வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.
தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தவிசாளரால் அனுமதியளிக்கப்பட்டது. விவாதத்தில் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் வேலைகள் உரிய காலத்தில் நிறைவுறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதேச சபை சுகாதாரக் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் வகையில் உப விதிகளை ஆக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தவிசாளரினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும் இவ்வாண்டில் செலவீனத்தலைப்புக்களின் கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைகள் தொடர்பாகவும் சபைக்கு மேலதிக விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து உறுப்பினர்களிடம் வரவு செலவுத்திட்டத்திற்கான அங்கீகாரம் தவிசாளரினால் கோரப்பட்டபோது – தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி,சுயேட்சைக்குழு, தமிழர் விடுதலைக்கூட்டணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), ஐக்கிய தேசியக்கட்சி என்பன ஆதரவை வெளிப்படுத்தினர். வரவு செலவுத்திட்டத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பினைப் பதிவு செய்தது.
இதன் பிரகாரம் 38 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இருவர் சுகயின விடுப்பும் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில் 35 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். அதில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளைச் சேர்ந்த சகலரதும் ஆதரவுடன் 32 வாக்குகளைப் பெற்று அளிக்கப்பட்டு வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.