மஞ்சள்… தமிழ் மக்களின் அன்றாடத்தேவையில் இடம் பிடித்த அவசியமான பொருள். அளவில் கொஞ்சமாகப் பயன்படுத்தினாலும் அதன் பயனோ பெரிது. அன்றாட சமையலில் மஞ்சள் பொடிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாதா மாதம் பலசரக்கு வாங்க லிஸ்ட் எழுதும்போது, முதலில் எழுதுவது மஞ்சள் பொடி தான். அந்த அளவுக்கு மங்கலகரமாகக் கருதப்படும் மஞ்சளின் மகிமை ஏராளம்.
சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை முன்பு மங்கையர் முகத்தில் பூசி வந்தனர். நாகரிக உலகம் அதை புறந்தள்ளி விட்டது. என்றாலும் வணிக உலகம் தரும் முகக்கிரீமானாலும், பவுடரானாலும் அதில் மஞ்சள் ஒளிந்து இருக்கத்தான் செய்கிறது.
அதுமட்டுமல்ல: மஞ்சளின் மருத்துவ குணம் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சளில் இருக்கும் “குர்குமின்” (curcumin) எனப்படும் வேதிப்பொருள். புற்றுநோய்க்கும், “இன்பிளமேஷன்” எனப்படும் எரிச்சலுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
ஆங்கிலத்தில் மஞ்சள் நிறத்தை ‘யெல்லோ’ (yellow) என்று குறிப்பிடுகிறார்கள். தமிழில் அதையே மஞ்சள் நிறம் என்றோ, பொன்னிறம் என்றோ அழைக்கிறோம். ஆக, நிறத்தில் மஞ்சளும், தங்கமும் நிகராக இருக்கின்றன. அதோடு, தாலிக்கு ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாத ஏழைகள், ஒரு துண்டு மஞ்சளை அதே மஞ்சள் கயிற்றில் முடிந்து கட்டும் வழக்கமும் உண்டு.
இத்தனை சிறப்பு மிக்க மஞ்சளுக்கு பண்டமாற்றாக தங்கம் கொடுப்பதும் இப்போது ஒரு நடைமுறையாகி இருக்கிறது. எங்கே என்றால், இதோ இந்த தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் இலங்கை கடல் பகுதியில் தான். அதுபற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
மஞ்சள் மகிமையை அறிந்த இலங்கை மக்கள்
கோவிட்-19 எனப்படும் கொரோனா பெருந்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் உலகையே பதம்பார்த்து வருகிறது. எல்லா நாடுகளுமே பாதிப்பு எண்ணிக்கையில் பல லட்சங்களைத்தொட்ட நிலையில், இலங்கையில் மிதமான பாதிப்பே இருந்து வந்தது. அதனால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தேர்தல் கூட சிக்கலின்றி நடந்து முடிந்து விட்டது. எல்லாமே சுமுகமாகச்சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையில் கொரோனா பரவல் வேகம் எடுக்கத்தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்குமேல் சில நூறுகளில் இருந்த பாதிப்பு, இப்போது 10 ஆயிரத்தைத்தாண்டி விட்டது. இதனால் பாதிப்பு கூடுதலாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கு மத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கடந்த ஏப்ரலில் இலங்கை அரசு தடை விதித்து விட்டது. அப்படி இறக்குமதி தடை செய்யப்பட்ட மசாலாப் பொருட்களில் மஞ்சளும் ஒன்று.
இலங்கையில் ஓராண்டுக்கு மஞ்சளின் தேவை, 7 ஆயிரம் டன். ஆனால் உள்நாட்டு விளைச்சலில் கிடைப்பது,வெறும் 2 ஆயிரம் டன் மட்டுமே. தட்டுப்பாடு 5 ஆயிரம் டன் ஆக உயர்ந்து மஞ்சளின் விலையும் கடுமையாக அதிகரித்து விட்டது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் கொரோனாவின் தாண்டவம் அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்கனவே மஞ்சளின் மகிமையை அறிந்து அன்றாடம் பயன்படுத்தி வரும் இலங்கை மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மஞ்சளை அதிகம் பயன்படுத்தத்தொடங்கினர். தேநீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து பருகுவது, மூலிகை கசாயத்தில் மஞ்சள்பொடி சேர்ப்பது, வேப்பிலை, மஞ்சள் கலந்து நீராவி பிடிப்பதுபோன்ற பழக்க வழக்கங்கள் அதிகரித்தன. ஆனால் அவர்கள் தேவைக்கு ஏற்ப மஞ்சள் கிடைக்கவில்லை.
கள்ளச்சந்தையினர் கையில் எடுத்த மஞ்சள் வணிகம்
இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தும் தொழில் தொடங்கி விட்டது. பொதுவாக இலங்கைக்கு இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் டன் அளவுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அதிலும் தமிழ்நாட்டின் ஈரோடு மார்க்கெட்டில் இருந்து அதிக அளவில் மஞ்சள் சென்று கொண்டு இருந்தது. இந்த வணிகத்தின் பெரும்பகுதி இப்போது கடத்தல்காரர்கள் வசம்சென்று இருக்கிறது. சிறு சிறு மூடைகளில் கட்டி. வேதாரண்யம், கோடியக்கரை, சேதுபாவாசத்திரம், கன்னிராஜபுரம்,தொண்டி, மண்டபம், தனுஷ்கோடி, தூத்துக்குடி ஆகிய கடலோரப்பகுதிகளுக்குகொண்டு வரப்படும் மஞ்சள், அங்கிருந்து இலங்கையின் கடலோரப்பகுதிகளுக்கு படகுகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு சில மீனவர்களும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.
இறக்குமதி தடைக்கு முன்பு வரை ஒரு கிலோ மஞ்சள், 427 இலங்கை ரூபாய்க்கு (இந்திய ரூபாய் மதிப்பு ரூ.167) கிடைத்து வந்தது. அது இப்போது கள்ளச்சந்தையில் 4,000-5,000 இலங்கை ரூபாயாக (இந்திய ரூபாய் மதிப்பு 1,600-2,000) உயர்ந்து விட்டது.
இந்த கள்ளச்சந்தை வணிகத்தில் தான் மஞ்சளுக்கு பண்டமாற்றாக தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இலங்கை ரூபாயை இந்தியாவில் பயன்படுத்த முடியாது என்பதால் கடத்தல்காரர்கள் தாங்கள் கொடுக்கும் மஞ்சள் மதிப்புக்கு நிகராக தங்க நாணயங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
இதற்கிடையே இந்த சட்ட விரோத வணிகத்தை அறிந்த இரு நாட்டு கடலோர காவல் படையினரும், சுங்கத்துறையினரும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பாம்பன், மண்டபம்,தொண்டி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள மஞ்சள் மூடைகளை கியூ பிரிவுபோலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். நேற்றைய தினம் கூட மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1825 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது. கடலோர காவல் படையினர், கடலில் ரோந்து செல்லும் போது, மஞ்சள் கடத்தும் கும்பலை கண்காணித்து பிடித்து வருகிறார்கள்.
—-மணிராஜ்,
திருநெல்வேலி.