வரவுசெலவுத்திட்ட உரை- 2021
கௌரவ சபாநாயகர் அவர்களே,
அதிமேதகு சனாதிபதி கோட்டபாய சனாதிபதி அவர்களின் அரசாங்கத்தினது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைச் சட்டகத்திற்குள் 2021 – 2023 நடுத்தர கால பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பினைத் துரிதப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தினை பலப்படுத்துகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையினை இந்த உயர் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
எமது நாடு, எத்தகைய பொருளாதார மட்டத்தில் காணப்பட்ட போதிலும், எத்தகைய சவால்களை எதிர்நோக்கிய போதிலும், நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை யாதெனில், கைத்தொழில் மயமாக்களின் மூலம் வெற்றியடைந்த உலகப் பொருளாதாரம், தொழில்நுட்பப் பொருளாதாரத்தினை நோக்கி மாற்றமடைந்துள்ளது என்பதுவாகும். விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் அபிவிருத்திக்காக பாரம்பரிய வழிமுறைகளுக்கு அப்பால் தொழில்நுட்ப ரீதியாக இத்துறைகளை ஒருங்கிணைத்து, உற்பத்தி மற்றும் வழங்கல் செயற்பாடுகளை நோக்கிச் செல்கின்ற சந்தர்ப்பமொன்றாக, கொள்கை வகுப்பாளர்கள் என்ற வகையில் நாம் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினைத் திட்டமிடுகின்ற போது நாம் கவனத்திற்கொள்ள வேண்டியது உயிரியல் பல்வகைத் தன்மையுடைய வளமான, தேசிய மரபுரிமைகளைக் கொண்ட மற்றும் கலாசார விழுமியங்களுடன் கூடிய நீண்ட வரலாற்றினைக்கொண்ட விசேட அடையாளங்களுடன் கூடிய சூழல் நட்புடைய நிலையான அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடைய நாடொன்று என்பதுடன் சமூகமொன்றுமாகும். இயற்கை வனப்பு, வனசீவராசிகள், நதிகள், ஆகியவற்றினாலும் எமது நாட்டினைப் போன்று பெருமளவிலான சமுத்திர வளங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு என்பதனால் எமது தேசிய உற்பத்தி செயற்பாடுகளை ஒப்பீட்டு ரீதியில் நன்மைதரும் வகையில் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
எமது நாட்டின் பூகோளமைய அரசியல் முக்கியத்துவத்தை பல நாடுகளும் உணர்ந்திருக்கின்ற ஒரு காலகட்டத்தினுள் நாம் இருக்கின்றோம். எமது அண்டை நாடாகிய இந்தியா அடுத்து வரக்கூடிய ஒருசில தசாப்த காலப்பகுதியில் உலகிலேயே பலம்பொருந்திய பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் என்பதுடன், இதற்கு மேலதிகமாக சீனா உள்ளிட்ட ஏனைய சில ஆசிய நாடுகளும் உலகப் பொருளாதாரத்தில் பலம்பொருந்திய ஐந்து நாடுகளுக்குள் விளங்கும் என்பதே எனது நம்பிக்கையாகும். உயர் உற்பத்தி மற்றும் வருமான வளர்ச்சியைக் கொண்டுள்ள எம்மை அண்மித்த ஆசிய சந்தை, உலக சனத்தொகையில் 60 சதவீத பொருளாதார வலயமொன்றாகும். இப் புதிய உலகப் பொருளாதாரத்தில் சம்பிரதாய மேற்குலக வல்லரசுகளும் அதேபோன்று கிழக்கில் வளர்ந்து வருகின்ற பொருளாதாரங்களினதும் கேந்திர நிலையமாக எமது நாட்டிற்குள்ள அபிவிருத்தி வாய்ப்புகளுக்காக எமது தேசிய கொள்கைகளை வகுப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் தோன்றியுள்ளதென்பதை நான் நம்புகிறேன். கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்ளையும் விமான நிலையங்ளையும் இவ் வர்த்தக தொழிற்பாட்டின் மத்திய நிலையங்களாக மாற்றிக் கொள்ளக் கூடியவாறு நாம் எமது அபிவிருத்தி உபாயமுறைகளையும் வழிமுறைகளையும் திட்டமிடுதல் வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
அதிமேதகு சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்த இரண்டு கொள்கைப் பிரகடணங்களினூடாக சுட்டிக்காட்டிய பொருளாதாரக் கொள்கை யாதெனில், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தினூடக நாட்டு மக்கள் எதிர்பார்த்த, எல்லோருக்கும் நன்மை பயக்கும் எமக்கே உரித்தான பொருளாதார அபிவிருத்தியொன்றை ஏற்படுத்துவதாகும். வருமான ஏற்றத்தாழ்வு, பிரதேச ஏற்றத்தாழ்வு அதேபோன்று நகர மற்றும் கிராமிய வேறுபாடு என்பனவற்றினை இயன்றளவில் குறைத்து அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதே இதன் கருத்தாகும். எமது சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில், கொவிட் – 19 உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்தும், அதிகரித்த மட்டத்தில் காணப்படுகின்ற தொற்றா நோய்களிலிருந்தும் மக்களைக் காப்பாற்றி தொடர்ந்தும் இலவச சுகாதார சேவையை விஸ்தரித்து, பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்குவதாகும். தேக ஆரோக்கியமுள்ள மக்கள் அதேபோன்று ஒவ்வொரு பிள்ளையும் சிறந்த பிரசை என்ற வகையில் தமது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணரக் கூடிய கல்வித் திட்டமொன்றினூடாக மனித வளங்களை உயர்ந்த மட்டத்தில் பேணிச் செல்வது மனித வள அபிவிருத்தியின் மற்றுமொரு நோக்கமாகும்.
சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார முயற்சிகளில் இளைஞர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் விளையாட்டு நேய சமூகமொன்றின் கீழ் புறக்கிருதி செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் ஆரோக்கியமான சிறுவர் மற்றும் இளைஞர்களை உருவாக்கும் வகையில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் அபிவிருத்தியின்பால் எமது முயற்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்ப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்கின்ற திறமையான மாணவர்கள் இறுதியில் தொழில் வாய்ப்பற்று காணப்படுவார்களாயின், தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு கல்வி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.
எமது சமூகத்தில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான சமூக நலன்புரி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை விடயமாகும். சுகாதாரம் கல்வி, விளையாட்டு மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பன மனிதவள அபிவிருத்தியில் ஒருங்கிணைந்த பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தேவைகளை நிறைவேற்றும் போது நவீன தொடர்பாடல்களும் தொழில் நுட்பங்களும் இன்று பிரதான உட்கட்டமைப்பு தேவைகளாக விளங்குகின்றன. குடிநீர், நீர்ப்பாசனம், வீதி, மின்சாரம், வங்கி மற்றும் பண வசதிகள் என்பன இதற்குத் தேவையான மேலதிக வசதிகளாகக் காணப்படுகின்றன. கஷ்டமான வாழ்வைக் கழிக்கும் விவசாயிகள், மீனவர்கள், பாரம்பரிய கைத்தொழில்களில் ஈடுபடுவோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், மனைப் பொருளாதாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக நிரந்தர வருமானம் இல்லாதவர்கள், பணம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய வியாபாரிகள் முதலானோரை வலுவடையச் செய்வதே அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். இவர்களிடம் மறைந்து காணப்படுகின்ற உற்பத்திக் கொள்ளளவை தேசிய உற்பத்தியின் பிரதான காரணியாக ஆக்கிக்கொள்வதன் மூலம் வறுமை நிலையிலிருந்து மீண்டு அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கு சாதகமாக அமையும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
வெறுமனே இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற பொருளாதாரமொன்றுக்குப் பதிலாக விவசாய பண்ணை உற்பத்தி மற்றும் விவசாய கைத்தொழில் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரமே மக்களின் எதிர்பார்ப்பாகும் என்பதை “கம சமக பிலிசந்தரக்” மக்களுடனான சந்திப்பின்போது நாம் விளங்கியிருக்கிறோம். இயற்கை வளங்களை அபிவிருத்திக்குப் பயன்படுத்தும் போது, அவற்றை கூருணர்வுடனும் அதேபோன்று மேலும் விருத்திசெய்யும் வண்ணமுமே பயன்படுத்தவேண்டும் என்பதே “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடணத்தை உயர் சபையில் முன்வைத்து அதிமேதகு சனாதிபதி அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு, நிலைபேறான அபிவிருத்தியின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்பட்டது.
அரசாங்கத்தின் பணிகளை நிறைவேற்றும் போது சிக்கல் நிறைந்த நிருவாக முறைக்குப் பதிலாக கீழ் மட்ட நடவடிக்கைகளுக்கு முதலிடம் வழங்குகின்ற மக்களை மையப்படுத்திய அரச சேவையொன்றின் தேவை மக்கள் சந்திப்பின் போது நாம் இணங்கண்டுள்ளோம்.
கடந்த அரசாங்கத்தினைப் போன்றல்லாது அரசாங்க சேவையை கண்டிக்காது அதனை அவமதிக்காது, வெளிப்படையாக, குறைந்த செலவிலும் வினைத்திறனுடனும் செயலாற்றுவதற்கு அரசாங்க சேவைக்குத் தேவையான சூழலை அமைக்க வேண்டியுள்ளது. தூய எண்ணத்துடன் சேவையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை நாம் கண்டித்தேயாக வேண்டும். வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்ற வழக்குகள், செயற்றிறனற்ற மற்றும் காலங்கடந்த சட்ட திட்டங்கள் மற்றும் தாபனக் கட்டமைப்பு முதலானவற்றை மறுசீரமைத்த வண்ணம் மக்களையும் அதேபோன்று வியாபாரிகளையும் ஊக்குவிக்கின்ற சூழலொன்றை அமைப்பதற்கு நாங்கள் முதலிடம் கொடுக்க வேண்டியுள்ளது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
பேரண்டப் பொருளாதாரத்தை நோக்கிய பயணம்
“சுபீட்சத்தின் நோக்கு” பேரண்டப்பொருளாதார வேலைத் திட்டத்திற்கமைய சமூகத்திலுள்ள எல்லா தரப்புகளுக்கும் நன்மை கிடைக்கக் கூடிய 6 சதவீதத்தை தாண்டிய மத்திய கால பொருளாதார வளர்ச்சியொன்றைப் பேணுவதே எமது இலக்காகும்.
