கதிரோட்டம் 20-11-2020
‘கல்வியே கருத்தனம்’ என்று மனதிற்கு வீரியம் தரும் இரண்டு சொற்களோடு உயர்ந்து நின்றது எமது வடக்கு மண். அங்கு பிறக்கின்ற ஒரு மாணவனின் தந்தை, விவசாயியாக இருந்தாலும், அல்லது வர்த்தகம் செய்பவராக இருந்தாலும், அல்லது கற்றுத் தேர்ந்து அரச உத்தியோகங்களில் சிறப்புக்களோடு இருப்பவராக இருந்தாலும், அவர்கள் மூவருமே தங்கள் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை ஊட்டுவதிலேயே கவனத்துடன் செயற்பட்டார்கள். சொந்த நிலம் கொண்ட விவசாயியாக இருப்பினும் அல்லது கூலி விவசாயியாக இருப்பினும் சரி தங்கள் கஸ்டங்களை பிள்ளைகளுக்குக் காட்டாமல் அவர்களின் கல்விக்காக எதையும் செய்வோம் என்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் அந்த பெற்றோர் சமூகத்தினர்.
அவர்களின் தீவிர முயற்சியினாலும் அவர்களது பிள்ளைகளக்கு கிட்டிய தகுந்த ஆசிரியப் பெருந்தகைகளாலும், கல்வியில் உயர்ந்த எம் மண்ணின் மைந்தர்களும் மங்கைகளும் தற்போது உலகெங்கும் உள்ள பல நாடுகளில் உயர் பதவிகளில் அமர்ந்து அந்தந்த நாட்டு மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றார்கள்.
இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட எம் தாய் மண்ணின் மாணவச் செல்வங்களுக்கு என்ன நடந்து விட்டது என்ற கேள்வியோடு தான் இவ்வாரக் கதிரோட்டத்தை உங்கள் முன்னால் படைக்கின்றோம்.
சில நாட்களுக்கு முன்னர் எமது மண்ணின் பாலகச் செல்வங்கள் தங்கள் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் ஈட்டிய சாதனைகளை உலகெங்கும் கூவி நிற்கும் தமிழ் ஊடகங்கள் வாயிலாக வாசித்தும் கேட்டும் மகிழ்ந்தோம். எமது இணைய ஊடகங்களிலும் அவற்றை பதிவிட்டு எமது மார்பில் நாமே தட்டிக் கொண்டோம். அதற்கு முன், சில மாதங்களுக்கு முன்னர் க.பொ. த பரீட்சையில் எங்கள் பிள்ளைச் செல்வங்கள் பெற்ற புள்ளிகளைப் பார்த்து பரவசமடைந்தோம்.
இந்த வெற்றிகளை எமது தாய் மண்ணில் வாழும் எம் மக்கள் மாத்திரம் கொண்டாடி மகிழவில்லை. உலகத் தமிழர்கள் அனைவருமே வெற்றிப் புன்னகை செய்தார்கள்.
ஆனால் நாட்களும் மாதங்களும் கடந்து செல்ல, அதே கல்வித் தளத்திலிருந்து எமது பார்வைக்கும் செவிகளுக்கும் வந்து சேர்ந்த செய்திகள் எம்மைச் சோர்வடையச் செய்துவிட்டன. எம்மைச் சுற்றி ஒரு அச்ச உணர்வு. நாம் வீழ்ந்து விடக் கூடாது என்று நம்பிக்கையான எண்ணங்கள் தோன்றுவதற்காக இந்த பக்கத்தை நாம் உங்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற நெஞ்சைப் பிழியும் கொடுஞ் செய்தி முதலாவதாக வந்தது.
சிதம்பரநாதன் இளங்குன்றன் என்னும் பெயருடைய 23 வயதுடைய எதிர்கால மருத்துவத் துறைச் சிங்கம் ஒன்று வீழ்ந்து விட்டதே என்று நாமெல்லாம் கலங்கினோம். இந்த இழப்பை நாம் ஒரு செய்தியாகப் பார்க்கவில்லை. இன்னுமொன்றையும் நாங்கள் கவனித்தோம். அவர் எவ்வாறு மரணமானார் என்பதில் கூட எம் மக்களுக்கு அக்கறையில்லை. ஆனால் எதற்காக அவர் இறக்க வேண்டும் என்று கேட்டு கண் கலங்கினார்கள். அற்புதமான ஒரு “மூளை” எம்மி;டமிருந்து பறிக்கப்பட்டு விட்டதே என்ற கவலை என்றும் ஆறாத ஒன்றாகிவிட்டது.
இது ஒரு பக்கம் சம்பவிக்க மேலும் வருத்தத்தை தரவல்ல செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை செய்துள்ளது.
இதனடிப்படையில், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட, பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. அவரது முன்மொழிவுகளைப் பேரவைக்குச் சிபார்சு செய்வதென இன்று புதன்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதான்; மேற்படி முழுமையான செய்தியில் ஒரு பகுதி.
எமது தாய் மண்ணின் கல்வித் துறையின் உயர்ந்து நிற்கும் கோபுரமான யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து கிடைத்த செய்திகள் எம்மை கலக்கமடைய வைத்தன. அதேவேளை கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பற்றி எண்ணியபோது கவலையாகவும் இருந்தது. ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் தனது கடமையைச் செய்தது என்று நாம் ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்ற, தலைமைத்துவப் பண்புகள் கொண்ட நல்ல உள்ளங்கள் முன்வரவேண்டும்.
இவ்வாரப் பத்திரிகையில் எமது வாராந்த எழுத்தாளர் ‘நிலாந்தன்’ குறிப்பிட்டுள்ளதைப் போன்ற இளைய தலைவர்களை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகளை தள்ளி வைத்து விட்டு, ஏனைய தகைசார்ந்தவர்கள் தலைமை தாங்க வேண்டும். எமது மண்ணின் கல்வித் தளமும், கற்றவரின் வளமும் என்றும் தாழ்ந்துவிடாமலிருக்க நாம் தயாராக இருந்து காரியங்கள் ஆற்றவேண்டும்.