ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த தினமாகும்.
யாழ். குடாநாட்டு மக்கள் எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என பல இடப்பெயர்வுகளை சந்தித்தனர்.
ஆனால் இந்த ஒரே இரவில் ஒன்றாய்க்கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்தார்கள்.
யாழ். குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 இலட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மேலும், இடைவழியில் நடந்த மரணங்களையும், பேரவலங்களையும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். அங்கு தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.
இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள்பலர். 24 மணி நேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.
இதேவேளை அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லிம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியேற தடையேதும் இல்லை என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.