சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இயற்கை அழகு நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில்,` மீண்டும் காடு வளர்ப்பு` எனும் பெயரில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்குமரக் காடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் மிக அதிகமாக வனப் பகுதியைக் கொண்ட முல்லைத் தீவில், அரச ஆதரவில் நடைபெறும் காடழிப்பு சுற்றுச்சூழல் மற்றும் அதை அண்டிய பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துள்ளதாக அம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.
இந்தக் காடுகள் இலங்கையின் வடபகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதித்து மழை பொழியும் அளவைக் குறைக்கிறது என்று ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியில் விவசாயமும் மீன்பிடியும் முக்கிய வாழ்வாதாரங்களாக உள்ளன. இவை இரண்டுக்கும் இயல்பான மழைப் பொழிவும் அதற்கு ஆதாரமான காடுகளும் மிகவும் முக்கியம்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு இலங்கை அரசு முல்லைத்தீவு மாவட்டத்தில் `திட்டமிட்ட வகையில்` இயற்கை வளங்களை அழித்தும் சூறையாடியும் வருகின்றன என்று அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்றனர். அரச ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கை போரினால் பாதித்த மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்து அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அழிவின் விளிம்பில் வனப் பகுதிகள்
மண் அகழ்வு, கிரானைட் கற்கள் தோண்டி எடுப்பு, சரளைக் கற்களை அரித்தெடுப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் இப்போது மீளுருவாக்கம் எனும் போர்வையில் காடழிப்பும் சேர்ந்துள்ளது என்கிறார்கள் முறிப்புப் பகுதியிலுள்ள மக்கள்.
இலங்கை அரசு முல்லைத்தீவு மாவட்டத்தில் வனப் பகுதியின் அளவு அதிகரித்து வருகிறது என்று கூறினாலும், அங்குள்ள மரங்கள் தொடர்ச்சியாக சீரான வகையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு காடழிப்பு நடைபெறுகிறது என்பதே களநிலமையாகவுள்ளது.
முதிர்ந்த மரங்களை வெட்டிய பிறகு அங்கு புதிய மரங்கள் நடப்படுகின்றன என்று அரசு கூறினாலும், அங்கு சென்று வந்தவர்கள் புதிய மரக்கன்றுகள் அங்கு நடப்படுவதில்லை என்று கூறுகிறார்கள்.
வன்னிப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, தமிழீழ வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் வாழ்வாதாரத்துக்கு ஏதுவாக காடுகள் வளர்க்கப்படுகின்றன என்று அவர்கள் கூறியிருந்தனர். அது சரியா இல்லையா எனும் விவாதத்துக்குள் இப்போது நான் செல்லவில்லை.
அந்தக் காட்டுப் பகுதி அரச ஆதரவுடன் அழிக்கப்படுவது இயற்கை சமன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்துகிறது என்பது தான் இதில் பிரச்சனை.
முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மரத்துக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில், இந்தப் பகுதியிலிருந்து வெட்டப்படும் தேக்கு மரங்கள் அரச மரக்கூட்டுத்தாபனத்தால் கையகப்படுத்தப்பட்டு நாட்டின் இதர இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்தப் பிரச்சனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடந்த ஆண்டே நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. எனினும் இது குறித்து எவ்வித நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. மாவட்ட வளர்ச்சிக் குழுவும் கூட இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் அதுவும் புறந்தள்ளப்பட்டது.
காடுகளின் கட்டுப்பாட்டை உள்ளூர் அதிகாரிகளிடம் கையளிக்கும் அரசின் முடிவு எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்துள்ளன. கொழும்புக்குத் தெரியாமல் உள்ளூர் அதிகாரிகள் சட்டவிரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காலாவதியான உரிமம்
முறிப்பு பகுதியிலுள்ள வனத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரச பதாதை ஒன்று அங்கு மரம் வெட்டும் உரிமத்துக்கான திகதி முடிவடைந்துவிட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது. எனினும் அங்கு தொடர்ந்து சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகின்றன.