விலையில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்திய வண்ணம் 5 சதவீத பணவீக்க வேகத்தை பேணிச் சென்று வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. நிலையான வட்டி மற்றும் அன்னியச் செலாவணி வீதம், வரிக் கொள்கை, வங்கி மற்றும் நிதி வசதிகள் மற்றும் நிறுவன தொழிற்பாடு மற்றும் பொருட்கள் சேவைகள் வழங்கல் ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற விதத்தில் வழிநடாத்த வேண்டியுள்ளது. தனியார் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்திய வண்ணம் உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் வசதிசெய்கின்ற கட்டமைப்பு மாற்றமொன்றைச் செய்வது வேலைத்திட்டத்தின் பிரதான உபாய வழியாக இருக்கும்.
அரசாங்கத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான தற்போதைய 9 சதவீத இடைவெளியை 4 சதவீதத்திற்குக் குறைப்பதும் தேசிய வருமானத்தில் 90 சதவீதமான அரசாங்கக் கடனை 70 சதவீதத்திற்கு குறைப்பதும், வெளிநாட்டுக் கடன் பெறுகைகள் காரணமாக கடன் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளை குறைப்பதும் கட்டாயமாக செய்ய வேண்டியுள்ளது. உற்பத்தித் தொழிற்பாடு மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்காக போதியளவில் பணம் மற்றும் கடன் வசதிகள் மக்களைச் சென்றடையக் கூடியவாறு வங்கி மற்றும் நிதி முறைமைகளை பலப்படுத்துவதும், நிதி மற்றும் திரவ நிலைமையை முகாமை செய்வது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கொள்கைகள் தொடர்பாக புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுமென நாம் நம்புகிறோம். உள்ளூர் உற்பத்தி வளங்களுக்கு பெறுமதி சேர்க்கின்ற ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஊடாக வெளிநாட்டு சம்பாத்தியத்தை அதிகரிப்பதும் இறக்குமதி மீது ஆழமாகத் தங்கியிருப்பதை குறைத்து,வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக் குறையைக் குறைத்துக் கொள்கின்றவாறு வர்த்தகம் மற்றும் உற்பத்தித் தொழிற்பாடுகளை கையாள வேண்டியுள்ளது. சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் மூலமான தேறிய இலாபத்தை அதிகரித்தல் முதலான நடவடிக்கைகளை வர்த்தக பற்றாக்குறையை முகாமை செய்வதற்கு சமாந்தரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. பரந்த கிராமிய அபிவிருத்தியூடாக வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை அதிகரித்தல் அதேபோன்று சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேமநலன் என்பவற்றை விஸ்தரிக்கும் அபிவிருத்தி பிரவேசமொன்றை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
வெளிநாட்டுக் கடன் பயன்பாடு
வெளிநாட்டுக் கடன் நிதி மூலம் வருடாந்தம் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ள போதிலும், ஐ.அ.டொ 6000 மில்லியனைவிட அதிகப் பெறுமதியைக் கொண்டுள்ள இக்கருத்திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காட்டவில்லை. கருத்திட்ட திட்டமிடல் செயன்முறையினை மற்றும் சாத்தியவள ஆய்வுகளை மேற்பார்வை செய்தபோது அந்நிகழ்ச்சித்திட்டங்கள் அரச முதலீட்டு முன்னுரிமைகளிலிருந்து விலகியிருந்தமை பிரதான குறைபாடாகக் காணப்பட்டது. கருத்திட்டச் செலவு மற்றும் அமுலாக்கத்திற்காக எடுக்கும் காலம் அதிகரித்தல் காரணமாக குறைந்த பலனே கிட்டியுள்ளது. எனவே, வெளிநாட்டுக் கடன் மற்றும் படுகடன் கடன் சேவைகள் அதிகரித்ததனால் உற்பத்தி விளைவு பெருக்கமுடைய எனினும் குறைந்த செலவுடன் மேற்கொள்ள முடியுமான கருத்திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதுடன் அரச முதலீடுகளுக்கு நிதியளிப்பதில் திறைசேரி செயற்பாட்டு நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்பட்டமை அவதானிக்கப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
இக்கடன் நிதியை “சுபீட்சத்தின் நோக்கு” சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள முன்னுரிமைகளின் அடிப்படையில் மீள் ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது மீள் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இதற்காக கொடை வழங்கும் நிறுவனங்கள் காட்டும் ஒத்துழைப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். தற்போது காணப்படும் கடன் வசதிகளுடன் கொவிட் – 19 நோய்த் தடுப்பு, குடி நீர் வழங்கல், கிராமிய பாதை அபிவிருத்தி, கிராமிய சுகாதார சேவைகளை விரிவுபடுத்தல், தாய் – சேய் போசணை மட்டத்தினை மேம்படுத்தல், மாணவர்களை தொழிற் கல்வியின்பால் ஊக்குவித்தல் என்பவற்றுக்கு நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். மேலும், பாரம்பரிய கைத்தொழில்களுக்கு புதிய பெறுமதி சேர்ப்பு, புதிய வியாபார முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக இளைஞர்களுக்கு ஆரம்ப மூலதனத்தை வழங்குதல், பண்ணைகளின் அபிவிருத்திக்காக புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்தல், புதுப்பிக்கக் கூடிய சக்தித் துறையின் கொள்ளளவினை மேம்படுத்தல், நிதி மற்றும் மூலதன சந்தையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளல் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு ஏற்கனவே செயற்படுத்தப்படுகின்ற கடன் திட்டங்களுக்கு ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கமைவாக, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை என்பவற்றுடன் உடன்பட்டவாறு வருடாந்தம் பயன்படுத்த திட்டமிடப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரம் ஏறக்கு றைய ஐ.அ.டொ 1,400 மில்லியனாகும். இதற்கு மேலதிகமாக, இரு தரப்பு அபிவிருத்தி கடன்களாக ஏறக்குறைய ஐ.அ.டொ 400 மில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இக் கருத்திட்டங்களில் பெரும்பாலானவை மிகக் குறைந்த இறக்குமதி உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளன என்ற வகையில், இவ்விடயம் வெளிநாட்டு நாணய முகாமைத்துவத்தில் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்துமென நான் நம்புகின்றேன். தொழில்நுட்ப மற்றும் விசேட தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக கடன் மூலங்களினூடாக செலவினத் தேவைகளின் 65 சதவீதத்திற்கு நாம் நிதியளிப்போம்.
சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் செலவினக் குறைப்பினை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிதியளிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் கருத்திட்ட அலுவலகங்களைத் தாபிப்பதனை வரையறுக்கும் அதேவேளை, குறித்த நிறுவனங்களின் நிகழ்ச்சித்திட்டங்களாக செயற்படுத்தப்பட வேண்டும். பல்வேறு அமைச்சுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொத்தணிகளின் முன்னுரிமைகளுக்கேற்ப வெளிநாட்டுக் கடன்கள் பெற்றுக்கொள்ளப்படும். பொது முதலீட்டு நிதியளிப்பு உபாயமானத்தின் பிரதான விடயம் யாதெனில், கிராமிய பொருளாதாரத்திற்கு வழிவகுக்கின்ற தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியினைச் செயற்படுத்துவதற்கு சாத்தியமான வகையில் உள்நாட்டு நிதியினைப் பயன்படுத்துவதாகும்.
வரிக் கொள்கை
அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டவாறு வரி செலுத்துநர்களிக்கு சிறந்த வசதியினை வழங்குவதற்கும் வரி நிர்வாகத்தினை வினைத்திறன்மிக்கதாக மாற்றும் வகையிலும் 2020 சனவரியிலிருந்து வரிக் கொள்கையினை அரசாங்கம் இலகுபடுத்தவுள்ளது. பொருளாதார மறுமலர்ச்சியின் பிரதான நோக்கம் வியாபாரங்களை மிகத் தீர்க்கமான ஸ்திரத்தன்மையுடன் பேணும் வகையில் அடுத்த 5 வருடங்களுக்கு எவ்வித மாற்றமுமின்றி நிலைத்திருக்கும் வரிக் கொள்கையொன்றாகும். எனவே, மாதமொன்றுக்கு ரூபா 25 மில்லியனுக்கு அதிக புரள்வினைக் கொண்ட இறக்குமதி மற்றும் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அல்லது வங்கித் தொழில், நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தவிர்ந்த சேவை வழங்கல் வியாபாரங்களுக்கு பெறுமதி சேர் வரியினை 8 சதவீதமாக பேணுவதற்கு நான் முன்மொழிகின்றேன். பல்வேறு நிறுவனங்களினால் வேறுபட்ட சட்டங்களின் கீழ் விதிக்கப்படுகின்ற மொத்த வரி மற்றும் அறவீடுகளின் வருமானத்தில் 50 சதவீதமாகக் காணப்படும் மதுசாரம், சீகரட்டுகள், தொலைத்தொடர்பு சூதாட்டம், மற்றும் வாகனங்கள் மீதான வரிகள் போன்ற பல்வேறு பண்டங்கள் சேவைகள் வரிகளுக்குப் பதிலாக, நிகழ்நிலை முகாமை செய்யப்படும் (online-managed) தனியான ஒற்றை விசேட பொருட்கள் மற்றும் சேவைகள் வரியினை அறிமுகப்படுத்தவதன் மூலம் வரி சேகரிப்பின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இவ்வாறான திருத்தங்களின் நோக்கம், மதுவரிக் கட்டளைச் சட்டம் போன்ற விசேட சட்ட ஏற்பாடுகளின் கீழ்வரும் நிறுவனங்களை சட்டவிரோத மதுபான மற்றும் சிகரட்டுகளின் விற்பனை மூலம் ஏற்படும் வருமான இழப்பினைத் தடுப்பதற்கான ஒழுங்குறுத்துகை விடயங்களில் அதிக கவனம்செலுத்தி அரசாங்கத்துக்கு உதவுமாறு பணிப்பதாகும்.
