மன்னார் நிருபர்
(25-11-2020)
தமிழர்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வு பூர்வமான நினைவேந்தலை நினைவு கூறுவதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடையும் இல்லை என மன்னார் சட்டத்தரணி அன்ரனி றொமோல்சன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் புதன் கிழமை(25) காலை மன்னாரில் இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மாவீரர் நினைவு தொடர்பாக எல்லா இடங்களிலும் நீதிமன்றமானது அதை நினைவு கூர்வதற்கு தடை விதித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம்.
இது சம்பந்தமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைவாக இந்த நீதி மன்றத்தினால் நினைவு கூற தடைவிதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் எமது சார்பாக ஒரு நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து தடைக்கு எதிராக எமது ஆட்சேபனையை நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.
ஆனாலும் அதனை தொடர்ந்தும் இந்த நீதிமன்றமானது இந்த தடை உத்தரவை நீடித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்த நீதிமன்றத்தின் கட்டளையை நாங்கள் மதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.அதே நேரத்தில் எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களையும் நாங்க மதிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
எனவே சட்ட ரீதியாக இந்த நீதிமன்ற தடையானது எமது உறவுகளின் நினைவு நிகழ்வினை பொது இடத்தில் மக்களை ஒன்று கூடி செய்வதற்குத்தான் தடை விதித்துள்ளனர்.
ஆகவே உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வு பூர்வமான நினைவேந்தலை நினைவு கூறுவதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடையும் இல்லை.
எனவே எதிர் வரும் 27 ஆம் திகதி நாங்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக எமது இடங்களிலே இருந்தவாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் இன்று கூடாமல் நீதிமன்றத்தின் கட்டளையை மீறாது எமது நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிப்போம்.