வெளியூரிலிருந்து சாய்ந்தமருதிற்கு வருகைதரும் எமதூர் பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகருக்கும் அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் அல்லது தங்களது பிரதேச கிராம சேவையாளரிடமோ உடனே பதிவு செய்யவும்.உள்ளுர் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும்.
இவ்வாறு சாய்ந்தமருது சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர்.எ.எல்.எம்.அஜ்வத் பொதுவான அறிவித்தலை துண்டுப்பிரசுரம் மூலம் வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் எவ்வளவு மோசமானது என்பதையும் அதன் பாதிப்பு மரணமடையும் உடல்களை எரிக்குமளவு பாரதூரமானது என்பதையும் நாம் அனைவரும் நன்கறிவோம்.. அந்த வகையில் பின்வரும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுளளதாவது:
01. வெளியூர் பயணங்களை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.
02. வெளியூரிலிருந்து எமது ஊரிற்கு வருகைதரும் எமதூர் பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகருக்கும் அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் அல்லது தங்களது பிரதேச கிராம சேவையாளரிடமோ உடனே பதிவு செய்யவும்.(உள்ளுர் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும்)
03. வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதிகளிலிருந்து ஊரிற்கு வருகை தர இருப்பவர்கள் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பதோடு தங்களுக்குரிய சுய தனிமைப்படுத்தல் வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட பின்னரே ஊரிற்கு வருகை தர வேண்டும். தேவை ஏற்படின் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதோடு தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
04. பள்ளிவாயல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுகாதார அமைச்சு என்பன வெளியிடும் கொவிட்-19 தொடர்பான சுற்றுநிருபங்களை கண்டிப்பாக பின்பற்றவும்.
05. திருமண வலீமா போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.
06. கடற்கரை பூங்கா போன்ற பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு வருவதை முடியுமானவரை தவிர்த்து கொள்ளவும்.
07. கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதோடு மீறி ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
08. பொதுச்சந்தை நிர்வாகிகள் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தாங்கள் நிறுவனத்திற்குள் சமூக இடைவெளிகளைப் பேணி முறையான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதோடு முகக்கவசம் அணிதல் கைகழுவுவதற்கான ஏற்பாடுகளை எப்போதும் உறுதி செய்தல் வேண்டும்.
09. பொது வெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.