இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என இலங்கையின் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இலங்கையில் ‘தாண்டவமாடுகின்றது என்று சொல்லக் மகூடிய அளவிற்கு பரவியுள்ள இந்தகொவிட் -19 தொற்றுநோய் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக குறித்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே தென்பகுதியில் உள்ள கம்பஹா மாவட்ட, மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இலங்கை முழுவதும் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் அனுபவமும் ஆற்றலும் கண்டுபிடிப்புத் திறனும் கொண்ட ஆறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க, தமது பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் மிகவும் நம்பகத் தன்மை கொண்டவை என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான விடயங்கள் என பின்வரும் தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
தற்போது பரவி வரும் விகாரங்கள், ஏற்கனவே பரவிய விகாரங்களிலும் வேறுபட்டது.
அதன் உச்ச உயர் வைரஸ் கொள்ளளவு காரணமாக, அது அதிக அளவில் பிரிகையடைந்து, மிக வேகமாக பரவக்கூடியது.
மினுவாங்கொடை, கொழும்பு மாநகர சபை பிரதேசங்கள், மீன் சந்தை கொத்தணிகளில் இவ்வகையான வைரஸ் விகாரங்களே பரவி வருகின்றது.
இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு/விகாரங்களுக்கு (கந்தக்காடு B.1 இனை சார்ந்தது) உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் வேறு எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு பரவியது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சரும் உயர் கல்வி அமைச்சரும் இலங்கையின் ஜனாதிபதியும் மேற்படி விஞஞானிகளைப் பாராட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் .