ஈழத்தமிழர் நோக்குநிலையில் இருந்து உலகத்தமிழ் பரப்பினை நோக்கிய ‘ஈழமண்’ பத்திரிகையின் முதல்பதிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
19 பக்கங்களை கொண்ட மின்னிதழாக வெளிவந்துள்ள முதல்பதிப்பில் மாவீரர் நாள் செய்திகள், கட்டுரைகள், தாய்நிலம், கருத்துக்களம், விருந்தினர் பக்கம், அக்கம் பக்கம், நினைவோடை, வெற்றிப்படிகள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.
மாவீரர் வணக்கத்துடன் வெளிவந்துள்ள ஈழமண், தனது முதல்காலடி தொடர்பில் தெரிவிக்கையில், முதலாவது வாயிலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பின் வடிவமாக, தேசமாகச் சிந்தித்து, தமிழர் தேசத்தின் நோக்குநிலையில் இருந்து ‘ஈழமண்’ இவ்வுலகைக் காண்கின்றது.
தமிழர் தாயக மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், சமூக சிக்கல்கள், சுற்றுச்சூழல் சவால்கள், அரசியல் நிலவரங்கள் எனத் தாய்மண்; வேரையும், அதனை விழுதாகத் தாங்கும் புலம்பெயர் உறவுகளையும் உள்வாங்கியதாக ஈழமண் தன்னை வடிவமைத்துள்ளது.
சமூக, அரசியல் விழிப்பையும், தமிழீழ போராட்டத்தின் உயிர்ப்பையும் தனது முதற்பணியாக ‘ஈழமண்’ கொண்டிருக்கும். தமிழர் தேசத்தின் நலன்களின் அடிப்படையில் ஜனநாயக பண்புகளுக்கு அமைய கருத்தாடல்களுக்கான ஓர் களத்தினை ஈழமண் வழங்கும்.
தமிழர்கள் அரசுக்குரியவர்கள் என்ற அரசியல் நிமிர்வினை ஈழத்தமிழர் தேசத்துக்குத் தந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்கள பௌத்தம் இன்று தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திர அரசியல் இறைமையினை மீட்டெடுக்கவும், இனஅழிப்புக்கு எதிரான ஈடுசெய் நீதியினை வென்றெடுக்கவும் உருக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ‘ஈழமண்’ துணை நின்று செயலாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஈழமண்’ பத்திரிகை Download செய்ய
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் பிரித்தானியாவிலும், செல்வி குமுதினி அவர்கள் கனடாவிலும் வெளியிட்டு வைத்தனர்.