யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலாநிதி சு. குணசேகரன் புகழாரம்
தான் பணிக்காகவும் பயணத்திற்காகவும் சென்றுவந்த நாடுகளிலெல்லாம் அந்தந்த நாட்டுப் பின்னணியைக் கொண்ட படைப்புக்களை உலகெங்கும் பரந்து வாழுகின்ற தனது வாசகர்களுக்குத் தந்து, எல்லைகளைத் தாண்டிய உலகத் தமிழ் படைப்பிலக்கியம் என்ற பொதுமைப்பாட்டை நிறுவிய பெருமை அ. முத்துலிங்கம் அவர்களையே சாரும். மேலும் எமது தமிழ் நிலத்தில் நாம் நேரில் சந்தித்த மொழிசார்ந்த, சூழல் சார்ந்த, காதல் தொடர்பான, பண்பாடு சார்ந்த காட்சிகளுக்கு அப்பால் தான் வாழ்ந்த நாடுகளில் காணப்படும் இவ்வாறான தனது அனுபவங்களை அழகிய இலக்கியப் படைப்புக்களாக எமக்குத் தந்து, நாம்
காணக்கிடைக்காத காட்சிகளை எம் கண்களுக்கு முன்பாக கொண்டுவந்தவரும் இந்த அற்புதமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள்:
இவ்வாறு ‘படைப்புலகில் அ. முத்துலிங்கம்’ என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழி இலக்கியக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகன் என்னும் புனைபெயர் கொண்ட கலாநிதி சு. குணசேகரன் புகழாரம் சூட்டினார்.
கனடாவைத் தளமாகக் கொண்ட தமிழ் ஆதர்ஸ்.கொம் மற்றும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட இலக்கிய வெளி ஆகிய இரண்டு இலக்கிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த இணையவழி கலந்துரையாடலில், ‘அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் உலக அனுபவம்’ என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து துவாரகன் என்னும் புனைபெயர் கொண்ட கலாநிதி சு. குணசேகரன் அவர்கள், ‘ அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் மனித நேயம்’ தலைப்பில் இந்தியாவிலிருந்து முனைவர் ப. சரவணன் அவர்கள்,’அக்கறையெனில் முத்துலிங்கம்’ என்ற தலைப்பில் அமெரிக்கா வாழ் தமிழ்நாட்டவரான வ. சௌந்தரராஜான் அவர்கள், அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் அங்கதம்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டிலிருந்து கவிஞர், திரைப்பட இயக்குனர் சாம்ராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இணையவழிக் கருத்தரங்கை முதலில் தமிழ் ஆதர்ஸ்.கொம் சார்பில் திருமதி தர்சி அகிலேஸ்வரன் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து, தனது கருத்துக்களைச் சொல்லிய பின்னர் வெவ்வேறு தலைப்புக்களில் உரையாற்ற அழைக்கப்பட்.டவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து அழைத்தார்.
அந்த வகையில் முதலில் உரையாற்றிய கலாநிதி சு. குணசேகரன் அவர்கள் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்கையில் பின்வருமாறு கூறினார்.
தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அ. முத்துலிங்கம் அவர்களுடைய படைப்புக்களை உலகெங்கும் வாசகர்கள் தேடிப் படிக்கின்ற காட்சிகளை நான் கண்டுள்ளேன். எனக்கு கூட அவரது படைப்புக்கள் பல கிடைக்கவில்லை என்ற ஏக்கம் இன்றும் உள்ளது. அவரது படைப்புக்கள் உலகத் தமிழ் இலக்கியம் என்ற வகைக்கு அடங்குகின்ற முக்கிய மான பொக்கிசங்கள் என்றே நான் கருதுகின்றேன்.
அவரது எழுத்தாற்றல் வித்தியாசமானது எந்த உணர்வோடு அவர் எழுதுகின்றாரோ, அதே உணர்வை வாசிக்கும் வாசகர்களும் பெற்றுக்; கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் கையாளும் ◌மொழி நடை உதவுகின்றது. இந்த உணர்வுகள் எம்மிடத்திலேயே நிரந்தரமாகத் தந்துவிடக்கூடியதாகவே அவரது எழுத்தோவியங்கள் அமைகின்றன. மேலும் இயல்பாக தனது கதையையும் கதாபாத்திரங்களையும் நகர்த்திச் செல்லுகின்ற அவரது ஆளுமை என்பது போற்றப்பட வேண்டிய தொன்று” என்று கூறி அ. முத்துலிங்கம் எழுதிய சில சிறுகதைகளிலிருந்து சில பாத்திரங்களையும் உரையாடல்களையும் எடுத்துச் சொல்லி உரையை நிறைவு செய்தார் அவர்.