2020 சனவரி 01 ஆந் திகதியிலிருந்து இலகுபடுத்தப்பட்ட வரி முறைமையொன்று அமுலில் இருப்பதுடன், நிகழ்நிலை வரி நிருவாகத்திற்கு ஏற்பாடுசெய்யும் வகையில் வரிச் சட்டங்களைத் திருத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பொருளாதார சேவைக் கட்டணம் மற்றும் தேசக் கட்டுமான வரி போன்ற வரிகளின் நிலுவைகளை வரிசெலுத்துநர்களின் நிதி நிலைமைக்கேற்ப உடன்பட்டவாறு சலுகைக் கட்டணத் திட்டமொன்றின் கீழ் முழுமையாகச் செலுத்தித் தீர்ப்பதற்கு முன்மொழியப்படுககின்றது.
மேலும், 2021 ஏப்ரில் 21 ஆந் திகதியிலிருந்து கம்பனிகள் அனைத்தும் அவற்றினது வரிகளை இலத்திரனியல் கோவை (E-Filing) முறையில் சமர்ப்பித்தல் அத்துடன் வரி மற்றும் வரி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் போது, வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN) பயன்படுத்தல் என்பவற்றைக் கட்டாயமாக்கும் வகையில் வரிச் சட்டங்கள் திருத்தப்படும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வரிகளைக் கணக்கீடு செய்கின்ற போது எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்புகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கடன்கள் என்பவற்றுக்கான ஏற்பாடுகளுடன் சிறந்த வெளிப்படையான முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்ப்புகள் மற்றும் வரி நிருவாக தீர்மானங்களுக்கு எதிரான சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகளின் தீர்ப்புகளைச் செயற்படுத்துவதற்கு குறிப்பீடு செய்யப்பட்ட கால வரையறையினைத் தாபித்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். வரி மேன்முறையீட்டினைத் துரிதமாக தீர்ப்பதற்கு விஷேட வரி மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றினை உருவாக்குவதற்கு முன்மொழிகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
சம்பளங்கள், வாடகைகள், பங்கிலாபங்கள் அல்லது ஏனைய வருமான மூலங்களினூடாக மாதமொன்றுக்கு 250,000 ரூபாவிற்கு அதிகமாக உழைப்பவர்களுக்கு ஆள்சார் வருமான வரி ஏற்புடையதாகும். வாடகை, வட்டி மற்றும் பங்கிலாபங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி மற்றும் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) என்பன ஒழிக்கப்பட்டுள்ளன. சம்பளங்கள் அல்லது வட்டிகள் போன்ற வருமான மூலங்களிலிருந்து மாதமொன்றுக்கு 250,000 ரூபாவினை விஞ்சிய வருமானம் பெறுநர்கள் தமது நிலுவைத் தொகையினைச் செலுத்தும்படி அவர்கள் தொழிலிடங்களுக்கு அல்லது வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க முடியுமென்பதுடன் வருட இறுதியில் நிதி வருமான அறிக்கையொன்றின் மூலம் தமது வரிப் பொறுப்புக்களை பரிசீலனை செய்வதற்கு இலகுவான முறைமையொன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த ஐந்து வருடங்களின் போது, விவசாயத்துறை, மீன்பிடி மற்றும் விலங்கு வேளாண்மை உள்ளடங்களான பண்ணையிலிருந்து சம்பாதிக்கும் இலாபம் மற்றும் வருமானம் அடுத்த 5 வருடங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சம்பாத்தியங்கள் அத்துடன் நாட்டிலோ அல்லது நாட்டுக்கு வெளியிலோ வதியும் போது சம்பாதிக்கின்ற வெளிநாட்டு வருமானங்கள் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்
அரசாங்கத்தினால் பெறப்படும் நேரடி வரிகளில், 80 சதவீதமானவை உயர் வருமான மற்றும் பெரியளவிலான வியாபாரங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன. 2013/2014 இல் நான் அறிமுகப்படுத்திய வருமான நிருவாக மற்றும் முகாமைத்துவ முறைமை (RAMIS) திட்டத்திற்கு அவசியமான சட்ட ரீதியான மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் முகாமைத்துவ நோக்கங்களுக்காக பெரிய வரிசெலுத்துநர் அலகின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் நேரடிப் பொறுப்பின் கீழ் வரும் வரி செலுத்தநர்களை இலக்காகக் கொண்ட வரி சேகரிப்பு நிருவாகத்தினை வலுப்படுத்துவது அவசியமாகும். இலகுபடுத்தப்பட்ட வரி முறைமைப் பின்னணியில் சுய இணக்கப்பாட்டினை அதிகரிப்பதன் அவசியம், வரிக் கணக்காய்வினை வலுப்படுத்தல் மற்றும் இலகுபடுத்தப்பட்ட வரி முறைமையொன்றுக்குள் வரி வருமானத்தினை அதிகரித்தல் என்பவற்றுக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் அவசியமான மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். வரி செலுத்துநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியார் வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காய்வாளர்கள் மோசடியான வரி அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் சான்றுப்படுத்தலை தடுக்கின்ற சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
சேமிப்புகள் மற்றும் முதலீடுகள்
மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்கான எமது முயற்சியுடன் விசேட சேமிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கு நாம் தலைமை வகித்தல் வேண்டும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான சமுர்த்தி மற்றும் ஓய்வூதியங்களின் பெறுகைகளுக்காக வருடந் தோறும் ரூபா 50 மில்லியனுக்கு அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. எவ்வாறாயினும், வயோதிப காலத்தில் அல்லது விசேட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு போதிய வருமானத்தினை உறுதிப்படுத்தும் சேமிப்பு காணப்படவில்லை எனவே, ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிக்கும் சமுர்த்தி ஆயுள் சேமிப்பு கணக்கொன்றினைத் திறப்பதற்கும் சமுர்த்திக் கொடுப்பனவினை சமுர்த்தி வங்கியினால் அக்கணக்கில் வைப்புச் செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன். நிலையான சேமிப்பு மீதிகளை தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்பாகவும் பிணையாகவும் இடுவதன் மூலம் சமுர்த்தி பயனாளிகளின் சேமிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய சேமிப்புகள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பாதுகாப்பான முதலீடு என்பதனை உறுதிப்படுத்துவதற்கு திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய முதலீடுகளின் வட்டி வருமானம் அனைத்தினையும் வரிகளிலிருந்து விடுவிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். சமுர்த்தி வங்கிகளினால் அரச வங்கிகளில் இடப்பட்ட வைப்புகளில் 90 சதவீதத்தினைப் பயன்படுத்தி சமுர்த்தி பயனாளிகளின் வீட்டுப் பொருளாதாரம் மற்றும் தொழில்முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் 7 சதவீத வருடாந்த வட்டியில் புதிய சமுர்த்தி தொழில்முயற்சி கடன் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
நலன்புரிச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டவாறு அச் சங்கங்களின் வட்டி வருமானம் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
தனியார் சேமிப்புகளை ஊக்குவிப்பதற்கு, மருத்துவ காப்புறுதி, வீடமைப்பு கடன்களுக்கான வட்டி, அரசாங்க பிணையங்களில் முதலீடு மற்றும் மாதத்திற்கு ரூபா 100,000 வரை செலவிடும் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் பங்குகள் என்பவற்றை ஆள்சார் வருமான வரி கணிப்பீட்டில் கழிப்பனவு செய்யமுடியுமான செலவினங்களாகக் கருதுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
இலங்கையில் தங்கியிருந்து சேவையாற்றுகின்ற வெளிநாட்டவர்கள் இலங்கையில் சம்பாதிக்கும் அந்நியச்செலாவணி அல்லது வெளிநாடுகளிலுள்ள தமது சம்பாத்தியம் அல்லது இலங்கைக்கு வெளியே வங்கிக் கடன்களின் மூலம் சொகுசு தொடர்மாடி வீடுகளை கொள்வனவு செய்வதற்கு வசதியளிப்பதற்கு முன்மொழிகின்றேன்.
பிணையங்கள் மற்றும் பரிவர்த்தணை ஆணைக்குழுவினால் ஒழுங்குறுத்தப்படும் இலங்கை மெய்ச் சொத்து முதலீட்டு நம்பிக்கைப் பொறுப்பினூடாக (SLREIT) வீடமைப்புச் சந்தையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு, அத்தகைய முதலீடுகளை மூலதன ஈட்டு வரியிலிருந்து விலக்களிப்பதற்கும், பங்கிலாபங்களை வருமான வரியிலிருந்து விடுவிப்பதற்கும் முத்திரைத் தீர்வையினை 0.75 சதவீதமாகக் குறைப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் உள்ளூர்க் கம்பனிகளின் பிரவேசத்தினை ஊக்குவிக்கும் வகையில், 2021. டிசம்பர் 31 இற்கு முன்னர் பட்டியலிடப்படுகின்ற கம்பனிகளுக்காக 2021/2022 வருடங்களுக்காக வரிச் சலுகையினை 50 சதவீதமாக வழங்குவதற்கும் அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கான நிறுவன வரி வீதத்தினை 14 சதவீதமாக பேணுவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
ஆதனமொன்றின் விற்பனை விலை அல்லது மதிப்பிடப்பட்ட பெறுமதி இரண்டிலும் பெறுமதி கூடியதன் மீதான வரியாக மூலதன ஈட்டு வரியினை இலகுபடுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். வெளிநாட்டுக் கம்பனிகளின் பங்கிலாபங்கள் அவற்றினது வியாபாரங்களை விரிவாக்குதல், நிதி அல்லது பங்குச்சந்தை அல்லது இலங்கை சர்வதேச இறைமை முறிகள் என்பவற்றில் முதலீடு செய்யப்படுமாயின், அவற்றின் பங்கிலாபங்கள் மீதான வரியினை மூன்று வருடங்களுக்கு குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஆகக் குறைந்தது ஐ.அ.டொ 100 மில்லியன் பெறுமதியான இலங்கை சர்வதேச இறைமை முறிகளை உள்நாட்டு வணிக வங்கிகள் கொள்வனவு செய்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல்களின் கீழ் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட ஏற்பாடுகளை மூன்று வருடங்களுக்கு நிறுத்திவைப்பதற்கும் குறித்த முதலீட்டின் மூலதன இலாபங்கள் மற்றும் வட்டி வருமானத்தினை வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
ஏற்றுமதிக் கைத்தொழில்கள், பாற்பண்ணை, ஆடை, சுற்றுலா, விவசாய உற்பத்திகள், செயன்முறைப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளினூடாக பொருளாதாரத்தின் கட்டமைப்பு மாற்றங்களுக்கு பங்களிக்கின்ற ஐ.அ.டொ 10 மில்லியனை விஞ்சுகின்ற முதலீடுகளுக்கு உபாய அபிவிருத்திச் சட்டங்களின் கீழ் ஆகக் கூடியது 10 வருடங்கள் வரை சலுகை வழங்கப்படும்.
