இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக நீதியரசர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்றவர்களை உள்ளிட்டக்கிய குழுவை நியமிக்கவுள்ளோம். அவர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள் என தெரிவித்துள்ளார் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னைய வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.
அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. போகப் போக விபரங்களை நான் தருவேன் என குறிப்பிட்டார்.