யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதிக்கு கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் , பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட்ட வெடியரசன் கோட்டையை தனது உடமையாக்கி இலங்கை-தொல்லியல் திணைக்களம் அரச இதழ் வெளியிட்டுள்ளது.
நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம்என இவர்கள் கருத்துரைத்ததோடு யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் அன்று ஆராய்ந்தனர்
இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவும் செய்தனர்.
இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா என அன்றே அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட நிலையில் தற்போதும் வெடியரசன் கோட்டைப் பகுதியென குறிப்பிடாது 188ஆம் அத்தியாயத்தின் 33ம் இலக்க தொல்லியல் திணைக்கள சட்டத்தின் கீழ் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தலமையதிபதியினால் இந்த அரச இதழ் பிரசுரிக்கப்பட்டதோடு இடம் துறவிமடம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.