வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் கார்த்திகைமாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வீடுகளுக்குச் சென்று மரக்கன்றுகளை நடுகை செய்து கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன் தொடக்கநிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.11.2020) சிறுப்பிட்டி மேற்கு பார்வதி பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கொரோனா இடர்க்காலசுகாதாரநடைமுறைகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையானோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆலயமுன்றலில் சிவன் ஆலயங்கள் பலவற்றில் தலவிருட்சங்களாகப் போற்றப்படுகின்ற புன்னை மரக்கன்று நடுகை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மரக்கன்றுகளை நடுகை செய்யும் செயற்பாடு ஆரம்பமாகியது.
இதுதொடர்பாகபொ. ஐங்கரநேசன் தெரிவிக்கையில், மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கார்த்திகையில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மரநடுகையை மேற்கொள்வதோடு, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சிகளையும்ஏற்பாடு செய்துவருகிறது. தினமும் கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இதற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனாத்தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதைத் தடுக்கும் நோக்குடன் மரநடுகையைப்பெரும் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்வதைத் தவிர்த்திருக்கிறோம். மலர்க்கண்காட்சியையும் இம்முறை தவிர்த்திருக்கின்றோம்.
நிகழ்ச்சிகளைத் தவிர்த்தாலும் இமரக்கன்றுகளை நடுகை செய்வதை நிறுத்த விரும்பவில்லை. அதனால், இம்முறை மரக்கன்றுகளை எங்களிடம் கேட்டிருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு நாங்கள் நேரடியாகவே சென்று வீட்டுச் சூழலுக்கு ஏற்ற பொருத்தமான மரத்தைத்வழங்கிநாங்களே முன்னின்று நடுகைசெய்யும் செயற்பாட்டை முன்னெடுத் திருக்கின்றோம்.
இவற்றை ஒரு வருடத்துக்குத் தொடர்ச்சியாகக்கண்காணித்து சிறப்பாகமரக்கன்றுகளை பராமரித்து வளர்ப்பவர்களுக்குப் பரிசுகளை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப் படுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளை நாம் இலவசமாக வழங்கி வருகின்றோம். கொரோனாவைக் காரணங்காட்டி இம் மரக்கன்றுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதையும் நாம் விரும்பவில்லை. எங்களிடம் பொதுஅமைப்புகளும் ஆயிரக்கணக்கான மக்களும் மரக்கன்றுகளைக் கேட்டுள்ளார்கள். எங்களிடம் மரக்கன்றுகளைப் பெற்று அதனை மறு விநியோகம் செய்பவர்களைத் தவிர்த்துத் தாங்களே மரக்கன்றுகளைநட்டுப் பராமரிப்போம் என்று உத்தரவாதம் தரும் பொதுஅமைப்புகளுக்கும் பொது மக்களுக்கும் மாத்திரமே மரக்கன்றுகளை வழங்குகின்றோம். தேவையானோர்; எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.