சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
அவருக்கு முன்னரும் அப்படியொரு வீரர் இருந்ததுமில்லை அவருக்கு பிறகு இருக்கப் போவதுமில்லை.
பத்தாம் எண் சட்டை விளையாட்டுலகில் பிரபலம். கிரிக்கெட்டில் டெண்டுல்கர், கால்பந்தில் பெலே, மரடோனா, மெஸ்சி, நெய்மார், வெயின் ரூனி, ஆலிவர் கான் எனப் பட்டியல் நீளும்.
அந்த எண்ணைக் கொண்ட சட்டையும் அதையணிந்த விளையாட்டு வீரர்களும் அமரத்துவம் பெற்றவர்கள். அதிலும் குறிப்பாகக் கால்பந்து விளையாட்டுக்கு அந்த எண் சட்டையை அணிந்த வீரர்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
பத்தாம் இலக்கச் சட்டைக்காரர்களில் யார் பெரியவர்கள் எனும் கேள்வி சரியானதாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்புண்டு. அது அவர்கள் விளையாடிய காலகட்டத்தைப் பொறுத்தது.
எனினும் சிலருக்கு தனித்துவமான ஒரு பேரும் புகழும் கிடைக்கிறது. அவ்வகையில் கால்பந்து உலகில் `கடவுள்` எனும் நிலையைப் பெற்றவர் மரடோனா.
அவரைப் பொறுத்தவரையில் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது என்பது மிகவும் பொருந்தும்.
கடந்த மாதம் மணிவிழா கண்ட மரடோனா அர்ஜெண்டினாவின் தலைநகர் போனஸ் எய்ரிஸின் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். ஏழ்மை அவரைக் கால்பந்து விளையாட்டை நோக்கித் தள்ளியது. அதை அவர் சவாலாக ஏற்று அதில் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கினார்.
பெலேயின் புகழாரம்
இந்நாள் வரை உலகளவில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் பிரேசிலின் பெலேயா அல்லது அர்ஜெண்டினாவின் மரடோனாவா இவர்களில் யார் என்பது `முட்டையா கோழியா` எனும் கதையே.
சில விளையாட்டு வர்ணனையாளர்கள் அவர் பெலேயைவிடச் சிறந்தவர் என்று கூறுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரரைத் தேர்வு செய்யும் போது சர்ச்சைகள் எழுந்தன. அவரா இவரா என முடிவெடுக்க முடியாத நிலையில், சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிபா அந்த விருதை இருவருக்கும் கூட்டாக அளித்தது.
தொழில் ரீதியான போட்டிகளுக்கு அப்பாற்பட்டு 80 வயதான பெலே தனது அஞ்சலியில் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
“நான் தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த நண்பரையும், உலகம் ஒரு மாபெரும் சாதனையாளையரையும் இழந்துள்ளது . அவரைப் பற்றி கூறுவதற்கு ஏராளம் உள்ளன, ஆனால் இப்போதைக்கு அவரது குடும்பத்தாருக்கு ஆண்டவர் தைரியத்தை அளிக்கப் பிரார்த்திக்கிறேன், ஒரு நாள், அதுவும் விரைவில் இருவரும் சொர்கத்தில் சேர்ந்து விளையாடுவோம்“
அவரது அஞ்சலி மிகவும் அர்த்தம் பொதிந்தது. அவர் எந்தளவுக்கு மரடோனாவை மதித்தார் என்பதை அவருடன் பூவுலகில் விளையாட முடியாவிட்டாலும், சொர்கத்தில் விளையாட விழைகிறேன் என்று கூறுவதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் மரடோனா இருவருமே 16 வயதில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானவர்கள். பின்னர் ஓய்வு பெறும் வரை தாங்கள் இல்லாமல் தேசிய அணியில்லை எனும் நிலையை ஏற்படுத்தியவர்கள்.
உயரம் குறைவாக இருந்தாலும் மரடோனாவின் கால்கள் மாயாஜாலம் செய்தன. ஆளுமை உயரத்தில் இல்லை, ஆட்டமே ஒருவரை உயரத்துக்கு இட்டுச் செல்லும் என உணர்த்தினார் மரடோனா.
