-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.05
பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடனுக்குத்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். மலேசியர்களின் அத்தகைய எண்ணம் ஈடேறுமா என்று இந்த நேரம்வரை உறுதிசெய்யப்படவில்லை.
ஆனாலும், ஜோ பைடன்தான் முன்னிலையில் இருக்கிறார். அவரின் உறுதி செய்யப்படும் என்றே தெரிகிறது.
இருந்தபோதும், முடிந்த முடிவாக இன்னார்தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, ஒருவித தயக்கத்துடனும் பரபரப்புடனும்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர் மலேசியர்கள்.
காரணம், நான்கு ஆண்டுகளுக்கு கிடைத்த படிப்பினை அப்படி. எட்டு ஆண்டுகள் ஜனநாயக கட்சி சார்பில் அதிபராக இருந்த ஓபாமா விடைபெற்ற கடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி சார்பில் களம் கண்டார்.
முன்னமே இரு தவணைக் காலத்திற்கு ஜனநாயகக் கட்சி நாட்டை வழிநடத்தி வந்த நிலையில், மீண்டும் அந்தக் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும் இந்த முறை ஒரு பெண் போட்டி இடுவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அமையப் போகிறது என்றும் பெரும்பாலான மலேசியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அதிரடி மனிதரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப்-தான் அதிபராக தேர்வு பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவித்த நேரத்திலேயே அவருக்கு எதிரான குரல்கள் அதுவும் வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே ஒலித்தன. ஏராளமான அமெரிக்கர்கள் அணிதிரண்டு டிரம்பிற்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இருந்தபோதும் அவர் நான்கு ஆண்டுகளைக் கடந்து, மீண்டும் அதிபராக இரண்டாம் தவணைக்குப் போட்டியிட குடியரசுக் கட்சி அவருக்கு வாய்ப்பு அளித்திருந்தது.
டிரம்பின் நிருவாகம், மலேசியர்களின் வாழ்வில் தனிப்பட்ட முறையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில், ஜோ பைடனைப் பற்றியும் ஒன்றும் தெரியாத சுழலில் எதற்காக ஜோ பைடன்தான் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மலேசியர்கள் கருத வேண்டும்?.
டிரம்பின் தடாலடி கருத்துகளும் அதிரடி நடவடிக்கைகளும் ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும்.
ஓபாமா அதிபராக இருந்தபொழுது மலேசியாவிர்கு வருகை மேற்கொண்டிருக்கிறார். அப்போதைய மலேசிய பிரதமர் நஜீப்புடன் நட்பு பாராட்டி இருக்கிரார். டிரம்பைப் பொருத்தவரை அவர் மலேசியாவிற்கு அலுவல பயணம் மேற்கொள்ளாவிட்டாலும் அண்டைத் தீவு நாடான சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான சமரச பேச்சுக்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனாலும், அதற்கு முன் உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக இருந்து கொண்டு சின்னஞ்சிறு நாடான வட கொரியாவுடன் அவர் மல்லுக்கு நின்றதை ஒருவரும் ரசிக்கவில்லை.
குறிப்பாக, கிம் ஜோங் உன்னுடன் டிரம்ப் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதைக் காண சகிக்கவில்லை.
தவிர, அமெரிக்க அதிபராக பதவி ஏற்று வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த உடனே, புலம் பெயர்ந்து அமெரிக்காவில் நுழைந்தவர்கள் விடயத்திலும் அவர் கராராக நடந்து கொண்டார். அந்த நேரத்தில் ஜெர்மனிய பிரதமராக இருந்த எஞ்சலா மெர்க்கல் புலம் பெயர்ந்த மக்களுக்கு இனம்-மொழி-சமயம் பாராமல் அடைக்கலம் கொடுத்தார். அந்த நேரத்தில் உலக மக்களுக்கு கருணைமிக்க தாயைப் போல எஞ்சலா தென்பட்டார்.
இப்படி பதவிக்கு வந்த தொடக்கத்திலேயே மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தியதாலோ என்னவோ டிரம்ப்பின்பால் மலேசியர்கள் அந்த அளவிற்கு ஈடுபாடு கொள்ளவில்லை.
அதனால்தான், இந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார காலத்தில் ஜோ பைடனுக்கு, மலேசியர்கள் தங்களை அறியாமலே நேசக்கரம் நிட்டினர்.
அதேவேளை, மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்குமான அரச தந்திர உறவு வழக்கம்போல சீராகவே இருந்தது. குறிப்பாக, தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவின் நாட்டாண்மை மனப்பான்மையை மட்டுப்படுத்தியதுடன் இந்த விடயத்தில் மலேசியாவின் பக்கம் நிற்கிறது அமெரிக்கா.
இருந்தபோதும், அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால், தற்போதைய அரச தந்திர உறவு மேலும் நளினப்படலாம். அதைவிட, டிரம்பைப் போல சீனாவுடன் முறைத்துக் கொண்டு விரைப்பாக நிற்பதற்குப் பதிலாக ஜோ பைடன் சற்று கனிவான அணுகுமுறையைப் பிற்பற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் மலேசியர்களிடம் உண்டு.
அப்படிப்பட்ட நிலை எழுந்தால், இந்த மண்டலத்தில் நிலவும் அரசல் புரசலான வர்த்தகப் பதற்ற நிலையும் அகலலாம்.
மலேசியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளி அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 பெருந்தாக்கத்தினால், அமெரிக்க சுகாதாரத் துறை மிகப் பெரிய அளவில் மருட்டலுக்கு ஆளாகி நிற்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்டுள்ளது. வேலையில்லாப் பிரச்சினை அமெரிக்காவின் பெருந்தலைவலியாக உருவெடுத்துள்ளது. இவற்றுக்கிடையே இன முறுகல் நிலையும் அதனால் போராட்டமும் பதற்றமும்கூட எழுந்துள்ளது.
அப்படி இருந்தும் 2020-இல் முதல் எட்டு மாதங்களில் 35.44 பில்லியன் அளவுக்கு மலேசியா அமெரிக்காவுடன் வர்த்தகம் புரிந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க அடைவுநிலை.
அமெரிக்க மக்களைவிட உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அதிபர் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியாத நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிக் கோட்டிற்கு அருகில் டிரம்பைவிட ஓர் அடி முந்தி இருப்பதாகத் தெரிகிறது. பார்ப்போம்.