யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், திருகோணமலை பகுதியை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அகதிகளாக இந்தியாவுக்குள் அவர்கள் வருகை தந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.