பட்டுப் போன்ற மென்மையான அவரது லாவகம், உடலசைவு, தொலைநோக்குப் பார்வை, பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, பந்தை உருட்டிச் செல்வது, அடுத்தவருக்கு பந்தைத் தள்ளுவது, ஆடுகளத்தில் ஆர்ப்பரித்து ரசிகர்களை உசுப்பேற்றுவது, சில வேளைகளில் ஆத்திரப்படுவது என அனைத்திலும் அவர் தனித்து விளங்கினார்.
ஆடுகளத்தில் அசாத்திய ஆளுமை
ஐந்தடி ஐந்து அங்குலம் உள்ள ஒரு மனிதனால் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது என்பதே அவரது ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியும். அவரது கால்கள் ஜாலங்களைச் செய்தது.
ஆடுகளத்தில் அவரது நகர்வுகள் ஊகிக்க முடியாதவையாக இருந்தன. ஒரு நகர்வைப் போன்று அடுத்தது இருக்காது.
கடந்த 1986ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டி பல வகைகளில் மறக்க முடியாதது. அர்ஜெண்டினாவுக்கு அருகிலுள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான குட்டித் தீவான ஃபாக்லாண்ட்ஸ் தமக்குச் சொந்தம் என்று அர்ஜெண்டினா உரிமை கோரியது. இதன் காரணமாக 1982ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இறுதியில் இங்கிலாந்து வெற்றிபெற ஃபாக்லாந்து தீவுகள் தொடர்ந்து பிரிட்டன் வசம் உள்ளது.
“ஹாண்ட் ஆஃப் காட்“
போரின் தாக்கம் நீறு பூத்த நெருப்பு போல் இரு நாடுகளுக்கும் இடையே கனன்று கொண்டிருந்தது. அச்சூழலில் 22 ஜூன் 1986 இங்கிலாந்து அர்ஜெண்டினாவுக்கு இடையேயான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இரு நாடுகளிலும், அரங்கில் கூடியிருந்த ரசிகர்களிடமும் பெரும் உற்சாகமும், உணர்ச்சியும் மேலோங்கியிருந்தது. இடைவேளை வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கி ஆறு நிமிடங்கள் கடந்த நிலையில் `சர்ச்சைக்குரிய` அந்த அற்புதம் நிகழ்ந்தது.
இங்கிலாந்தில் கோல் வலைக்கு அருகே பந்தை லாவகமாக உருட்டிச் சென்று அதை சக வீரரிடம் தள்ளிவிட்டு பெனால்டி பாக்ஸை நோக்கி விரைந்த மரடோனா உயர்ந்து வந்த பந்தை தனது தலையால் முட்டி வலைக்குள் தள்ளும் போது அவரது நீண்டிருந்த இடது கையின் முட்டியையும் பயன்படுத்தி பந்தை கோல் வலைக்குள் தள்ள உலகெங்கும் எழுந்த ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாயிற்று.
கள நடுவராக இருந்த துனீசிய நாட்டைச் சேர்ந்த அலி பெனாஷோ அதை கோல் என்று அறிவிக்க இங்கிலாந்தின் கோல் காப்பாளர் பீட்டர் ஷில்டன் எதிர்ப்புத் தெரிவித்தார். பந்து கையில் பட்டு வந்தது, எனவே அது தவறான முடிவு என்று வாதிட, கள நடுவர், எல்லை நடுவரைக் கலந்தாலோசித்து அதை கோல் என்று அறிவித்தார். பின்னர் அந்த கோல் `ஹாண்ட் ஆஃப் தி காட்` என்று பிரபலமானது.
அதைப் பின்னர் தனது சுயசரிதையில் ஒப்புக் கொண்டார் மரடோனா. கடவுளின் கை என்று கூறியது உண்மையில் தனது கை என்று சுயசரிதையில் எழுதியிருந்தார் மரடோனா.
