இலண்டன் பெரியபுராணப் பேருரையில் தமிழ்நாடு டாக்டர் வே.சங்கரநாராயணன் புகழாரம்
பிரித்தானியாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகசைவத் தமிழ்வளர்த்து வரும் அமைப்பு இலண்டன் சைவமுன்னேற்ற சங்கம். இந்த அமைப்பு சிவன்ஆலயம் ஒன்றையும் இலண்டனில் நிறுவி, நிர்வகித்து வருகிறது. பல்வேறு சமய, கலை, பணிகளை நிகழ்த்தி வரும் இந்த அமைப்பு, இலண்டன் சைவப்பெரியார் திரு.இராமநாதன் அவர்களின் சீரியமுயற்சியால், வாரந்தோறும் பெரியபுராண சொற்பொழிவுகளை கடந்த கால் நூற்றாண்டு காலமாகநடத்தி வருகிறது. இந்த இக்கட்டான கொரோனா சூழ்நிலையிலும், இந்தசொற்பொழிவுகளை இணைய வழிக் கருத்தரங்குகளாக இந்தஅமைப்புதொடர்ந்து நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வெள்ளிக்கிழமை (13.11.2020) தமிழகத்தின் பிரபலமான ஆன்மீகப் பேச்சாளர், சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வர்டாக்டர் வே.சங்கரநாராயணன் அவர்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு திருநாவுக்கரகநாயனார் புராணம் குறித்து அரியதொரு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், திருநாவுக்கரசர் குறித்த பல அரிய, நுட்பமான செய்திகளை தெரிவித்தார். அவர் தனது உரையில்,
நாயன்மார்களில் திருநாவுக்கரசர்மட்டும்தான்அதிகமானபெயர்களைஉடையவர். அவருக்குபூர்வ ஜென்ம பெயர்வாகீசர். தாய், தந்தையர் இட்டபெயர்மருள் நீக்கியார். சமணர்கள் அவருக்கு இட்ட பெயர் தருமசேனர். ஞானசம்பந்தர் அவரை அழைத்த பெயர் அப்பர். சிவபெருமான் அவருக்கு அளித்த பெயர் திருநாவுக்கரசர். புலவர்கள் அழைத்த பெயர் தாண்டகவேந்தர். பொதுமக்கள் அழைத்த பெயர் ஆளுடைய அரசு. இது தவிர பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் 93 பெயர்களால் இவரைக் குறிப்பிடுகின்றார். திருநாவுக்கரசர் வரலாறு பெரியபுராணத்தில் 429 பாடல்களில் விரித்துரைக்கப்படுகிறது.
கி.பி.545ம் ஆண்டு ஜெயவருடம்,பங்குனிமாதம், ரோகினி நட்சத்திரத்தில், தமிழ்நாட்டின் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். 81 ஆண்டுகள் வாழ்ந்து, கி.பி. 636ம் ஆண்டு சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருப்புகலூரில் முக்திப்பேறு அடைந்தார். அவருடைய தமக்கையர் திலகவதியார் தாயை இழந்து, தந்தையை இழந்து, மணம் பேசி முடிக்கப்பட்ட மணாளனையும் இழந்து, தனது கால்களைக் கட்டிக் கொண்டு கதறிய 9 வயது தம்பிக்காக உயிர்தாங்கி, தவவாழ்வு வாழ்ந்த தகைமையாளர்.
காரைக்காலம்மையார், மங்கையற்கரசியார், இசைஞானியார் ஆகிய மூன்று பேரை மட்டுமே பெண் அடியார்களாகப் பெரியபுராணம் குறிப்பிட்டிருந்தாலும், திலகவதியாரை போன்ற எண்ணற்ற மாதரசிகள் தான் ஆண் அடியார்களின் புகழுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறார்கள் என்பதை சேக்கிழார் பெருமான் குறிப்பிடத்தவறவில்லை. அப்படிப்பட்ட இல்லுறை பெண்களை “மனையறத்தின் வேர்கள்” என்றுசேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றார். கொண்டவனையும், குழந்தைகளையும் பேணிக்காக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்தவர்களாகப் பெரியபுராணம் பெண்களை சித்தரிக்கின்றது. குறிப்பாக குழந்தைகளை சைவத்தமிழ் மிக்கசந்ததியினராக மாற்றுவதற்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் தேவை. இன்றும் நான் உலகநாடுகளில் பயணம் செய்கின்ற பொழுது, எந்தவொரு இல்லத்தில் திருமுறைப் பாடல்களை, திருத்தமாக, அட்சரம்பிசகாமல் குழந்தைகள் பாடுகின்றனவோ, அந்த இல்லம் நிச்சயமாக ஒரு ஈழத்தமிழரின் இல்லமாகத்தான் இருக்கும். அந்த இல்லங்களின் தாய்மார்கள் நன்றிக் குரியவர்கள்.
பெண்களைஅவள், இவள் என்று ஏகவசனத்தில் தான் தமிழ் இலக்கியங்கள் முன்னர் குறிப்பிட்டுள்ளன. திருவள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பனும் கூட அப்படித்தான் பாடினார்கள். ஆனால் இன்று பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெண்களை, அவர்கள் வயது குறைந்தவர்களாக இருந்தால் கூட “அவர், இவர்” என மரியாதையோடு, மதிப்புப்பன்மை விகுதி சேர்த்து அழைக்கும் மரபைத்தான் கடை பிடிக்கிறோம். இந்த மரபு மாற்றத்தை முதன் முதலாக இந்த மண்ணில் விதைத்தவர் சேக்கிழார் பெருமான் தான். சின்னக் குழந்தையாக இருந்தாலும், “திலகவதியார் வந்தார், மங்கையர்க்கரசியார் அவதரித்தார் “என பெண்களை மரியாதையோடு பெருமைப்படுத்தியது பெரியபுராணம். அதற்காக பெண்கள் உலகம் சேக்கிழார் பெருமானுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.
குறிக்கோள் வாழ்க்கை, தொண்டு வாழ்க்கை, துணிச்சலான வாழ்க்கை இவைகள் திருநாவுக்கரசர் வருங்காலக் குழந்தைகளுக்கு வகுத்துக் கொடுத்த பாடம். அது எந்த நூற்றாண்டுக்கும், எந்த நாட்டுக்கும், பொருந்தும். முடியாட்சி காலத்திலேலேயே, ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் .. ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்” என ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்த உலகத்தின் முதல் போராளி அப்பரடிகள் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். முடியாட்சிகாலத்தில், உழவாரம் மட்டுமே ஏந்தி, தன்னந் தனியாக ஒரு 70 வயதுக்கிழவர், நீற்றறையில் இட்ட போதும், கல்லைக் கட்டிக்கடலிலே போட்ட போதும், பட்டத்து யானையின் பாதங்களில் இட்ட போதும், நஞ்சு கொடுத்துக் கொள்ள முனைந்த போதும், நடுங்காமல் துணிச்சலோடு, இரும்பு மனிதராக இருந்திருக்கிறார் என்றால் அவரைத் தானே உலகத்தின் முதல்போராளி என்று போற்ற முடியும்?
திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பத்தருக்கும் இடையில் மூன்று சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல்சந்திப்பு சீர்காழியில் நிகழ்ந்த போது திரு ஞானசம்பந்தருக்கு வயது ஏழு. திருநாவுக்கரசருக்கு வயது எழுபது. இரண்டாம்சந்திப்பு திருப்புகலூரில் முருகநாயனார் மடத்தில் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் இணைந்து திருவீழிமிலை சென்று, இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களின் வறுமையைத் தீர்த்தனர். திருமறைக்காடுசென்றுகதவுதிறக்கவும், அடைக்கவும் பாடினர். மூன்றாவது சந்திப்பு திருப்பூந்துருத்தியில் நிகழ்ந்தது. அப்பொழுது தான் திருஞானசம்பந்தரின் சிவிகையை திருநாவுக்கரசர்சுமந்தார். ஏழாம் நூற்றாண்டில் சமணத்துக்கு எதிராக வெடித்த பக்திப்புரட்சிக்கு வடக்கே திருநாவுக்கரசரும், தெற்கே திருஞான சம்பந்தரும் தலைமையேற்றனர் என்பது தமிழ்ச் சமய வரலாறு.
நாயன்மார்களில் இறைவழிபாட்டோடு, உழவாரப் பணியும் மேற்கொண்டு, நீண்டதூரப் பயணங்களை மேற்கொண்டவர் திருநாவுக்கரசர் மட்டும் தான். தள்ளாத முதுமையிலும்காசி தாண்டிகயிலை செல்லும் வழியில் தான் இறைவன் கருணை கொண்டு கயிலைகாட்சியை திருவையாறிலேயே அவருக்கு காட்டி அருள் செய்வதாக உறுதியளித்தார். அவ்வாறே காட்டியும் அருளினார். அவர் பாடிய பாடல்களுக்குத் தான் தேவாரம் என்று பெயர். திருஞான சம்பந்தர் பாடல்களை திருக்கடைக்காப்பு என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களை திருப்பாட்டு என்றும் தான் முதலில் அழைத்தனர். பின்னர் தான் தேவாரம் என்ற சொல்லின் பொருட்சிறப்பு கருதி, மூவர் பாடல்களுக்கும் தேவாரம் என்று பிற்காலத்தில் பெயரிட்டனர். திருநாவுக்கரசர் வாழ்க்கையிலே கடுமையானதவங்கள் இல்லை. தொண்டு செய்வதையே தன்னுடையதவமாக அவர் மாற்றிக் கொண்டார். சிவநாமத்தைவிட திருநாவுக்கரச நாயனாரின் நாமத்தையே தினந்தோறும் எழுதியும், கூறியும்அப்பூதியடிகள்என்றநாயனார் முக்திப்பேறு அடைந்தார் என்றால், எம்பெருமானுக்கு ஈடான சிறப்பு வாய்ந்தவராக திருநாவுக்கரக நாயனார் திகழுகின்றார்.” என்று தனது ஒரு மணிநேர உரையில் டாக்டர்வே.வே. சங்கரநாராயணன்,பல பெரியபுராணப் பாடல்களோடும், திருமுறைப் பாடல்களோடும் விளக்கினார்.
நிறைவில் கனடா உதயன் வார இதழ் ஆசிரியர் லோகேந்திரலிங்கம், இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீவைத்தீஸ்வர குருக்கள், இலங்கை விடை கொடிச் செல்வர்தன பாலா ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினர். சைவப் பெரியார்கள் திரு. இராமநாதன், திரு.ஆனந்ததியாகர், சைவமுன்னேற்ற சங்கத்தின்தலைவர் திரு. ரவீந்திரமோகன்,,செயலர் திருமதி. சரோஜினி சந்திரகோபால்,, பொருளாளர்திருமதி. ராணிசுரேந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருரவீந்திரதாஸ், சமயச்செயலாளர் திரு.சிவதம்பு, திரு.இந்துசேகரன் ஆகியோர் இந்தத் தொடர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களின் சைவத்தமிழ் தொண்டு பாராட்டுக்குரியது.