இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்