நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாநகரின் அடையாளமாக விளங்குவது, நெல்லையப்பர் கோவில். ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டம் இந்நகரின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால் இந்த ஆண்டு மட்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த இந்தக்கோவிலில் நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசிக்க தினமும் உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் வளர்க்கப்படும் யானைக்கு “காந்திமதி” என்று அம்மன் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
51 வயதாகும் இந்த யானையை அவ்வப்போது கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு யானையை பரிசோதித்தபோது அதன் எடை 4,450 கிலோ இருந்தது.
“இது மிகவும் அதிகம். யானையின் வயதுக்கு 3,750 கிலோ எடை இருப்பதே நல்லது” என்று கருத்து தெரிவித்த மருத்துவர்கள், தினமும் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகளை பரிந்துரைத்தனர். அதோடு, தினமும் யானை ‘வாக்கிங்’ செல்லவேண்டியதும் அவசியம் என்று ஆலோசனை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, யானைக்கான “டயட் கன்ட்ரோல்” கடைபிடிக்கப்பட்டது.
பக்தர்கள் யாரும் தேங்காய், பழம், வெல்லம் வழங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
தினமும் 75 முதல் 150 கிலோ வரை கோரைப்புல் மட்டுமே யானைக்கு உணவாக வழங்கப்பட்டது.
அத்துடன், தினமும் கோவிலின் வெளிப்பிரகாரத்தை 20 முறை சுற்றி வரும் வகையில் யானைக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், நீர்நிலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரவும் யானையை பயன்படுத்தி அதன் நடை அளவை அதிகரித்தனர்.
கடந்த 9 மாதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளன.
சிலநாட்களுக்கு முன், கால்நடை உதவி மருத்துவர் செல்லமாரியப்பன் வந்து யானையை பரிசோதித்தார். அப்போது அதன் எடை 300 கிலோ குறைந்து இருப்பது தெரிய வந்தது.
எடை குறைந்ததால் முன்பை விட இப்போது யானை சுறுசுறுப்பாக இயங்குவதும் கண்கூடாகத்தெரிந்தது.
“இந்த டயட் கன்ட்ரோலும், நடைப்பயிற்சியும் தொடரும்” என்றும், “இதன்மூலம் யானையின் ஆரோக்கியம் இன்னும் மேம்படும்” என்றும் கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
—திருநெல்வேலியில் இருந்து
மணிராஜ்.