சர்வதேச வர்த்தகத்தில் மொத்த பொருட்கள் பரிமாற்றுகை மத்திய நிலையமாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையினை ஊக்குவிக்கும் வகையில் சுங்க பிணைக் குதங்கள் மீதான முதலீடுகளை ஊக்குவிப்பதனுடன் குறித்த பிணைக் குதங்கள் மீதான வாடகைக் கட்டணங்கள் மற்றும் அனைத்து வரிகளிலிருந்தும் அத்தகைய முதலீடுகள் விலக்களிக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு
நமது முப்படை வீரர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் ஒரு இடைக்காலத் திட்டம் தயாரித்தல் தற்போது நடந்துவருகிறது. இந்த நடுத்தர கால முதலீடு நாட்டின் வளத் தடைகள் மற்றும் நமது முன்னுரிமைகள் ஆகியவற்றைக் கண்டறிவதன் மூலம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதிலும், சர்வதேச சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கான மையமாக மாறிவரும் நமது நாட்டின் அச்சுறுத்தலை நீக்குவதிலும், பொருட்களின் கடத்தலைக் கட்டுப்படுத்துதல்; மீன்பிடி வளங்கள் மற்றும் மீன்வள சமூகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குதல் மற்றும் இந்து சமுத்திரத்தில் எமது பணிகளைச் செய்வதற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை கடற்படையை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையினர் அனர்த்த முகாமைத்துவம் உட்பட அவர்களால் ஆற்றப்பட்ட பல பணிகள் தொடர்பில் அவர்களின் நீண்டகால உள்கட்டமைப்பு தேவைகளை நாங்கள் கவனத்திற்கொள்ள வேண்டியிருந்தது. நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டமிடல் கட்டமைப்பில் அடையாளம் காணப்பட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முப்படையினருக்கு ரூபா 20,000 மில்லியனை மேலதிக ஏற்பாடுகளாக ஒதுக்குவதற்கு முன்மொழிகிறேன்.
முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு செயலணி சேவைகள், ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள், மரணித்த இராணுவ வீர்ர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் தங்கியுள்ளவர்களுக்கு இராணுவ சேவை அதிகார சபை முன்னெடுத்துள்ள அங்கவீன இராணுவ வீர்ர்களுக்கு ஆதரவு உபகரணங்களை வழங்குதல், வீட்டுக்கடன் கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்குவதற்காக ரூபா 750 மில்லியன்களை ஒதுக்குவதற்கு முன்மொழிகிறேன்.
பொது மக்கள் பாதுகாப்பு
பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொலிஸ் சேவையை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது. சகல பிரசைகளுக்கும் அச்சமும் சந்தேகமுமின்றி சுதந்திரமாக வாழுவதற்கு தேவையான சூழ்லை உறுதிப்படுத்துதல் வேண்டும்.போதைப் பொருள் பாவணையைக் கட்டுப்படுத்துதல், வாகனம் மற்றும் வீதி சட்டங்களை முறையாக ஒழுங்கு முறைப்படுத்துதல், சுற்றுலா பொலிஸ் சேவையை பலப்படுத்துதல் அதே போன்று கொள்ளையடித்தல் குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக விசேட பயிற்சியை வழங்குதல்,தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மக்கள் பாதுகாப்பிற்கு விசேட பொலிஸ் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன். பொது மக்கள் பாதுகாப்புக்காக அடையாளங் காணப்பட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீட்டினை வழங்குவதற்கு முன்மொழிகிறேன்.
தொழில்நுட்ப உட்கட்டமைப்பு
அரசாங்க பொறிமுறைகள், சந்தை கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள், வினைத்திறன்மிக்க மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குவதற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்கள் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளார். சர்வதேச ஈ-வர்த்தகம் மற்றும் ஈ-கட்டண முறை மற்றும் அதிவேக தரவு பரிமாற்ற முறை மற்றும் தொடர்புடைய நடமாடும் வலையமைப்பு முறைகளை நிறுவுவதற்கு நாங்கள் உதவுவோம்.
தரவு பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்து உரிமைகள் தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை தாபிப்பது அவசியமானதாகும். இதன் நோக்கம் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய பொருளாதாரத்தின் அறிவு மற்றும் தொழில்துறை சேவைகளுக்கான பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி, தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்முயற்சியாளர் பொருளாதாரமாக மாற்றுவதே ஆகும். எனவே, தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்துவதற்காக ரூபா 8,000 மில்லியன் விசேட ஒதுக்கீடு ஒன்றை நான் முன்மொழிகிறேன்.
கிராமத்துக்கு தொலைத்தொடர்பு (Connect Sri Lanka)
தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் மற்றும் டிஜிற்றல் மூலம் உள்வாங்கப்பட்ட இலங்கையை உருவாக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப “கமட சன்னிவேதனய” (கிராமத்துக்கு தொலைத்தொடர்பு) நிகழ்ச்சித்திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் 4ஜீ / பைபர் ப்ரோட்பேன்ட் செயற்பரப்பினை நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்படும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு 2021–2022 காலப்பகுதியில் தொலைத்தொடர்பு அபிவிருத்தி நிதியத்திலிருந்து ரூபா 15,000 மில்லியன் முதலீடுசெய்யப்படவுள்ளது.
இதனூடாக நாடு முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடமாடும் மற்றும் நிலையான ப்ரோட்பேன்ட் சேவைகளின் கிடைப்பனவு உறுதிப்படுத்தப்படுவதுடன் இணைப்பை வழங்குவதற்காக தொலைபேசி சேவை வழங்குநர்களுக்குத் தேவையான தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் பைபர் பொருத்துகள் உள்ளடங்களான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்நுட்ப சேவைகளுக்கான தொலைபேசி தொலைத்தொடர்பு கோபுரங்கள், மூலப்பொருட்கள், உள்ளுர் உற்பத்தி மற்றும் உழைப்புகளை ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இத்தொடர்பாடல் வலையமைப்புக்கள் சுற்றாடலுக்கு குறைந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவதற்காக இனங்காணப்பட்ட அரசாங்கக் காணிகள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்துகை ஆணைக்குழுக்கு வழங்கப்படும். அதேபோன்று தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்துகை ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் இணைந்து காணப்படுகின்ற வளங்களை உச்சமட்டத்தில் பயன்படுத்தும் வகையில் செயற்படும். அதற்காக 2021.01.01 ஆந் திகதி தொடக்கம் 5 வருட சலுகைக் காலம் வழங்கப்படும். நிர்மாணம் மற்றும் பொருத்தல் பணிகளுக்கான மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு உள்ளூர்க் தொழிலாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். இம்முதலீட்டுக்காக தொலைத்தொடர்பு அபிவிருத்தி அறவீட்டில் 50 சதவீதத்தை ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
தொழில்நுட்ப பூங்காக்கள்
தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்தல் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் அறிவு மற்றும் தொழில்சார் சேவைகளுக்கான தேவைகள் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப தொழில்முயற்சி பொருளாதாரமொன்றை அடுத்த 2 வருட காலப்பகுதிக்குள் ஏற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் அவற்றை மையமாகக் கொண்ட முதலீடுகள் மற்றும் அதனுடன் சார்ந்த சேவைத் தொழில்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற இம் மாற்றத்தினூடாக இளைஞர் யுவதிகளுக்கு உயர் வருமானத்தை சம்பாதிக்கக் கூடிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்காக முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க முடியுமான 5 தொழில்நுட்ப பூங்காக்களை காலி, குருநாகல், அநுராதபுரம், கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நிறுவுவதற்கும் முன்மொழிகிறேன். இத்தொழில்நுட்ப பூக்காக்களை அதிவேகப் பாதை முறைமையுடனும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுடனும் இணைக்கின்றவாறு அவற்றை சுற்றாடல்நேய நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு ரூபா 10,000 பில்லியனை ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.
மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டிற்கு முன்னர் துறைமுக மற்றும் விமானச்சேவை தொழில்நுட்ப பொறியியல் பாடங்களைப் போதிக்கின்ற புதிய பல்கலைக்கழகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு அதிமேதகு சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொதுச் சுகாதாரத்தில் முதலீடு
பொதுச் சுகாதாரத்தில் முதலீடானது முன்னொரு போதும் இல்லாதவாறு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் அதேபோன்று பல நாடுகள் எதிர்வுகூறியவாறு கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது இன்று யதார்த்தமாகியுள்ளது.
