சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இதுவொரு ஓயாத பிரச்சனை. இரு நாடுகளுக்கு இடையேயான உரவில் இது ஒரு உரசலாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்திய-இலங்கைக் கடற்பரப்பைப் பிரிக்கும் கடற்பகுதி மிகவும் சிறியது மற்றும் குறுகியது. அதுதான் அடிப்படையில் இரு நாட்டு மீனவர்களிடையேயான பிரச்சனைக்குக் காரணம்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையேயான தூரம் 18 மைல்கள். அதை நாட்டில் மைல் அல்லது கடல் மைல்கள் என்று கணக்கிட்டால் 20.7 மைல்கள் அல்லது 31 கிலோமீட்டர். (ஒரு கடல் மைல் என்பது நிலப்பகுதியில் அளக்கப்படும் அளவை விட 1.15 மடங்கு அதிகம்)
போருக்கு முன்னரான காலகட்டத்தில் இருநாட்டு மீனவர்களிடையே பெரும் பிரச்சனை இருந்ததில்லை. இந்திய-இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்தனர். அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் வடகடல் பகுதியில் கடற்படையின் ரோந்து மிகவும் குறைவு. எனவே இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து அவர்கள் கடற்படையின் கண்களின் தென்பட்டால், எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவதே வழக்கமாக இருந்தது.
கடத்தல் கடல்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் வடக்குப் பகுதியில் மீனவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இந்திய இலங்கைக் கடற்பரப்பு மீன்பிடிக்கு அப்பாற்பட்டு கடத்தலுக்கான ஒரு பாதையாக இருந்துள்ளது என்பதே யதார்த்தம். போர்க் காலத்திலும் ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்துவதற்கு இந்தக் குறுகிய கடற்பகுதி வசதியான ஒன்றாக இருந்தது.
போர்க் காலத்தில் இலங்கை மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் இருந்ததை இந்திய மீனவர்கள் குறிப்பாகத் தமிழக மீனவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று இலங்கை வடபகுதி மீனவர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
இதில் தலையாயப் பிரச்சனை இருநாட்டுக்கும் இடையேயான கடல் எல்லையை வகுப்பதில் உள்ளது. சர்வதேச கடற்சார் சட்டங்களுக்கு அமைய இரு நாடுகளுக்கு இடையே குறைந்தது 36 நாட்டிகல் மைல் (41.4 மைல்) இருந்தால் மட்டுமே கடல் எல்லைகளை வகுக்க முடியும். ஆனால் இந்திய இலங்கை இடையே இருப்பதோ 18 நாட்டிகல் மைல் மட்டுமே. எனவே இப்பிரச்சனைக்கு சர்வதேச கடற்சார் சட்டங்கள் வாயிலாகத் தீர்வு காண்பது கடினம் என்கிறர் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள சர்வதேச கடற்சார் அமைப்பின் முன்னாள் தலைவர் முகுந்தன்.
இந்தப் பிரச்சனையில் வேறொரு அரசியல் பரிமாணமும் உள்ளது. இந்திய இலங்கை உறவு புதிய ஆட்சியில் `நீறு பூத்த நெருப்பாக` இருக்கும் நிலையில் இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அல்லது அவர்களால் கைவிடப்பட்ட படகுகள் மூலம் இலங்கையின் வடபுலத்து மீனவர்களின் பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி அதைச் சிலர் மேலோங்கச் செய்து அதில் அரசியல் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் இருநாட்டு அரசுகளும் கவலை கொண்டுள்ளன என்பது யதார்த்தம். சர்வதேச கடல் எல்லை மிக மிக குறைந்த தூரம் இருப்பது இருநாட்டு மீனவர்களும் பாரம்பரியமாக அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்ததும் தீர்வைச் சிக்கலாக்குகிறது. இதில் எத்தரப்பு விட்டுக் கொடுப்பது என்பதிலும் இழுபறி நிலவுகிறது.
