எவ்வாறான விதத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் கொரோனா ஒழிப்பில் ஏனைய உலக நாடுகளை விட இலங்கை முன்னிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போன்று கொரோனா தடுப்புக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் தலைவர் ஒருவர் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அபிவிருத்தி அடைந்ததாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் மரணங்களின் அளவு மிகவும் குறைவு என பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினர் சிறந்த முறையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொடர்பாளர்களை கண்டறிந்து வருவதாகவும் பேலியகொட கொரோனா தொடர்பாளர்களையும் அரச புலனாய்வு பிரிவினரே கண்டுபிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று ஏற்படுவோரை வீட்டில் இருக்குமாறு மக்கள் பணிக்கப்படும் நிலையில் இலங்கையில் மாத்திரம் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதுமாக திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
அதனால் கொரோனா ஒழிப்பில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக பவித்ராதேவி வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.