கதிரோட்டம் 04-12-2020
இலங்கை அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அ ன்றி அமைச்சர்களாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பதவிகளில் அமர்வது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக என்றே நம்பப்பட்டது ஆனால் அந்த எதிர்பார்ப்பு அற்றுப்போகும் வகையிலேயே மேற்படி பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் நடந்து கொள்வதும் பெற்றுக்கொண்ட அரசியல் பதவியை பிரயோகித்து அதிகார பலத்தைப் பெற்று அதன் மூலம் பண பலத்தைப் பெருக்கிக் கொள்வதே நோக்கமாகக் கொண்டே காலத்தைக் கடத்துவதை காணக்கூடியதாக உள்ளது. அதற்கு மேலாக மாகாண சபைப் உறுப்பினர்கள் பதவிகளும் அமைச்சர் பதவிகளும் அவ்வாறே பலனற்றவையாகவே மாறிவிட்டன.
இங்கே நாம் பதிவு செய்த விடயங்கள் முழு இலங்கைக்கும் பொருந்தியதாக இருந்தாலும் நாம் கவனத்தைச் செலுத்துவது எமது தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பற்றியே. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் இருப்பு அரசியல் ரதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஸ்தம்பிதம் அடைந்தன் காரணமாக எமது தமிழ்த் தலைவர்களின் அரசியல் பயணம் எவ்வாறு பாதை மாறிய ஒன்றாக அமைந்து விட்டது என்பதை நாம் இங்கு விளக்கிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என தமிழ்பேசும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழ் மக்கள் முன்;பாக வந்து வந்து போகின்றார்கள்.
தமிழ் மக்கள் அவர்களை “வாருங்கள்! வாருங்கள்!!” என்று அழைக்காவிட்டாலும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடசிகள் அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கின்றன. இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் வருகின்றார்கள். பதவிகளிலும் அமர்ந்து கொள்கின்றார்கள். இந்த பதவிகளில் அவர்கள் அமர்ந்து கொள்வது என்பது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளதாக என்றால், அதுவும் இல்லை. காரணம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் அவற்றை வெளிக்காட்டுகின்றன.
உதாரணமாக புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் கட்சிகள் விவாதித்தன. பல ஊடகங்கள் இந்தக் கட்சிகளின் ஒன்றிணைவை ‘தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு’ என்று குறிப்பிடுகின்றன. ஆனால் நாம் இந்தக் கட்சிகளில் எல்லாவற்றையுமே ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’ என்று குறிப்பிடக் கூடிய அளவிற்கு தரவுகள் இல்லாமலிருக்கின்றன.
அது ஒரு புறமிருக்க,
மேற்படி கட்சிகளின் ஒன்றுகூடலின் போது, தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. ஆனால் அதற்கா தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் சிலர் தாங்களாகவே வந்து பதவிகளில் அமர்ந்து விட்டது போன்றே எமக்குத் தோன்றுகின்றது. இந்தக் குழுவின் தெரிவு தொடர்பாக தாயகத்தின் பல பகுதிகளிலிருந்து காட்டமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே இந்த தெரிவுக் குழுவில் அங்கம் வகி;ப்பவர்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே பல தரப்பிலும் உள்ளவர்கள் விரும்புகின்றார்கள்.
பதவி நோக்கம் கொண்டவர்களையே நம்பியிருப்பது மக்களை மீண்டும் பாதாளத்திற்கு அழைத்துச் செல்வதற்கு சமனானது…