கோலாலம்பூர், நவ.09:
60 ஆண்டு சுதந்திர மலேசியாவில் இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதாக முந்தைய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதை நாடே அறியும். இப்படிப்பட்ட நிலையில் 2021 நிதி நிலை அறிக்கையில் இந்திய சமுதாயத்திற்கு 120 மில்லியன் வெள்ளியை மட்டும் ஒதுக்கி இருப்பது போதாது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) *தேசியத் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி* தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்திய சமுதாயத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் போக்கு 1957-லிருந்தே தொடர்கிறது. அப்போது பின் தங்கியிருந்த மலாய் சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்திய அதேவேளை, மலாய் அல்லாத மக்களோடு இந்தியர்களையும் சேர்த்து ஒதுக்கும் போக்கு அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்னமும் தொடர்வது ஏற்புடையது அல்ல.
எனவே ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு தேசியக் கூட்டணி அரசு, இந்திய சமுதாயத்திற்காக பூமிபுத்ரா மக்களைப் போல பல சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
புதிய ஆட்சியின் இந்த புதிய பட்ஜெட்டில், மலாய் சமூகத்தின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக மொத்தம் வெ.12.93 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பூமிபுத்ரா மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மட்டும் 6.5 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
மலாய் சமூகத்தின் மேம்பாட்டில் அரசு அக்கறைக் காட்டி வருவது ஒன்றும் அதிசயமல்ல; புதுமையும் அல்ல. அதேவேளை, நலிந்த இந்திய சமூகத்தை மலாய் சமூத்துடன் ஒப்பீடு செய்வதை நியாயப்படுத்த முடியாது.
தேசிய பொருளாதாரத்தில் 1.5 விழுக்காட்டு அளவைக்கூட அடையமுடியாத இந்திய சமுதாயத்துடன் மலாய் சமூகத்தை ஒப்பீடு செய்வதற்குப் பதிலாக, கல்வி-பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டுள்ள சீன சமுதாயத்துடன் மலாய்ச் சமூகத்தை ஒப்பீடு செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
இதை இனவாத கருத்தாக எடுத்துக் கொள்ளாமல் இந்திய சமூகத்திற்கான நியாயவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொன்.வேதமுர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24