உலகில் இன்று 50 மில்லியனுக்கு அதிகமான கொவிட் தொற்றாளர்கள் காணப்படுவதுடன் மரணங்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தினைத் தாண்டுயுள்ளது. பல்வேறு நாடுகளில் இரண்டாவது, மூன்றாவது கட்டத்தினை இந்நோய் அடைந்துள்ளது என்பதுடன் அங்கு முதற் கட்டத்தினை விட விரைவாக நோய் பரவும் ஆபத்து காணப்படுகின்றது.
இந்த யதார்த்த சூழ்நிலையில், மக்கள் மைய சுகாதார சேவையினை வழங்குவதற்கான மனித வளங்களுடன் கூடிய தாய்சேய் சிகிச்சை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் முதியோர் சேவை நிலையங்கள், ஆய்வுகூட சேவைகள் வைத்தியசாலை ஆராய்ச்சி நிறுவகங்கள் என்பவற்றை விரிவுபடுத்துவதற்கு ரூபா 10,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். கொவிட் உள்ளடங்களான தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு உதவ புதிய காப்புறுதித் திட்டமொன்றினை உருவாக்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
உத்தேச காப்புறுதி நிதியத்திற்காக 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வியாபாரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிடமிருந்து அவற்றின் புரள்வில் 0.25 சதவீதத்தினை பங்களிப்பாகப் பெறுவதற்கு நான் முன்மொழிகின்றேன். அனைத்து அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்கு சமாந்தரமாக அரசாங்கத்தின் உதவியுடன் கொவிட் காப்புறுதித் திட்டமொன்றினைச் செயற்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
மருந்து உற்பத்தி
எமது நாட்டின் இலவச சுகாதார சேவைக்காக மருந்து இறக்குமதிக்காக மாத்திரம் சுமார் ஐ.அ.டொ 550 மில்லியன் தொகை வருடாந்தம் செலவாகின்றது. அத்தியவசிய மருந்து உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்காக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிப்பதற்கு வங்கி மற்றும் நிதி வசதிகளை திறைசேரி பிணையின் அடிப்டையில் வழங்குவதற்கு முன்மொழிகிறேன். அதேபோன்று உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களுக்கு நவீன முதலீட்டு வலயமொன்றை உபாய முதலீட்டுச் சட்டத்தின் கீழ் ஆரம்பிப்பதற்கு முன்மொழிகிறேன்.
குழந்தைகளினதும் கர்ப்பிணித் தாய்மார்களினதும் போசாக்கை விருத்தி செய்தல்.
எமது நாட்டில் பிள்ளைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிறைவான போசாக்கு உணவாக வழங்கப்படுகின்ற திரிபோசாவை தயாரிப்பதற்கு சோளம், சோயா, பயறு போன்ற தானிய வகைகள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் அந்தத் தானிய உற்பத்தி போதுமான அளவில் கிடைக்காததன் காரணமாக தேவையான பிள்ளைகள் மற்றும் தாய்மார்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களுக்கு திரிப்போசா விநியோகிக்கப்படுகின்றது. அதனால் அந்த மூலப்பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் திரிபோசா உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ரூபா 1500 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும். பெரும் போகத்தில் தானிய விளைச்சலை பெறுவதோடு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்துடன் பிள்ளைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தொடர்ச்சியாக உரிய திரிபோசா உணவை தொடர்ச்சியாக வழங்குவதற்கு மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்.
தொலைக் கல்வி
ஈ – தக்ஷலா கற்றல் முறைமையினை இற்றைப்படுத்துவதற்கும் மாகாண தகவல் தொழில்நுட்ப கல்வி நிலையங்களை வலுப்படுத்துவதற்கும் பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகளை வழங்குவதனை விரிவாக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. எனவே, கற்றல் முறைகளை பாடசாலைகளில் உரியமுறையில் தாபிக்கப்பட வேண்டியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்களைக் குறைத்தல் மற்றும் கொவிட் தொற்று நோய் பரவல் காலத்தில் பாடசாலைக் கல்வியினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகளை வழங்குவதன் மூலம் “குரு கெதர” கல்வி அலை வரிசையினால் அனைத்து மாணவர்களையும் பயனடையச்செய்ய முடியும். இந்நோக்கத்திற்காக ரூபா 4000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். கல்வி மறுசீரமைப்பின் கீழ் சமகாலத் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி, பரீட்சை நடைமுறைகள் மற்றும் சகல கல்வி நிறுவனங்களையும் தேசிய கல்விக் கொள்கையினூடாக ஒழுங்கு முறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற் கல்விக்கான வாய்ப்புகள்
பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் அதேவேளைஇளைஞர்களை கவரும் வகையிலான தொழிற் கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றாகும். தற்போது காணப்படும் தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளல், பொருத்தமான நிறுவகங்களை நவீன மயப்படுத்தல் “One TVET” எண்ணக்கருவின் கீழ் காணப்படும் தொழில்நுட்பக் கல்லூரிகளை பட்டப் படிப்புச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களாக மாற்றுதல் மற்றும் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் நாடு முழுவதுமான வலையமைப்பை வலுப்படுத்தல் என்பன எமது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் உள்ளனவாகும். அதேபோன்று தொழில்நுட்ப அறிவு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப திறன்கள், ஏனைய மொழிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆற்றல்களுடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன் தொழில் முயற்சியாண்மையுடன் தொழிற் கல்வியினை ஒருங்கிணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கல்வி நிறுவகங்களுக்கு வருடாந்தம் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை 100,000 இலிருந்து 200,000 ஆக அதிகரிப்பதற்கும் தனியார் துறையின் கொள்ளளவினை 50,000 மாணவர்களாக ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் செயலாற்றுகை, ஆசிரியர் பயிற்சி, தொழில்நுட்ப உபகரணங்கள், கட்டிட பராமரிப்பு மற்றும் நவீன மயப்படுத்தல் ஆகியவற்றை மதிப்பீடு செய்து அவற்றின் செயலாற்றுகையினை அடிப்டையாகக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய நான் முன்மொழிகின்றேன்.
தாதி மற்றும் பராமரிப்புச் சேவை தொழில் கல்வியை விரிவுபடுத்துவதற்காக தாதியர் பாடசாலையை பட்டப்படிப்பு வழங்குகின்ற கல்வி நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கு நான் முன்மொழிகிறேன்.
தொழிற்கல்வியினைத் தெரிவு செய்து தமது பாடநெறியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு, சொந்த தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான மூலதனமாக 4 சதவீத வட்டி வீதத்தில் 500,000 ரூபாவினைக் கடனாக வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். கடன் மற்றும் வட்டியினைச் செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலம் வழங்கப்படுவதுடன் கடனை மீளச் செலுத்துவதற்கு 4 வருடங்கள் மேலதிகமாக வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக இத்தொழில் முயற்சியாளர்கள் குறைந்த கட்டணமான ரூபா 12,000 இனை வட்டியுடன் தவணைக் கொடுப்பனவாக செலுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுவர். குறித்த நிதி உதவி அங்கீகரிக்கப்பட்ட வியாபாரங்களில் முதலீடு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையில் பின்னூட்டல் மற்றும் விரிவாக்கல் சேவைகளுக்காக 0.25 சதவீதம் வருடாந்த அர்ப்பணிப்புக் கட்டணமாக அறவிடப்படும். இந்த தொழில் முயற்சிகளுக்கு 5 வருடங்களுக்கு வரி விடுவிப்பினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அத்தகைய ஆரம்ப மூலதனம் மற்றும் நிதிச் செலவுகளை வரிக் கணிப்பீட்டின் போது கழிப்பனவுச் செலவினமாகக் கருதுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
“One TVET” எண்ணக்கருவின் கீழ் தர நிர்ணயம் செய்யப்படும் தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பினை மாணவர் அனுமதியினை 50,000 இனால் அதிகரிப்பதன் மூலம் ஊக்குவிப்பதற்கு குறித்த நிறுவனங்கள் தமது மாணவர் அனுமதியினை இரட்டிப்பாக அதிகரிக்குமாயின் அவற்றினது வருமானத்திற்கு ஐந்து வருடங்களுக்கு வரி விடுமுறை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். அதேபோன்று, சுற்றுலா, சுகாதாரம், நிர்மாணம், விவசாயம் மற்றும் விலங்கு வேளாண்மை போன்ற துறைகளில் விசேட நிபுணத்துவம் கொண்ட இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
பல்கலைக்கழக வசதிகளை விரிவுபடுத்தல்
தேசிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ, பொறியியல், தொழில்நுட்ப, சட்ட, வர்த்தக மற்றும் வியாபார முகாமைத்துவம் போன்ற பாடங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிணையாக தொழில் வாய்ப்புகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியுமான விசேட பாடங்களை இலக்காகக் கொண்ட வதிவிடமல்லாத நகர பல் கலைக்ககழகங்களை மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்டையில் தாபிப்பதற்கு முன்மொழிகிறேன். இதன் ஆரம்பமாக களுத்துறை , அம்பாறை , புத்தளம், நுவரெலியா மாவட்டங்களில் தற்போது காணப்படுகின்ற தொழிற் கல்வி அல்லது ஏனைய அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்கு முன்மொழிகின்றேன். இதற்கான விசேட ஏற்பாடு ரூபா 1000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன் மொழிகிறேன்.
