புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் கட்சிகள் விவாதித்தன.
இதன்போது, தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.
இதேவேளை, கார்த்திகை தீபத் திருநாளில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுவதாகவும் தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், புளொட் சார்பில் கஜதீபன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வட மாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவானது.
இந்த வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் இந்தக் குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைபை மாவை சேனாதிராஜா பிரதமரிடம் கையளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபைத் தயாரிப்பதென முடிவாகியுள்ளது