யாழ்ப்பாணம் – ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தினர் இன்று ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமும் மரநடுகை திட்டமும் இன்று காலை 8.30 மணிக்கு நடத்தப்பட்டன.
இந்த விடயம் குறித்து அறிந்த இராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இராணுவத்தினராலும், காவல்துறையினராலும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுகள் உள்ளன என்றும் இவற்றை நிறுத்துமாறும் அவர்களை எச்சரித்தனர்.
மரநடுகை செயல்பாடு முன்னரே நடத்தப்பட்டிருந்தது. இதனால் இரத்ததான முகாம் நிறுத்தப்பட்டது.
எனினும், இதில் பங்கேற்ற குருதிக் கொடையாளர்கள் இரத்தவங்கிக்கு நேரடியாக சென்று இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை மாவீரர் நினைவேந்தல் வாரத்திலும், தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்திலும் இரத்ததானம் செய்யச் சென்றவர்களை தெல்லிப்பழை இரத்த வங்கிக்கு அருகாமையில் நின்ற காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் திருப்பி அனுப்பபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.