விளையாட்டு
கிராமிய மட்டத்திலும் போன்று தேசிய மட்டத்திலும் பாடசாலை மாணவர்களினதும் இளைஞர் யுவதிகளினதும் பங்குபற்றுதலினை விரிவுபடுத்துவதன் மூலம் சமூக விரோத செயற்பாடுகளிலிருந்து அவர்களைத் தடுத்து கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அடிப்படை புறக்கிருதி செயற்பாடுகள் என்ற வகையில் விளையாட்டு அபிவிருத்தியை தேசிய முதலீடாக அரசாங்கம் கருதுகிறது. விளையாட்டு பாடசாலை போன்று கலாசார நிலையங்களுடன் இணைந்த இளைஞர் மக்கள் சமூக நிலையங்கள் மூலம் இளைஞர்களின் கவர்ச்சிகரமான விளையாட்டை புறக்கிருதி செயற்பாடுகளுடன் இணைப்பதற்கு செயற்கையான ஓடு தடங்களைக் கொண்ட 10 விளையாட்டு பாடசாலைகள் மேம்படுத்தப்படும். 2032 ஒலிம்பிக் விளையாட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுக்கு பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் 2025 ஆம் ஆண்டளவில் ஐ.அ.டொலர் 1000 மில்லியன் பெறுமதியைக் கொண்ட விளையாட்டுப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் 2021 – 2024 நடுத்தரகால முதலீட்டின் ஆரம்ப முதலீடாக ரூபா 200 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன். குருநாகல், யாழ்ப்பாணம், ரொரின்டன், போகம்பர மற்றும் பியகம விளையாட்டு அரங்களில் செயற்கையான ஓடு தளத்தை நிர்மாணிபதற்கும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்காக தகவல் தொழில் நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நவீன விளையாட்டு நகரமொன்றை சூரியவெவ பிரதேசத்தில் நிர்மாணிப்பதும் இந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
நடைப் பயிற்சித் தடங்களும் பொது வசதிகளும்
உயிரியல் பல்வகைத் தன்மை கொண்ட பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு சூழல் நட்பு, சமுதாய தேவைப்பாடுகள் மற்றும் ஆரோக்கியமான வெளியரங்க பொழுதுபோக்கு சூழலினை உருவாக்குதவதுடன் நகர நடை பாதைகள் மற்றும் அதனுடன் இணைந்த நகர வசதியேற்பாடுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு முழுவதிலுமுள்ள மாநகர மற்றும் நகர சபை எல்லைக்குள் நகர சூழலில் 25 சதவீத அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ரூபா 2,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
சுற்றுலாத் துறை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலம் வீழ்ச்சியடைந்த சுற்றுலா தொழில் மீண்டும் தலை தூக்குவதற்கு முன்னர் கொவிட் உலகளாவிய தொற்று நோய் நிலைமையில் பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கின்றது. பாராட்டக் கூடிய விதத்தில் பல் வகைப் படுத்தப்பட்டுள்ள எமது நாட்டின் சுற்றுலா கைத்தொழில் மற்றும் உள்ளாசப் பயணிகளின் மனதைக் கவரும் இடங்களை இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாத்து சாதார நிலையில் மேம்படுத்துவதற்கு நாம் முறைமையொன்றை தயாரிக்க வேண்டியுள்ளது. அதற்காக சிறுதுகாலம் சென்றபோதிலும் சுற்றுலா கைத்தொழில் ஐ.அ.டொலர் 10 மில்லியனை விஞ்சுகின்ற துறையாக விருத்தி செய்வதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. எமது நாட்டவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்காக செலவழித்துள்ள ஐ.அ.டொ. 1500 மில்லியனுக்குக் கிட்டிய அந்நியச் செலாவணியை உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கையும் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் விருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாக் கைத்தொழிலினை குறுகிய காலத்தில் ஓரளவிற்கு விருத்தி செய்ய முடியும். அதனால் இலங்கை மத்திய வங்கியின் மீள் நிதியிடல் வசதியின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் வசதியின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரணம் மற்றும் கடன் அறவீட்டை 2021 செப்ரெப்பர் 30 ஆந் திகதி வரை நீடிப்பதற்கு முன்மொழிகிறேன். அதற்காக நூற்றுக்கு 50 வீத திறைசேரி பிணையை தொடர்புடைய வங்கிகளுக்கு வழங்குவதற்கு முன்மொழிகின்றேன். சுற்றுலா தொழிற்றுறை நடவடிக்கைகளில் உள்ளுராட்சி நிறுவனங்களினால் அறவிடுகின்ற வரி மற்றும் கட்டணங்களை இலகுபடுத்தி அதிகபட்சத் தொகைக்கு உட்படுத்தி தேவையான திருத்தங்களைச் செய்வதற்கும் முன்மொழிகிறேன்.
தொல்பொருள் மற்றும் கலாசார மரபுரிமைகள்
தொல்பொருள் மரபுரிமைகளையும் கலாசார ரீதியான பரம்பரையையும் பாதுகாப்பதற்காகதொடர்புடைய நிறுவனங்களுடன் சனாதிபதி செயலணி ஒன்றிணைந்து தொல்பொருள் மரபுரிமைகளின் முகாமைத்துவத்திற்குத் தேவையான வலுவான சட்ட வரைசட்டகமொன்றை தயாரிப்பதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. தொல்பொருள் மற்றும் கலாசார நிலையத்தின் புனர் நிர்மாண நடவடிக்கைகளுக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக கஷ்டப்பிரதேசங்களில் அமைந்துள்ள விகாரைகளுக்குத் தேவையான அடிப் டை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூபா 50 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
எமது நாட்டில் ஏறக்குறைய 1.5 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் அவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த வருமானமுடைய கிராமிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களாவர். 2010 இலிருந்து 2014 வரை, கிராமியப் பிரதேசங்களில் குறை வருமானம் பெறுநர்களை உயர் வருமானம் பெறுநர்களாக மாற்றுவதற்கான வழிமுறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் திறன்மிக்க பணியாளர்களுக்கு நான் வசதி ஏற்பாடுகளை செய்துள்ளோம். அவர்களது சம்பாத்தியத்தினை ஐ.அ.டொ. 4 பில்லியனிலிருந்து ஐ.அ.டொ 7 பில்லியனாக அதிகரிப்பதற்கு எமக்கு முடியுமாகவிருந்த்து. 2015 இலிருந்து 2019 வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பாத்தியம் ஐ.அ.டொ. 6.5 பில்லியனுக்குக் குறைவாக வீழ்ச்சியடைந்தது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
இந் நிலைமையினை மாற்றி அமைப்பதற்காக திறன் மிக்க, பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கும் தொழிற் சந்தையினை பல்வகைப்படுத்துவதற்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றை வெ ளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துடன் ஒன்றிணைத்து நிகழ்ச்சிகளுக்கு ஈடுபடுத்தப்படும்.வெ ளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு 2013 இல் என்னால் முன்வைத்த யோசனைகளும் நடைமுறைப்படுத்தப்படும். வெ ளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துவதற்கும் முன்மொழிகிறேன்.
கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்து இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்திருக்கும் 126 நாடுகளில் தொழில்புரிகின்ற சுமார் 45,000 பேரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சுகாதார வசதிகளுக்கேற்ப வருகை தர எதிர்பார்த்திருப்பவர்களுக்கு சிறந்த வசதி வழங்கப்படும்.
விவசாயம்
எதிர்வரும் 2020 – 2021 பெரும் போகத்திற்கு இயற்கையின் அருட்கொடையாக தற்பொழுது நாடு பூராகவும் பருவப்பெயர்ச்சி மழை கிடைத்துவருகின்றது. பெரும்போகம் என்பது எமது விவசாயக் கலாசாரத்தில் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் பயிர் செய்கின்ற பிரதான உற்பத்திக் காலத்தினைக் குறிக்கின்றது. “பத்த புலத்தின் சரு ரடக்” என எமது மூதாதையர்கள் இந்த நாட்டை அழைத்தது உணவுப் பாதுகாப்பு குறித்தாகும். இயற்கை எமக்கு கருணை காட்டும் போது எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாதாரணமாக நூற்றுக்கு 5 சதவீதத்தை தாண்டுகின்றது. இந்த ஆசிர்வாதம் அரிசி,சோளம், மரக்கறி, பழவகை ஆகியவற்றின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்கப்படமாட்டாது. அவ்வாறான விவசாய உற்பத்திகளுக்கு மேலதிகமாக மின்சாரம், நீர்ப்பாசனம், குடி நீர், வனசீவராசிகள் மற்றும் வனவளம் என்பன எமது தேசிய உற்பத்தி பங்களிக்கின்றன. எனவே, இந்தப் பண வீக்கத்தினை முகாமை செய்வதும் ஆசிர்வாதமாகும். எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நீர்த் துளியும் நாம் பெறுமதி சேர்க்க வேண்டியது இயற்கை ஆசிர் வாதத்தினாலாகும்.
அரிசி,சோளம், குரக்கன், எள்ளு, உழுந்து போன்ற தானியங்களுக்கான உத்தரவாத விலை மூலம் விவசாயிகளினை வலுவூட்டுவதற்கு நாம் சான்றளிக்கின்றோம். மரக்கறி, பழங்கல், தேங்காய் உட்பட பயிர்ச் செய்கைக்கும் இந்த ஆசிர்வாதமுண்டு. எனவே, சகல மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உரச் செயலகம் உர வழங்கலினை உறுதிப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்களாவர். எனவே, அவற்றுக்கான உரத்தினை இலவசமாக வழங்குவதற்கும் ஏனைய பயிர்களுக்கான 50 கிலோ உரத்தினை 1,500 ரூபா சலுகை விலையில் வழங்குதல் உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்தோடு சேதனப் பசளை பாவணையினை அதிகரிப்பதன் மூலம் அதிக தரத்திலான கலப்பு உரப்பயன்பாட்டினை வலுப்படுத்துவதற்கு சேதனப் பயிர்ச்செய்கை வலயம் அபிவிருத்தி செய்யப்படும்.
நெற்செய்கை பண்ண முடியுமான வயல் மற்றும்மேட்டு நில காணிகள் எவ்வித பயன்பாடுமின்றி காணப்படுகின்றது. பயிர்ச்செய்ய முடியுமான ஒவ்வொரு நிலமும் ஏதாவதொரு பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வயல் மற்றும் நில உரிமையாளர்கள் அனைவரும் எதிர்வரும் பெரும் போகத்தில் துரித பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
செய்கை பண்ணப்படாதிருக்கும் வயல்கள், கைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களை உற்பத்தித் திறன் மிக்க விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தினைத் திருத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
விவசாய உற்பத்தி மிகை ஏற்பட்டு அப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக மாவட்டச் செயலாளர்கள், கூட்டுறவு மற்றும் விவசாய சங்கங்கங்களும் வலுவூட்டப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான அனைத்து விவசாய உற்பத்திகளினதும் இறக்குமதியினை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ளகொள்கைத் தீர்மானத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு முன்மொழிகின்றேன்.
