கதிரோட்டம் 30-10-2020
உடல் தளர்ந்த நிலையில் உள்ள இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் நேற்று முன்தினம் தனது இல்லத்திற்கு அழைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் கொழும்பு விஜயத்திற்குப் பின்னால் நவம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தல் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவது போல சம்பந்தர்-இந்தியத் தூதுவர் சந்திப்புக்கு பின்னால் விசேடமான காரணம் எதுவும் இருக்காது என்று நாம் கருதினாலும். இந்தியப் பிரதமர் மோடியை தான்; சந்திக்க வேண்டும் என்று விரும்பிய சம்பந்தரை நேரடியாக தனது இல்லத்திற்கு அழைத்து தேநீர் விருந்தளித்து கௌரவப்படுத்த இந்தியத் தூதுவர் முன்வந்திருக்கலாம். அப்போது இந்தியத் தூதர் சம்பந்தரின் வேண்டுகோளான இந்தியப் பிரதமரைச் சந்திப்பது தொடர்பாக உடனடியாக பதிலளிக்காமல் இருந்திருக்கலாம்.
இந்தியப் பிரதமர் மோடியை எத்தனையோ தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலர் இரா. சம்பந்தன் அவர்களது தலைமையில் சந்தித்துள்ளனர். எமது தமிழர் தொடர்பான பிரச்சனையில் இந்தியா கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதேபோன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது மக்கள் நலன் காப்பதிலும் பார்க்க, எவ்வாறு ரணில் விக்கிரமசிங்காவையும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியையும் பாதுகாத்தது என்பதையும் தமிழ் மக்கள் நன்றாகவே தெரிந்துகொண்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, குறிப்பிட்டளவு எண்ணிக்கையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற நினைத்துக் கொள்வதும், முன்;னரைப்போல தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துவது போன்று காட்டிக்கொள்வதும் அவர்களின் தேவைகள் சார்ந்தது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தியத் தூதுவருடனான சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் அனைத்தும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை இந்திய தூதுவரோ அன்றி சம்பந்தர் அவர்களோ எண்ணிப்பார்க்கவும் விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.
அன்றைய சந்திப்பின் போது பல விடயங்கள் பற்றி உரையாடிய பின்னர் “தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளைச் செய்யவும் இந்தியா தயாராக இருக்கின்றது” என தூதுவர் தூதுவர் சம்பந்தர் அவர்களிடம் தெரிவித்ததாக எமக்குக் கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளதை வைத்து பார்க்கின்றபோது வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ‘தூக்கி நிறுத்த’ வேண்டிய தேவை இந்தியத் தூதுவருக்கு ஏன் வரவேண்டும் என்பதே பலரது கேள்வியாக தற்போது உள்ளது
மேலும், “ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் போன்ற பல விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கேட்க வேண்டியவற்றை இந்தியத் தூதுவர் கேட்டறிந்தார” என்றும் சம்பந்தர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவிலும், தற்போது கூட தொடர்ச்சியாக வீதிகளில் நின்றவண்ணம்; காணமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் வடித்தபடி குரல் எழுப்பி நிற்பவர்களுக்கு சாதகமாகவோ அன்று ஆறுதல் வழங்கவோ இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வரவில்லை என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த விடயம்,பல தடவைகள் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் கோபாவேசங்களுக்;கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி ஒளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் சுமந்திரன் போன்ற உறுப்பினர்களும் இந்த தடவை ஜெனிவாவில் என்ன செய்வார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்டுள்ள இந்தியத் தூதரோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ;சபையின் அமர்வு தொடர்பாகவும் பேசியதாக சம்பந்தர் ஐயா தமிழர்களுக்கு சொல்கின்றார். அதை மக்கள் நம்பவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்.
வடக்கில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பி;னர்கள் பலர் இருந்தும், தொடர்ந்தும் இந்தியாவும் இந்தியத் தூதுவர்களும் விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்களை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சரிவை நிமிர்த்தும் முகமாக இவ்வாறான பல தந்திரமான சந்திப்புக்களை நடத்திக்கொண்டே இருப்பார்கள் என்றும், நாம் முன்னர் பல தடவைகள் இந்தப் பக்கத்தில் எழுதியதைப் போன்று புலம் பெயர் தமிழர்களும் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் அமைப்புகளும் இவ்வாறான நகர்வுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கி;ன்றோம்.