-நக்கீரன்
மலேசிய இந்துப் பெருமக்கள் இவ்வாண்டு கொண்டாடும் தீபாவளி பலவகையில் வேறுபட்டுள்ளது. மலேசியவாழ் இந்துக்களின் தலையாய சமய விழா திபாவளித் திருநாள். அத்தகையத் திருநாளை வழக்கமாக சொந்த ஊரில் கொண்டாடும் வாய்ப்பையும் குதூகல சூழலையும் பெரும்பாலான இந்துக்களுக்கு தடுத்துவிட்டது கோவிட்-19 தாக்கம்.
தீபகற்ப மலேசியா மற்றும் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த இந்து மக்கள் நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள், தீபாவளி சமயத்தில் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக சுமார் ஒரு மாத காலத்திற்குமுன் பயண ஏற்பாட்டை செய்யும்போதே அவர்களை தீபாவளி குதூகலம் தொற்றிக் கொள்ளும்.
கொரோனா பாதிப்பின் மூன்றாவது அலை எழுந்துள்ள தற்போதைய சூழலில் மத்தியக் கூட்டரசு நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்-பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பித்துள்ளது. அவற்றுள் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேச மாநிலங்களும் அடங்கும். இதனால், இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தத்தம் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அந்தந்தப் பகுதியிலேயே முடங்க வேண்டிய கட்டாயாம் எழுந்துள்ளது.
இதன் விளைவாக, நாட்டின் மையப் பகுதியிலேயே தங்களின் தீபத் திருநாள் கொண்டாட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கான இந்து மக்கள் அணியமாகி விட்டனர்.
அதேவேளை, கடைவிதி எங்கும் காணப்படும் வழக்கமான மக்கள் கூட்டமும் ஆர்ப்பரிப்பும் இவ்வாண்டு தென்படவில்லை. பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரம், மஸ்ஜிட் இந்தியா பகுதி, கிள்ளான் துங்கு கிளானா வர்த்தகப் பகுதி, கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா(ஈப்போ சாலைப் பகுதி) போன்ற பகுதிகளில் தென்படும் மக்கள், தம் முகத்தில் உற்சாகம் இன்றி ஆடை அணிகலண்கள், பலகார பண்டங்கள், பட்டாசு வகை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதிலும் முகத்தில் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்ப்பதிலும் மட்டும் விழிப்பாக இருந்து விரைவாக இல்லத்திற்கு திரும்புவதிலேயெ குறியாக இருக்கின்றனர்.
தீபாவளி என்றாலே பிள்ளைகளுக்குதான் கொண்டாட்டம். அவர்களை அருகில் நிறுத்தி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் நிலை திண்டாட்டமாக இருந்தாலும் அதில் ஒருவித மனநிறைவு வெளிப்படும்.
அதற்கெல்லாம் வாய்ப்பில்லாத வகையில், நடமாட்டக் கட்டுப்பாடும் பயணம் கட்டுப்பாடும் அமைந்துவிட்டன.
வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்யமுடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருப்பதால், சிறியவர்களையும் பெரியவர்களையும் கடைவீதிப் பக்கம் காண முடியவில்லை. இதனால்தான் பெற்றோரும் மற்றோரும் அரை மனதுடன் தென்படுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசியாவில் பண்டிகை என்றாலே பல இன மக்களும் கலந்து கொள்ளும் பொது உபசரிப்புதான் சிறப்பு. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை என மத்திய அரசு சார்பிலும் மாநில அரசுகளின் சார்பிலும் ஆங்காங்கே பொது விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்.
எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அதில், முவின மக்களும் கலந்து கொண்டு சமய-சமூக நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் பாங்கு இத்தகைய பண்டிகைக் காலங்களில்தான் மிகையாக வெளிப்படும். அதற்கும் வழி இல்லாமல் இந்தக் கொடுமையான கொரோனா நச்சுயிரி செய்துவிட்டது.
கடந்த மேத் திங்கள் 24, 25-ஆம் நாட்களில் கொண்டாடப்பட்ட நோன்புத் திருநாளின்போதும், மலாய்க்காரர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமயத்தவர் அனைவரும் இதே சஞ்சலத்தை எதிர்கொண்டனர்; களையிழந்த நிலையில் கொண்டாடப்பட்ட நோன்புத் திருநாள் வேளையிலும் நாட்டில் வழக்கமாக நடத்தப்படும் பொது உபசரிப்பு இடம்பெறவில்லை.
இன்னும் நாற்பது நாட்களில் கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நிலைமை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. அதற்குள் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்ப்போமே.
உலகம் இதுபோன்ற சுகாதார சிக்கலை எதிர்கொள்ளாத நலமான சூழல் எதிர்காலத்தில் அமையும் என்ற எதிர்பார்ப்புடன் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து, உயிர்ப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், அண்டை அயலாரையும் சுற்றத்தார் நட்பாரையும் சந்திக்க முடியாமல் அமைதியாக இந்த ஆண்டு தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றனர் மலேசியவாழ் இந்துப் பெருமக்கள்.
எது எவ்வாறாயினும் கனடவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் மலேசிய இந்துக்களின் தீபாவளி வாழ்த்து உரித்தாகட்டும்!.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24