பீ வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக விதை, உரம் வழங்குதல், விரிவாக்கல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மரக்கறி மற்றும் பழங்களை பாதுகாத்து வைப்பதற்கு குளிரூட்டிகளைப் பெறுவதற்கு தீர்வை வசதிகள் மற்றும் கடன் வசதிகளை விரிவாக்குவதற்கும் தேவையான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஞ்சள், இஞ்சி இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை இப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு தெங்கு மற்றும் இறப்பர் தோட்டங்களில் மேலதிக பயிர்களாக பயிரிடுவதற்கு பயிர்ச்செய்கை உதவித் திட்டமொன்று முன்மொழியப்படுகின்றது.
உள்நாட்டு பாற்கைத்தொழில்
பால் மா இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் ஐ.அ.டொ 300 மில்லியனுக்கு அதிகமான (ஏறக்குறைய ரூபா 55 பில்லியன்) வெளிநாட்டுச் செலாவணியினை படிப்படியாகக் குறைக்கும் வகையில் உள்நாட்டு பாற் பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மூலம் திரவப் பாலுக்கான கேள்வி அதிகரிப்பினை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்க கொள்கை முன்னுரிமை வழங்குகின்றது. இதன் மூலம் கிராமிய விவசாயிகளுக்கான மாற்று வருமான வழிகளை உருவாக்கும் அதேவேளை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கும் பங்களிக்க முடியும்.
பாற் பண்ணைகளில் பசு ஒன்றிலிருந்து பெறமுடியுமான பாலின் அளவு நாளொன்றுக்கு 4.5 லீற்றரிலிருந்து 22.4 லீற்றர்களாகக் காணப்படுவதுடன் இறக்குமதி செய்யப்படும் பசுக்களிலிருந்து அவற்றினது இனப் பரம்பரை சிறந்தது என்ற காரணத்தினால் 20 லீற்றர்களுக்கு அதிகமான பாலினை உற்பத்தி செய்ய முடியுமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலங்கள் காணப்படாமை, வறட்சிக் காலங்களில் நீர்ப் பற்றாக்குறை மற்றும் பயிர்ச் செய்கைக்கான நிலம் போதியளவின்மை, விலங்குணவு மற்றும் போசணைப் பொருட்களின் வழங்கல், விலங்குணவுடன் போசாக்குணவு கலவை தொடர்பான பிரச்சினைகள், விலங்குப் பண்ணைகளில் நவீன மாதிரிகள் காணப்படாமை, விலங்குகளின் முறையற்ற பராமரிப்பு, உணவூட்டல், கன்றீனல், உஷ்ணக் கட்டுப்பாடு, பாலூட்டல் மற்றும் மலட்டுத் தன்மை என்பன பால் உற்பத்தியின் அபிவிருத்திக்கு தடைகளாகக் காணப்படுகின்றன.
எனவே, தேசிய கால் நடை அபிவிருத்திச் சபையின் றிதீகம மற்றும் போபத்தலாவ பண்ணைகளை கால்நடை இனப்பெருக்க பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதுடன் இனப்பெருக்கத்திற்குத் தேவையான பால் தரும் கால்நடைகளை இறக்குமதி செய்தல், அவற்றுக்கான விலங்குணவுகளை மேய்ச்சல் நிலங்களில் உற்பத்தி செய்தல், சோளம் மற்றும் வேறு பயிர்களை விலங்குணவுக்காக செய்கை பண்ணல், இனப்பெருக்கத்தினை விரிவாக்குதல், பாதுகாப்பு மற்றும் விரிவாக்கச் சேவைகள் என்பவற்றின் மூலம் சிறிய மற்றும் நடுத்தரளவிலான பாற் பண்ணைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் பங்களிப்பு அதிகரிக்கப்படும். பால் தரும் கால்நடைகளை கொள்வனவு செய்தல், சூழல்நேய வளர்ப்பிடங்களை அமைத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பாற் பண்ணையாளர்களுக்கு உபகரணங்கள் கொள்வனவு என்பவற்றுக்காக வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் ரூபா 500,000 வரையான விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
திரவப் பால் நுகர்வு மற்றும் பாற்பொருள் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு உள்நாட்டு பாற் பண்ணையாளர்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு திரவப் பால் சேகரிப்பில் தயாரிப்புக் கம்பனிகளினால் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டினை 3 வருடத்தில் மதிப்புக் குறைப்பதனை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். பிராந்தியத்தில் பால்மா இறக்குமதிக்குப் பதிலாக, பால்மா ஏற்றுமதிச் செயன்முறைப்படுத்தலுக்கு இக் கம்பனிகளின் ஐ.அ.டொ 5 மில்லியனுக்கு அதிகமான மூலதன முதலீட்டுக்காக செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் 5 வருட கால சலுகை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
மீன்பிடி பொருளாதாரம்
கிராமிய வருமான மூலங்களை அதிகரித்தல் மற்றும் போஷாக்குணவு கிடைப்பனவினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் குளங்கள் மற்றும் நன்னீர் நீர்த்தேக்கங்களில் வருடாந்தம் 50 மில்லியன் மீன் குஞ்சுகளை இடுவதன் மூலம் 250,000 மெற்றிக் தொன் நன்னீர் மீன் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏற்றுமதியாளர்களுக்கு விமான நிலைய மற்றும் சரக்கேற்றல் வசதிகளை அதிகரிப்பதுடன் மீனுணவு கிடைப்பனவினை அதிகரிப்பதற்கு இழைய வளர்ப்பு (Tissue Culture) முறைமையினை அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்றுமதிச் சந்தையில் மிகவும் கேள்வியுடைய மீன் மற்றும் நீரியல் உயிரின நாற்றுக்களுக்கான ஏற்றுமதிச் செயன்முறையினை இலகுபடுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இறால், நண்டு (Carp), திலாப்பியா (Tilapia) மற்றும் மோதா (Modha) போன்ற மீன்களை உற்பத்தி செய்வதற்குப் பொருத்தமான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுற்றாடல் தராதரங்களைப் பேணி உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் வளர்ப்பு பண்ணை வலயங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
இலங்கையில் கிடைக்கப்பெறாத மீன் வகைகளை கருவாடு, மாசி மற்றும் ரின் மீன் உற்பத்திக்காக இறக்குமதி செய்வதற்கான செயன்முறையினை இலகுபடுத்தி உள்நாட்டு உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்காக இறக்குமதியின்போது அறவிடப்படுகின்ற வரி அறவீடு உயர் மட்டத்தில் பேணப்படும். நுகர்வோருக்கும் மீன சமூகத்துக்கும் பயனளிக்கும் நிறுவனமாக மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தை முழுமையாக மறுசீரமைப்பதற்கு ரூபா 500 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன்.
ஐரோப்பிய தரத்திற்கு குடாவெல்ல, பேருவல, தெவிநுவர மற்றும் காலி பசுமை மீன்பிடி துறைமுக வசதிகளை ஏற்படுத்தல் பருத்தித்துறை, ஒலுவில், கந்தரை மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கப்பரதொட்ட,தொடந்துவ, ஹிக்கடுவ துறைமுக மற்றும் இறங்குதுறை அபிவிருத்தி, நவீன படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை 2021 – 2023 நடுத்தரக்காலத்தில் மேலும் அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன்.
பெருந்தோட்டத்துறை
தேயலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் கால நிலைத் தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்ஜப்படுத்தல் என்பவற்றின்பால் எமது விசேட கவனத் தினைத் திருப்பியுள்ளோம். சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும். தென்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அக் காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள்,சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை சீனி கம்பனியின் உற்பத்திக் கொள்ளளவினை 70,000 மெ.தொன்களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது
இலங்கையின் உண்மையான கறுவா (Ceylon True Cinnamon) ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
தேயிலை, தெங்கு, இறப்பர், கறுவா போன்ற பிரதான பெருந்தோட்ட பொருளாதாரத்தை புத்துயிரளித்தல் பெருந்தோட்டத்துறையில் பல்வகைப் படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரதேச விவசாயிகளை இணைத்து கொண்டு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடுதற்கும் அப்பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கட்டத்தில் உளுந்து பயறு மிளகாய் போன்ற பயிர்களை பயிரிடுவதற்கும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சிறு தோட்ட உரிமையாளர்களை மரமுந்திரிகை பயிர்ச் செய்கையில் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் தேவையான தாவரங்களையும் விரிவாக்கற் சேவைகளையும் வழங்குகின்றது.
மிளகு, கிராம்பு ஏலக்காய் கோப்பி போன்ற பெருந்தோட்டப் பயிர்களில் உள்நாட்டு பெறுமதியை அதிகரிக்கின்ற தொழில்நுட்ப ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்கின்ற வர்த்தகர்களுக்கு தேவையான காணி மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக தீர்வை வரிச்சலுகை மற்றும் நிதி வசதிகளை வழங்குவதற்கு முன்மொழிகிறேன். பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியனை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகிறேன்.
பாரியளவு பெருந்தோட்ட கம்பனிகளைப் புனரமைத்தல்
1992 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கம்பனிகள் தனியார் மயப்படுத்தப்பட்டதிலிருந்து 30 வருடங்களாக பாரியளவிலான பெருந்தோட்ட முகாமைத்துவம் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25 சதவீத்த்தினால் குறைவடைந்துள்ளது. அத்தோட்டங்கள் பெரும்பாலானவற்றில் பயிர்ச்செய்கை பல்வகைப்படுத்தப் பட்டிருக்கவில்லை. அதிகூடிய பெறுமதியை கொண்டுள்ள இலங்கையின் வர்த்தகச் சின்னம் உட்பட தேயிலையை ஏற்றுமதிக் கைத்தொழிலாக அபிவிருத்தி செய்திருப்பதும் ஒரு சில கம்பெனிகள் மாத்திரமேயாகும். பெரும்பாலான கம்பெனிகளின் தோட்டங்களில் பயிர் செய்யப்படாத காணிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மருத்துவமனை, பாடசாலை, வீடு, பாதை, மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ள வாடகையை செலுத்தாத கம்பெனிகளும் இதனிடையே காணப்படுகின்றன. அதேபோன்று கம்பெனியின் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதும் மிகக் குறைந்த நாளாந்த சம்பளம் ஆகும்.
