சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
உலகளவில் சில அடிப்படை உரிமைகள் மறுக்க முடியாதவை. அவற்றில் மதவுரிமையும் கருத்துரிமையும் மிகவும் முக்கியமானதாகும்.
அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்தாத வகையிலும், ஆதாரங்களின்றி குற்றச்சாட்டுகளைக் கூறாத வரையிலும் அனைவருக்கும் கருத்துச் சுதந்திர உரிமை உள்ளது என்பது அநேகமாக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
அதே போலத்தான் மதச் சுதந்திரமும். ஒவ்வொரு நபருக்கும் தான் விரும்பும் மதத்தை ஏற்பதும் அதன் அடிப்படையில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லவும் உரிமை உள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒரு பகுதியும் ஆகும்.
சமூகத்துக்கு கேடு விளைவிக்காத வகையில் யாவரும் தமது மத உரிமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சடங்குகளை அனுசரிப்பதை எந்த நாகரீகமான நாடும் தடுக்காது, அதைத் தடுக்கவும் முடியாது.

மறைந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவது தமிழர் பண்பாடு
அப்படியான மதச் சடங்குகளில் முக்கியமான ஒன்று இறந்தவர்களை நினைவு கூர்ந்து அவரவர் மத வழக்கத்தின்படி அதைக் கடைப்பிடிப்பது இயல்பான ஒன்று.
நீத்தார் நினைவு கூர்தல்-தமிழர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று.
இலங்கையின் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் ஆயிரக்கணக்கானார்கள் உயிரிழந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். மரணமடைந்தவர்கள் எவ்வகையில் உயிரிழந்தார்கள் என்பது அந்தச் சம்பவத்துடன் முற்றுப் பெறுகிறது. அதன் பிறகு அவர்களது குடும்பத்தாருக்கு மரணமடைந்தவருக்கு செய்ய வேண்டியவற்றைச் செய்யும் கடமையும் உரிமையும் உள்ளன.
அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. போர்க் காலத்தில் உயிரிழந்தவர்களை குடும்பத்தார் நினைவு கூர்வதற்கு விதிக்கப்பட்ட தடைகள் ஏற்புடையதாக இல்லை.
ஆனால் அரசியல் கட்சிகள் அந்த நிகழ்வை தமது சுயலாப அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கும் போது அது நினைவுநாள் அனுசரிப்பு என்பதிலிருந்து மாறி வேறு திசையில் செல்கிறது.
விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் இணைந்து செயல்பட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக `மாவீரர் நாள்` எனும் முன்னெடுப்பைச் செய்து அதை பல ஆண்டுகளாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அனுசரித்து வந்தனர்.
தனி ஈழம் அமைய வேண்டும் எனும் இலட்சியத்துடன் பல போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தி இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய போது அனைத்துக் குழுக்களிலிருந்தும் பலர் உயிர்த் தியாகம் செய்தனர். அவ்வகையில் அவர்களும் மாவீரர்களாகவே அவர்களின் குடும்பத்தாராலும் அவர்களைச் சார்ந்தவர்களாலும் கருதப்படுவர்.
ஒரு நோக்கத்துக்காகப் பல காலகட்டத்தில் உயிரிழந்தவர்களை அவர்களின் நினைவு நாளிலோ அல்லது பொதுவாக ஒரு நாளிலோ நினைவு கூர்வது உலகளவில் அனுசரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
உதாரணமாக ஐரோப்பாவில் உலக யுத்தங்களில் உயிரிழந்தவர்களை ஒரு பொது நாளில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வது நடைமுறையில் உள்ளது.

பொப்பி தினத்தில் அஞ்சலி செலுத்துவது பல ஆண்டுகளாக நடைபெறுகிறது
பிரிட்டனில் அண்டு தோறும் அவ்வகையில் பொப்பி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று பிரிட்டிஷ் அரசி தொடங்கி சாமானியர்கள் வரை அந்த அஞ்சலி நிகழ்வில் பங்குபெறுகின்றனர்.
ஆனால் பிரிட்டனில் இது அரசியல் படுத்தப்படுவதில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இது அரசியலாக்கப்படுகிறது என்பது கசப்பான உண்மை. அவ்வகையில் தமிழ்க் கட்சிகள் அதைக் தமது கைகளில் எடுக்கும் போது அதற்கு எதிர்வினையாக இலங்கை அரசும் தென்னிலங்கை கட்சிகளும் களத்தில் இறங்குவது இயற்கையே.
தமிழ் அரசியல் கட்சிகளை எதிர்ப்பதாகக் கருதிக் கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதில் குடும்பத்தாருக்கும் இருக்கும் உரிமையை அரசியலுக்காக இலங்கை அரசு மறுப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகவே கருதப்படும்.
அந்த நினைவு கூர்தல் நிகழ்ச்சியில் பொது அமைதியைக் குலைக்கும் வகையிலோ, நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணான வகையிலோ யாராவது நடந்து கொண்டனர் என்று அரசு கருதினால் அதை உரிய வகையில் பதிவு செய்து அப்படியான செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

