது அல்ல என்பதையும் நாம் உணரவேண்டும்.
பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு முன்பாக இந்த வழக்கை எடுத்துச் சென்ற நாடு கடந்த அரசின் பிரித்தானிய பிரிவின் அங்கத்தவர்கள் முன்னின்று செயற்பட்டு பெற்ற இந்த வெற்றியானது, ஏனைய புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றே விரும்புகின்றோம்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உலகெங்கும் உள்ள தமிழர் நலனுக்காக உழைத்து வரும் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய ஒரு நேரம் வந்துவிட்டது என்றும் நாம் கருதுகின்றோம்.
இது இ;வவாறிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கும் எனத் தாம் நம்புவதாக இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இ;வ்வாறு இலங்கையின் பக்கமிருந்து வரும் கருத்துக்களையும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கவனித்து செயற்பட வேண்டும் என்பதையும் நாம் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.