இலங்கை விமானப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற அரச வைபவங்கள்
இலங்கையின் 18ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இன்று செவ்வாய்க்கிழமை 3ம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டபோது இரண்டு அரச வைபவங்கள் அங்கு இடம்பெற்றன. ஒன்று ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் விமானப் படைத் தளபதி சுமங்கள டயஸ் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எயார் சீப் மார்ஷலாக ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவருக்கு பிரியாவிடை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதன் போது அவர் தனது பொறுப்பிலிருந்த விமானப் படைத் தளபதி பதவிக்கு சொந்தமான சம்பிரதாய கோலை புதிய விமானப் படைத் தளபதியிடம் கையளித்தார்.
மற்றைய வைபவம் புதிய விமானப் படை தளபதியாக பதவியேற்ற எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணகொழும்பு விமானப் படைத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு வருகை தந்து பதவியேற்றமை. அவர், சுபவேளையில் முதல் ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் பொருட்டு விமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவுக்கு விஷேட மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
இலங்கையின் 17ஆவது விமானப் படைத் தளபதியாக இதுவரை காலம் சேவையாற்றிய எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் ஓய்வு பெற்றுச் செல்வதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே விமானப் படையின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்த எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண 18ஆவது விமானப்படைத் தளபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். நேற்று 02ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
புதிய விமானப் படைத் தளபதியின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட விமானப் படைத் தலைமையகத்திலுள்ள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்