நீத்தாரை நினைவு கூர்வது அடிப்படை உரிமை
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் இலங்கை அரசு, `மாவீரர் நாள்` என்றழைக்கப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியைக் கண்டு ஏன் அஞ்சுகிறது அல்லது கலக்கமடைகிறது?
தனி நாட்டுக் கோரிக்கைக்காக மீண்டும் ஒரு போர் ஏற்படும் சாத்தியங்கள் யதார்த்த ரீதியில் இல்லை. விடுதலைப் புலிகளைப் போன்று வலிமை வாய்ந்த ஒரு கட்டமைப்பு மீண்டும் உருவாகவும் வாய்ப்பில்லை.
அதேவேளை புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் `மாவீரர் நாள்` நிகழ்வை தமது சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகின்றனர் எனும் விமர்சனங்களையும் முழுமையாகப் புறந்தள்ள முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தொடங்கி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தமிழ் கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி அவர்களுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாததை தோலுரித்துக் காட்டியது. எனவே அவர்கள் தொடர்ச்சியாக `மாவீரர் நாள்` நிகழ்ச்சியை தமது அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் மக்களைவிட தமிழ் அரசியல் கட்சிகள் மீதே இலங்கை அரசு கூடுதல் வெறுப்புணர்வைக் கொண்டுள்ளது என்பது யதார்த்தம். இலங்கை அரசின் கடும்போக்கு நிலைப்பாடுக்கு இந்த தமிழ் அரசியல் கட்சிகளின் செயல்பாடு முக்கியமானதொரு காரணம்.
அதேவேளை போரில் உயிரிழந்த சிங்கள இராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் போர் வெற்றி தினத்தை அனுசரிக்கும் போது அதே உரிமை ஏன் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதற்கு இலங்கை நீதிமன்றங்கள் இந்நாள் வரை விடையளிக்கவில்லை.
இலங்கை அரசு மிகவும் கண்ணியமாகவும் மனித நேயத்துடனும் இந்த விஷயத்தை அணுகியிருக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால் இலங்கை அரசே `மாவீரர்களை` அதிகளவில் நினைவில் வைத்துள்ளது.

மக்கள் கூடுவதைத் தவிர்க்க கடுமையான தடைகள்
அரசு பெருந்தன்மையுடன் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு தடை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், அந்த நிகழ்வு பெரும் ஆரவாரமின்றி அமைதியாக நடந்திருக்கும். குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மக்கள் ஒன்றுகூடி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி அமைதியான முறையில் கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால் அந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இலங்கை அரசு ஏன் தயங்க வேண்டும்?
அதேபோல் தமிழ் அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழ் மக்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும்.
யூகத்தின் அடிப்படையில் அரசி நீதிமன்றத்தை அணுகுவதும், அதை ஏற்று நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை வழங்குவதும் கேள்விக்குள்ளாகவேச் செய்யும்.
இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றை மேற்கோள் காட்டி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் அரசு நீதிமன்றங்களில் `மாவீரர் நாள்` ஒன்றுகூடலுக்கு தடை உத்தரவு பெற்றுள்ளது.
அப்படியானால் அடுத்த ஆண்டு கொரோனா தொற்று முற்றாக முடிவுக்கு வந்திருந்தால் இலங்கை அரசு தமிழ் மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு தடை கோராமால் இருக்குமா?

சிறப்பு தபால் முத்திரை வெளியிடுவதன் மூலம் மட்டுமே தேசிய ஒற்றுமை ஏற்படாது
இலங்கையில் உண்மையான இன ஒற்றுமையும், சகவாழ்வும் ஏற்பட வேண்டுமென்றால், விட்டுக்கொடுப்பு மிகவும் அவசியம். பின்னால் பார்த்துக் கொண்டேயிருந்தால் முன்னால் இருப்பது தெரியாது என்பதை இரு தரப்பும் உணர்ந்தால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும்.
ஆனால் நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பைச் செய்ய வேண்டிய பொறுப்பு பெரும்பான்மை மக்களிடமே உள்ளது. அவர்களே சிறுபான்மை மக்களை அணைத்துச் செல்ல வேண்டியவர்கள். அதேவேளை சிறுபான்மை மக்களும் கசப்புணர்வுகளை மறந்து பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்கு நலன் பயக்கும் எனும் யதார்த்தத்தை உணர வேண்டும்.
முன் கை நீண்டால் தான் முழங்கை நீளும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது.