கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.
இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார் என வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பரவு பணியில் ஈடுபட்ட ஏனைய சிலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்