முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்து வழங்கிய தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாய் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றம் இவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்கள் இதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர், இவருக்கும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு மனு மீதான விசாரணைகளை நடத்தியதுடன் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளனர்