(மன்னார் நிருபர்)
(27-11-2020)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
அதற்கு அமைவாக ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினை வேந்தல்கள் இடம் பெறாத வகையில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
–இதே வேளை மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மர நடுகை நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச்ச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் இடம் பெற்றது.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.
ஆயிரம் தென்னங்கன்றுகளும், பத்தாயிரம் பனம் விதைகளும், இரண்டாயிரம் பயன் தரும் நிழல் மரங்களும் நாட்டுவதற்கான நடவடிக்கைக்கு அமைவாக ஒரு தொகை மரக்கன்றுகள் அடம்பன் புனித வியாகுல அன்னை ஆலய பகுதியில் நாட்டி வைக்கப்பட்டது.
-இதன் போது குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.