இந்த நிலைமையின் கீழ் மிகவும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன். இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்டதாக கம்பெனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை சனவரி மாதத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.
பெருந்தெருக்கள்
அதிவேகப் பாதை வலையமைப்பு விரிவாக்கத்தின் கீழ் மத்திய அதி வேகப் பாதையின் பகுதிகளான கெரவலப்பிட்டிய – மீரிகம அதேபோன்று குருநாகல் – தம்புள்ள மற்றும் பொத்துஹர – கலகெதர பாதை நிர்மாணப் பணிகள் மற்றும் ருவன்புர அதிவேகப் பாதையின் முதலாவது கட்டமாக இங்கிரிய – கஹதுடுவ பிரிவுகளின் நிர்மாணப் பணிகள் என்பன 2024 இல் நிறைவு செய்யப்படும். துறைமுக உயர்த்தப்பட்ட அதிவேகப் பாதை நிர்மாணம் மற்றும் களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய வரைக்குமான பாதை, மொரட்டுவ வரைக்குமான கரையோரப் பாதை விரிவாக்கம் மற்றும் கொழும்பு, புற நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல் என்பவற்றுக்கு பொது முதலீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டவாறு 25 மாவட்டங்களில் 3 வருட பாதை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங் விரைவாகச் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். கொழும்பு மற்றும் புற நகர் பகுதிகளில் புகையிரதப் பாதை வலையமைப்பினை விரிவாக்குவதற்கும் நகரநெடுஞ்சாலை வலையமைப்பில் களனி பள்ளத்தாக்கு புகையிரதப் பாதையினை அவிசாவலை வரை நீடிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். புகையிரதப் பாதை அபிவிருத்திக் கருத்திட்டங்களில் புகையிரதத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு பொறியியலாளர்களின் நேரடி பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கும் முன்மொழியப்படுகின்றது.
மின்சாரம்
கடந்த 5 ஐந்து வருட காலப்பகுதியில் எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையத்தையும் மின்னுற்பத்தி தொகுதிக்கு சேர்க்காததன் காரணமாக 2021/2022 இல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப் பிரச்சினைக்குரிய நிலையை தவிர்ப்பதற்காக லக்விஜய மின் நிலையத்திற்கு மேலதிகமாக 300 மெ. வோ நிலக்கரி மின் நிலையத்தையும் 600 மெகா வோட் இயற்கை வாயு மின் நிலையங்கள் 2 ஐயும் துரிதமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை இயற்கை மின் நிலையமாக மாற்றுதல், அதேபோன்று தனியார் இயற்கை மின் நிலையத் திட்டத்தின் மூலம் மேலதிக இயற்கை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள டீசல் மின் நிலையம் 20 வருடங்களை தாண்டியுள்ளபடியினால் அவற்றுக்காக செலுத்தப்படுகின்ற ரூபா15 பில்லியனுக்கும் அதிகமான செலவை குறைப்பதற்கு தொடர்புடைய ஒப்பந்தத்தை திருத்துவதற்கும் முன்மொழிகிறேன். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுச் சட்டத்தையும் மின்சார சபை சட்டத்தையும் துரித கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவான விதத்தில் திருத்தி அமைப்பதற்கும் முன்மொழிகிறேன். 2023 ஆம் ஆண்டளவில் மின்சாரத்திற்காக வர்த்தகர்களும் மின் பாவனையாளர்களும் மேற்கொள்கின்ற அதிக செலவை குறைத்து பிராந்தியத்தில் போட்டிக்குரிய மீன் வழங்கலை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும்.
புதுப்பிக்கக்கூடிய சக்தித் துறை அபிவிருத்தி
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடணத்தின் இலக்கானது 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்களினூடாக நாட்டின் மின்சாரத்தில் ஆகக் குறைந்தது 70 சதவீதத்தினை உற்பத்தி செய்வதாகும். மின்வலு உற்பத்திக்கான எரி பொருள் இறக்குமதி மீதான வெளிநாட்டுச் செலாவணி புதுப்பிக்கக்கூடிய சக்தியினை அபிவிருத்தி செய்வதினூடாக சேமிக்கப்படுகின்றது. இது இறக்குமதிக்கான மாற்றீட்டுத் தொழில்களில் பிரதானமானதொன்றாகும். தற்பொழுது 300 மெ.வோ. சூரிய சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், 2021–2023 காலப் பகுதியில் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் 1,000 மெ.வோ. கொள்ளளவு இணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 100,000 குடும்பங்களுக்கு 50 கி.வோ உற்பத்திசெய்யக்கூடிய சூரியக் கலங்களை வழங்குவதனூடாக 500 மெ.வோ. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக 4 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்குவதற்கும் முன்மொழிகின்றேன். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மின்சாரத்திற்கான செலவினத்தினை சேமிப்பதற்கு முடியுமென்பதுடன் மேலதிக மின் சக்தியினை தேசிய மின் விநியோகத்திற்கு வழங்குவதன் மூலம் வீட்டிலிருந்தவாறே மேலதிக வருமானத்தினை சம்பாதிக்க முடியும். சமயத் தலங்கள், பொது நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறுபட்ட தாபனங்களின் கூரைகளில் சூரியக் கலங்களை நிறுவுவதில் முதலீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். “கமட பலாகாரயக் – கமட வியவசாகயக்” (கிராமத்திற்கு மின் நிலையம் – கிராமத்திற்கு தொழில்முயற்சி) எண்ணக்கருவின் கீழ் கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் முதலீட்டுடன் நிறுவப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை 10,000 தேசிய மின் விநியோக மின் நிலைமாற்றிகளுடன் இணைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
சொட்டு நீர்ப்பாசனம் உட்பட புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் சூரிய சக்தியினால் இயங்கும் நீர்ப் பம்பிகளைப் பொருத்துவதற்கு விவசாயக் கிணறுகளைக் கொண்ட 10,000 சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிக விவசாயிகளுக்கு மூலதன மானியமாக 150,000 ரூபாவினை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். உயர்த்தல் நீர்ப்பாசனம் மற்றும் நீர் சுத்திகரிப்பு தொகுதியினைப் (RO Plant) பயன்படுத்தி குடிநீர் வழங்கல் என்பவற்றுக்கு சூரிய சக்தியினை பயன்படுத்துவதன் மூலம் மின்சார செலவினத்தினைக் குறைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதுவரை மின்சார வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களுக்கு சூரிய சக்தி அல்லது வேறேதேனும் மாற்று சக்தி மூலங்களின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கும் 100 சதவீத மின்னிணைப்பு கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.
முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்தியின் கொள்ளளவினை 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் அனைத்துக்கும் 7 வருட வரி விடுமுறையொன்றினை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.
நீர்ப்பாசனம்
மொறகஹ கந்த – களுகங்கை நீர்ப்பாசன முறைமை மற்றும் குருலு ஓயா நீர்ப்பாசனத் திட்டம் என்பவற்றினூடாக உமா ஓயா பலநோக்கு நீர்ப்பாசனக் கருத்திட்டம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை துரிதமாக நிறைவு செய்வதற்கு 2021 -2023 நடுத்தரகால வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. கிங், நில்வள மற்றும் மல்வத்து ஓயா உட்பட பிரதான நீர்வழங்கல் திட்டங்கள் துரிதமாக நிறைவு செய்யப்படவுள்ளன.
அனைவருக்கும் நீர் 2021 – 2024 தேசிய திட்டம்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது முன்னுரிமையாகும். தற்போது, மக்கள்தொகையில் 54 சதவீதம் பேருக்கு மட்டுமே குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கின்றது. எனவே, “அனைவருக்கும் நீர்” கருத்திட்டத்தின் கீழ், புதிய நீர் வழங்கல் கருத்திட்டங்களையும் தற்போதுள்ள நீர் கருத்திட்டங்களை விரைவாக பூர்த்தி செய்வதற்கும் 2021-2024 ஆம் ஆண்டில் முழு நாட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு 1,000 சமூக நீர் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளையில் அடுத்த சில வருடங்களில் ரூபா 988 பில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டங்களில் கிராமிய மட்டத்திலிருந்து நிறைவேற்று மட்டம் வரையிலுள்ளவர்கள் உட்பட சகல மட்டங்களிலும் உள்ள உள்நாட்டுப் பொறியியலாளர்களையும் அதேபோன்று ஒப்பந்தக்காரர்களையும் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பொறிமுறையின் கீழ், நாளாந்த நீர் விநியோகத்தை 2.07 மில்லியன் கன மீற்றரிலிருந்து 4.4 மில்லியன் கன மீற்றர் வரை அதிகரிப்பதற்கும், நாடு முழுவதும் குறைந்தபட்சம் 40,000 கி.மீ குழாய்களை இடுவதன் மூலமும் மேலதிகமாக 3.46 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 263 சமூக நீர் திட்டங்களை நடைமறைபபடுத்துவதற்கும், 171 கருத்திட்டங்கள் மூலம் தற்போதைய நீர்வழங்கல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், 40 புதிய கருத்திட்டங்களைத் ஆரம்பிப்பதற்கும் 2021 ஆண்டுக்காக 125 பில்லியன் ஒதுக்கப்படுவதற்கு மேலதிகமாக வங்கி நிதி ஏற்பாட்டின் மூலம் ரூபா 75 பில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கு திறைசேரி முறிகளை விநியோகிப்பதற்கு முன்மொழியப்படுகின்றது.