மன்னார் நிருபர்
(15-11-2020)
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சௌத்பார் கிராம பகுதியில் அனுமதி விதி முறைகளை மீறி அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணையினால் முழு கிராமமும் நீரில் மூழ்கியதுடன் , கடல் நீர் கிராமத்துக்குள் உள் நுழைந்துள்ளமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மன்னார் சௌத்பார் கிராம சேவகர் பிரிவில் கடல் களப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மீன் வளர்ப்பு பண்ணையினாலும் குறித்த மீன் வளர்ப்பு பண்ணையின் வடி கால் அமைப்பு மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கால் வாய் காரணமாகவும் குறித்த கிராமத்தில் பெய்யும் மழை நீர் வடிந்தோடி கடலுக்குள் செல்ல முடியாத நிலையில் குறித்த கிராமம் நீரினால் மூழ்கியுள்ளது.
அதே நேரத்தில் நீர் மக்களின் வீடுகளுக்குள் சென்றுள்ளதாகவும், இதனால் வாழ்வாதார தோட்டச் செய்கைகளையும் பாதீப்படைந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பாதீக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) மதியம் மன்னார் பிரதேச செயலகம் மற்றும் நகர சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் தற்காலிகமாக நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டனர்.
அத்துடன் அமைக்கப்பட மீன் வளர்ப்பு பண்ணை மற்றும் அவற்றிற்கான அனுமதிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் சம்மந்தபட்ட திணைக்களங்கள் மற்றும் பண்ணை உரிமையாளருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு குறித்த பிரச்சினைக்கான உரிய தீர்வை பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச செயலக அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.