“இறையாண்மைப் பிரச்சனை“
ஒரே பிரச்சனையில் ஒரே நாட்டில் இரு நீதிமன்றங்களின் தீர்ப்பு வித்தியாசப்படும் போது பிரச்சனை மேலும் சிக்கலாகிறது. இந்தக் கடற்பரப்பில் மீன்வளம் குன்றியுள்ளதால் இலங்கை பரப்பில் நுழைவதை இந்திய மீனவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இது இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
“இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து எமது பகுதியை ஆக்கிரமிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது எமது இறையாண்மை தொடர்பான விஷயம் மட்டுமின்றி எமது மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றிய பிரச்சனையுமாகும்“ என்று இலங்கை இலங்கை வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவர் பெயரும் பதவியும் இங்கு குறிப்பிடப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக சில நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் தமது எல்லைக்குள் நுழைந்ததால் கடற்படை அவர்களைச் சிறைபிடிக்க வேண்டியதாயிற்று, எனினும் பிரச்சனை தொடருகிறது என்கிறார் அந்த அதிகாரி. இந்தியத் தரப்பு தமது மீனவர்களும் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருவதை எமது மீனவர்கள் குறிப்பாக வட பகுதி தமிழ் மீனவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறுகிறார். இதில் மீனவர்களின் ஆதரவைப் பெறுவதில் தமிழ்த் தலைவர்களும் அரசியல் செய்கின்றனர்.
முடிவில்லாத தொடர்கதையாக இந்தப் பிரச்சனை பல தசாப்தங்களாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே இது உரசலாகவே இருந்தாலும் தீர்வு காண இருதரப்பும் இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை.
படகுகளின் நிலை
எனினும் கடந்த ஆண்டு இலங்கையின் சட்டமா அதிபர் 2015 முதல் 2018 வரை தடையை மீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்த படகுகளை விடுவிக்கலாம் என்று பரிந்துரைச் செய்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றங்கள் இந்தியத் தரப்பின் படகுகளை விடுவித்தன.
இதையடுத்து இந்திய அதிகாரிகளும் சில மீனவர்களும் இலங்கைச் சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்த படகுகளை திரும்பப் பெற்றுச் சென்றனர். அவ்வகையில் பயன்படுத்த முடியாத அல்லது எடுத்து செல்வதற்கு தகுதியற்ற படகுகளை இலங்கையிலேயே விட்டுச் சென்றனர் என்று இலங்கை அரசு கூறுகிறது.
இந்தியத் தரப்பு மீனவர்கள் கூறும் கதையோ வேறு மாதிரியாகவுள்ளது. தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளில் நல்ல நிலையிலிருந்த பல படகுகளைக் காணவில்லை, பயன்படக் கூடிய வகையில் இருந்த மிகக் குறைந்த அளவிலான படகுகளும்-மாறாகப் பயன்பாட்டுக்கு உதவாத சிதிலமடைந்த ஏராளமான படகுகளே கையளிக்கபட முன்வைக்கப்பட்டன என்று தமிழக மீனவர்கள் கூறுகின்றனர். திருப்பியளிக்கப்படுவதற்கு முன்வைக்கப்படும் படகுகள் பெறுமதி உள்ளவையா அற்றவையா என்பதை யார் முடிவு செய்வது? படகின் உரிமையாளரா அல்லது நீதிமன்றமும் இலங்கை அரச அதிகாரிகளுமா?
இதுவரை வெளிப்படையாகச் சொல்லாத ஒரு விஷயத்தை இலங்கைக் கடற்படை இப்போது கூறியுள்ளது. இதையும் வழக்கம் போல அவர்கள் கூறுவதை நம்புவது கடினம். அதாவது இலங்கை எல்லைக்குள் வரும் படகுகளை மறித்த போது அந்தப் படகுகளை இந்தியத் தரப்பு கைவிட்டனர், அதைக் கடற்படை இழுத்து வந்து கிராஞ்சி மற்றும் காரைதீவு கடற்படை முகாம்களுக்கு அருகில் கட்டிவைத்தனர். காலவோட்டத்தில் அவற்றில் மழை நீர் தேங்கி நுளம்புகள் (கொசுக்கள்) உற்பத்தியாகும் இடமாக மாறியது மட்டுமன்றி பார்ப்பதற்கே அசிங்கமாக இருப்பதால் கைவிடப்பட்ட படகுகளை அப்புறப்படுத்த நீதிமன்றத்தை நாடுவது எனும் முடிவை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி கடற்படை எடுக்க வேண்டியதாயிற்று என்று அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.
நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மற்றும் கடற்தொழில் அமைச்சகத்தின் வேண்டுகோள் மற்றும் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் ஆகியவற்றை அடுத்து, கைப்பற்றப்பட்ட 94 படகுகளை ஏலம்விட ஊர்காவற்துறை நீதிமன்றம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்த மாதம் நான்காம் திகதி மன்னார் நீதிமன்றம் கைப்பற்றப்பட்ட 27 படகுகளை அழித்துவிட உத்தரவிட்டது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் படகுகளை அழிக்க உத்தரவிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தத் தீர்ப்புகளை அடுத்துக் கைப்பற்ற படகுகளை என்ன செய்வது எனும் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கைக் கடற்படை கருதியது.
`சேதாரமின்றி கையளிக்கப்பட வேண்டும்`
ஆனால் இந்த நீதிமன்றங்களின் தீர்ப்பு இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து, தமிழகத்திலும் இந்தியாவின் தேசிய மட்டத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. உடனடியாக இந்திய மீனவர்கள் ஆவேசக் குரலெழுப்பி தமது படகுகள் சேதாரமின்றி மீட்டுத்தரப்பட வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விடவோ, அழித்துவிடவோ கூடாது அவை தம்மிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கொடுக்கப்படும் அழுத்தம் புதுடில்லியில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிந்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தினால் அதன் எதிர்வினை பாரதூரமாக இருக்கும் என்பதும் இலங்கை அரசுக்குத் தெரியும். அதை அவர்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள்? இந்த விஷயத்தில் சீனாவால் இலங்கைக்கு உதவ முடியாது என்பதை இலங்கை உணர்ந்துள்ளது.
இந்தியாவுக்குச் சாதகமாக நடந்து கொண்டால், இலங்கை மீனவர்களின் எதிர்ப்பை அரசு சந்திக்க வேண்டிவரும். இது வட பகுதி மட்டுமல்ல தென்னிலங்கையிலும் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி நீதிமன்ற உத்தரவை மீறியதான பிரச்சனையையும் அரசு எதிர்கொள்ள வேண்டும். மாறாக நீதிமன்ற உத்தரவின்படி முடிவெடுத்தால் இந்தியாவின் கோபத்துக்கு இலங்கை ஆளாக வேண்டியிருக்கும்.
அதேபோல் இந்தியாவிலும் மீனவர்கள் அரசுக்கு எதிராக கோபமாக உள்ளனர்.
இந்திய அரசின் பாராமுகம்?
தமிழக மீனவர்கள் விஷயத்தில் இந்தியாவின் மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொள்கிறது, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று `உதயனிடம்` தெரிவித்தார் தமிழ்நாடு மீனவர்கள் சங்கத்தின் ஒரு தலைவரான ராமேஸ்வரத்தைச் சேர்ந்த போஸ்.
“மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்க செயல், இது இருநாட்டு அரசும் உரிய முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டிய நீண்டகாலப் பிரச்சனை“ என்றும் கூறுகிறார் போஸ்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையும்போது முன்னர் அங்குள்ள நீதிமன்றம் அவர்கள் மீது அபராதம் விதித்து படகுடன் திருப்பியனுப்புவதே முறையாக இருந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் `கடல் தாமரை` என்றொரு திட்டத்தை ஏற்படுத்த தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வழி செய்யும் என்று கூறியதை நினைவு கூர்ந்த போஸ், அந்தத் திட்டத்தில் மீனவர்கள் பிரச்சனையை இருநாட்டு அரசுகளும் இணைந்து கையாளும், மீனவர்களும் படகுகளும் உடனடியாக மீட்கப்படும், மீனவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் போன்ற அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார்.
இலங்கை அரச தரப்போ இந்திய மீனவர்களையும் படகுகளையும் கைப்பற்றுவது அரசின் நோக்கமல்ல, அதேவேளை வட பகுதி மீனவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறுகிறது.
இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விஷயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியுள்ளதாகவும் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்கிறார்.