ஆனால் சர்ச்சைக்குரிய அந்த கோலுக்கு நான்கு நிமிடங்களுக்குப் பிறகு அவர் அடித்த கோல், `நூற்றாண்டின் கோல்` என்று இன்றளவும் விவரிக்கப்படுகிறது. தமது பகுதிக்கு வந்த பந்தை தன்வசப்படுத்திக் கொண்டு கண்கட்டி வித்தையைச் செய்யும் மந்திரவாதி போல அந்தப் பந்தை உருட்டி, மென்மையாகத் தட்டி பல வீரர்களைக் கடந்து, பாய்ந்து வந்து பந்தைப் பிடிக்க முயன்ற பீட்டர் ஷெல்டனையும் கடந்து வலது காலால் பந்தை அடிக்க அமரத்துவம் வாய்ந்த அந்த கோல் அடிக்கப்பட்டது.
மிகவும் லாவகமாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஏழு வீரர்களை திணறடித்து 68 மீட்டர்கள் தனியொரு ஆளாக அந்தப் பந்தை உருட்டிச் சென்று கோல் அடித்ததை இன்றும் காணும் போது மெய்சிலிர்க்காமல் இருக்க முடியாது.
அவரது அற்புதமான ஜாலங்களால் அந்த ஆண்டு உலகக் கோப்பையை அர்ஜெண்டினா வென்றது.
சர்க்கஸ் உலகில் கோமாளி எப்படி அனைத்து வித்தைகளையும் அறிந்து உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவாரோ அவ்வாறே கால்பந்து ஆடுகளத்தில் திகழ்ந்தார் டியாகோ மரடோனா.
இடதுசாரி சித்தாந்தங்கள்
ஆடுகளத்தில் மிகச் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தியது போல் அரசியல் நிலைப்பாடுகளிலும் தனது நிலைப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்தியவர் மரடோனா. இடதுசாரி சித்தாந்தங்களால் பெரிதும் கவரப்பட்ட அவர் அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்தார் மரடோனா. அதேபோல் புரட்சியாளர் சே குவேவாராவையும் ஆழமாக நேசித்தார். இருவரின் படங்களையும் தனது உடலில் பச்சைக் குத்திக் கொண்டு மாறாத அன்பை வெளிப்படுத்தினார்.
தனது இளவயதில் அவர் எதிர்கொண்ட ஏழ்மையும், சமூகச் சூழலும் அவருக்குள் கம்யூனிச சித்தாந்தங்கள் வளருவதற்கு காரணமாயிருந்தன. லத்தீன் அமெரிக்காவில் மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்க அவர் தயங்கியதில்லை.
பாலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தினார். காசாப் பகுதியின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய போது அதைக் கண்டித்த அவர் “மனதளவில் நானும் ஒரு பாலஸ்தீனியர்“ என்று உரக்கக் குரல் கொடுத்தார்.
அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷைக் கடுமையாக சாடினார். இன்றளவும் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரியதும், வலிந்த தாக்குதலுக்கு அடையாளமாகவும் பார்க்கப்படும் இராக் போரைத் தீவிரமாக எதிர்த்தார் மரடோனா. அதை வல்லாதிக்க அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி அதை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று மரடோனா அறைகூவல் விடுத்திருந்தார்.
அதிதீவிர கத்தோலிக்க நாடா ன அர்ஜெண்டினாவின் பிரஜையாக அவர் இருந்தாலும், போப் இரண்டாம் ஜான் பாலை சந்தித்த போது அவரையும் விமர்சிக்கத் தவறவில்லை. அவரது மாளிகையின் உட்புறங்களில் பூசப்பட்டிருந்த தங்க முலாமை ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் பயன்படுத்தலாம் என்று கூறிய போது போப் வாயடைத்துப் போனார் என்று அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல பிரபலங்களைப் போல் மரடோனாவும் பல சர்ச்சைகளில் சிக்கினார். போதைப் பொருட்களின் பாவனை அவரது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இன்று மெஸ்ஸி போன்ற பிரபலங்கள் உருவாவதற்கு ஒரு கதாநாயகனாக மரடோனா இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
ஆடுகளத்தில் பல அற்புதங்களைச் செய்ய முடியும் என்று காட்டிய மந்திரவாதி மரடோனாவுக்கு உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருவது அவரது ஆளுமையைப் பறைசாற்றுகிறது.