தற்போது மாவட்ட வளர்ச்சிக் குழுவால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையிலும் கூட வனத்துறை `காடுகள் மீளுருவாக்கம்` திட்டம் என்று கூறி தொடர்ச்சியாக தேக்கு மரங்களை வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை உள்ளூர்வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முறிப்பு பகுதியில் 40-50 ஹெக்டயர் பரப்பளவில் வளர்ந்திருந்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது அங்கு புதுப்பிக்க முடியாதபடி சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தியுள்ளது. இளம் மரங்கள் கூட கண்மூடித்தனமாக வெட்டப்படுவதை அங்கிருந்து கிடைக்கும் படங்கள் காட்டுகின்றன.
அங்கு மீண்டும் புதிய தேக்கங்கன்றுகள் நடுவதற்காகவே காடுகள் அழிக்கப்படுகின்றன என்று அரச தரப்பில் கூறப்படுவதை துறைசார் வல்லுநர்கள் ஏற்கவில்லை. முறிப்பு பகுதி அப்படியாக புதிய மரக்கன்றுகள் ஏதும் நடப்படவில்லை என்பத அங்கு சென்றுவந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அங்கு வெட்டப்பட்ட தேக்கு மரங்களுக்கு ஈடாகப் புதிதாக ஒரு தேக்கங்கன்று கூட நடப்படவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.
சட்டவிரோதமாக வகையில் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்படுவது வட மாகாணம் மட்டுமின்றி இலங்கையின் தட்பவெப்ப நிலை, சுற்றுச்சூழல் சமன்பாடு, மழைப் பொழிவு, வாழ்வாதாரப் பிரச்சனை என்று பல வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளூர் அடியாட்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் செய்திகளாக வெளிவந்தன.
மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு
மண் அரிப்பு, பல்லுயிர்த்தன்மை இழப்பு, மழைப் பொழிவில் வீழ்ச்சி, வனஜீவசாரிகளுக்கான வாழ்விட இழப்பு, உள்ளூர் மக்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் போன்றவை சட்டவிரோத காடழிப்பின் பரிமாணங்களாகும்.
வனத்தை மீண்டும் உருவாக்குகிறோம் எனும் போர்வையில் காடுகள் அழிக்கப்படுவது முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அறிவியல் வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தப் பகுதியில் மண் அகழ்வும், சரளைக் கற்களை எடுப்பதும் பாரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனங்களைப் பாதுகாக்க வேண்டிய அரச மரக்கூட்டுத்தாபனமே சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதற்கு துணை போகின்றன என்று மக்கள் ஆதங்கப்படுவது அரசின் செவிகளை எட்டவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.
அண்மைக்கால தரவுகளின்படி முல்லைத்தீவு பகுதியில் மழைப் பொழிவு குறைந்துள்ளதைக் காண முடிகிறது. இதனால் அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளதது ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உள்ளூர் மக்கள் மரம் வெட்டுவதற்கு என்று முறிப்பு பகுதியில் குறிக்கப்பட்டுள்ள வனப்பகுதியில் நுழைவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நுழைவுவாயிலுள்ள பதாதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
`மரம் வெட்டப்படுவது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்`
பல பரிமாணங்களைக் கொண்ட இந்தப் பிரச்சனைக்கான ஒரே தீர்வு சட்டவிரோத காடழிப்படை தடுப்பது மட்டுமே என்று பல்தரப்பினர் வலியுறுத்துகின்றனர். அதுமட்டுமின்றி `சட்டரீதியாக மரம் வெட்டுவதற்கான அனுமதியும்` நிறுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. உள்ளூர்வாசிகளோ தமது விவசாயத்துக்கான போதிய நீராதாரங்கள் தேவை என்கிறார்கள். காடழிப்பு நிறுத்தப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்று முல்லைத்தீவு விவசாயிகள் வாதிடுகின்றனர்.
நீடித்திருக்கக் கூடிய தொடர்ச்சியான காடு வளர்ப்புடன் சட்டவிரோத மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டால் மட்டுமே சீரழிந்த சுற்றுச்சூழல் சமன்பாட்டை பகுதியளவில் மீட்டெடுக்கப்படும்.
இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டம் போர் நிறைவடைந்த காலத்தில் எந்நிலையில் இருந்ததோ அந்த நிலைக்குச் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
முறிப்பு பகுதியில் காடழிப்பு குறித்து இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களைப் பெற எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.