அடுத்து முனைவர் ப. சரவணன் தனது உரையை நிகழ்த்தினார் அடுத்து, ‘அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் மனித நேயம்’ தலைப்பில் முனைவர் ப. சரவணன் அவர்கள் உரையாற்றும் போது ” நான் வாசித்த இலக்கியப் படைப்புக்களில் அ. முத்துலிங்கம் அவர்களுடைய கதைகளிலே நிறையவே மனிநேயம் பண்பாடு போன்ற விடயங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன. அதனால் ஈர்க்கப்பட்ட நான் அவரது படைப்புக்களை எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்து அதில் வெற்றிகண்டு இன்று உங்கள் முன்னால் பேசிக்கொண்டிரு;ககின்றேன். எனவே அவரது படைப்புக்களை நாம் அதிகம் தேடிப் பார்த்து வாசித்து மனிதநேயம் தொடர்பான உன்னதமமான விடயங்களை அறிந்து கொள்வோம்” என்றார்.
அடுத்து, ‘அக்கறையெனில் முத்துலிங்கம்’ என்ற தலைப்பில் அமெரிக்கா வாழ் வ. சௌந்தரராஜான் அவர்கள்,. உரையாற்றும் போது, ‘தற்போதை தமிழ் படைப்பிலக்கிய பரப்பில் தமிழ்நாட்டவர்களும் ஈழத்து வாசகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாசிப்பது அ.முத்துலிங்கம் அவர்களுடைய படைப்புக்களைத் தான் என்றே நான் அறிகின்றேன். அதற்குரிய காரணம் அவரது படைப்புக்களில் மாந்தர்களை எவ்வாறு உயர்வாக காட்டுகின்றாரோ, அதே போன்றே விலங்குகள் பறவைகள் போன்ற ஐந்தறிவு படைத்தவற்றையும் பாத்திரங்களாவே அன்றி காட்சிப்படுத்தியோ கதைகளோடு இணைத்துச் சென்று அவ்வாறான யுக்தியை கையாள்வதில் வெற்றி கண்டவர் அ.முத்துலிங்கம் ” என்றார்.
அடுத்து’அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் அங்கதம்’ என்ற தலைப்பில் கவிஞர், திரைப்பட இயக்குனர் சாம்ராஜ் உரையாற்றும் போது, பின்வருமாறு கூறினார்.
” அ.முத்துலிங்கத்தின் கதைகளில் அங்கதம் என்பது இரண்டு வகையான பகிரப்படுவதுண்டு. சில கதைகளில் முழுமையாகவே நகைச்சுவையோட்டம் காணப்படும். சில கதைகளில் கதையின் முக்கியமான பாத்திரங்களின் நகர்வுகளோடு நகைச்சுவை அல்லது அங்கதம் காணப்படும். அவ்வாறாக பலவகையான உணர்வுகளை எமக்கு காட்டி அவற்றை நாமே அனுபவிக்கும் வகையில் உதவுகின்ற ஒரு படைப்பாளியாகவே நான் அவரைப் பார்க்கின்றேன்.
அத்துடன் அவர் தனது படைப்புகளின் மூலம் அவர் பார்க்கின்ற உலகப் பரப்பு மிகவும் விசாலமானது. நாம் பார்க்கின்ற எல்லைகளைத் தாண்டி அவர் உலகப்பரப்பில் எம்மை வலம் வரச்செய்யுமு; ஓரு அற்புதமான படைப்பாளி என்பதை நான் எனது வாசிப்பின் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து கனடாவில் வாழும் ஆசிரியர் த. சிவபாலு அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பிய பலரது உரைகளை இணைத்து வழி நடத்தினார்.
மேற்படி இணையத்தள கருத்தரங்கில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களும் நேரடியாகக் கலந்து கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.