பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளின் உதவியுடன் இவ்வாறு கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் சரியான வகையில் மேற்கொள்வதிலுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு தொலைதூரக் கல்வி முறையின் கீழ் தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி ஊடகங்களைப் பயன்படுத்தி கற்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் பாடசாலையை ஆரம்பித்தல் நடைமுறைச் சாத்தியமின்மையால், கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு சிறந்த மாற்று வழிமுறையாக தொலைதூரக் கல்வி முறை அவசியமென உணரப்பட்டுள்ளது.
அதற்கமைய தரம் 03 தொடக்கம் 13 ஆம் தரம் வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பயன்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.