-நக்கீரன்
கோலாலம்பூர், டிச.06:
குமரிக் கடலின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட தாம்பூல பரிமாற்றம், வெற்றிலைப் பயன்பாடு, மஞ்சள் மகிமை, பள்ளாங்குழி விளையாட்டு உள்ளிட்ட தமிழியப் பண்பாடும் நாகரிகமும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பிரதிபலிக்கும் கெடா அரண்மனை வாசத்துடன் வளர்ந்த கோமான் தேசத் தந்தை துங்கு அபப்துல் ரகுமான்.
மலையகவாழ் மக்களால் தேசத் தந்தை என்றும் சுதந்திர தந்தை எனவும் போற்றப்படுகின்ற துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் முதல் பிரதமர். மன்னர் நாயகத்திற்கும் மக்கள் நாயகத்திற்கும் பாலம் சமைத்த இவர், ஆசிய மண்டலத்திலும் மேலை நாடுகளிலும் சமதருமவாதி என்று கருதப்பட்டவர்.
ஈராயிர ஆண்டுகளுக்கு முன்னம் கடார மண்டலத்தில் ஆட்சி செய்த இந்து-பௌத்த கூட்டு அரச பரம்பரையைச் சேர்ந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். இவரின் தந்தையும் கெடா மாநிலத்தின் 24-ஆவது சுல்தானுமாகிய சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா, உண்மையில் கெடாவின் 32-ஆவது ஆட்சியாளர் ஆவார்.
ஆரம்பத்தில் அங்கு ஆட்சி செய்த இந்து தர்பார் ராஜா வரிசையில், ஒன்பதாவது தர்பார் ராஜாதான் கெடாவின் முதல் சுல்தானாக மாறினார். அந்தக் காலக்கட்டத்தில் இந்த மண்டலத்தில் இஸ்லாம் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டதன் விளைவாக, 9-ஆவது இந்து மன்னர் இஸ்லாத்தைத் தழுவினார். இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒரு மார்க்க அறிஞர்தான் ஒன்பதாவது இந்து அரசர் முஸ்லிம் சமயத்தைத் தழுவதற்குரிய சடங்குகளை நிறைவேற்றினார். அந்த மார்க்க அறிஞர்கூட, அரபுத் தந்தைக்கும் இந்தோனேசியத் தாய்க்கும் பிறந்தவர்.
கெடா அரண்மனையில் இடம்பெறும் அரச பாரம்பரிய சடங்குகளில் இந்து, பௌத்த கலாச்சரம் இழையோடி இருப்பதை இப்பொழுதும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க துங்கு அப்துல் ரகுமானின் சீரிய தலைமையில் 1957 ஆகஸ்ட் 31-இல் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற அந்நாளைய மலாயா, 1963ல் சபா, சரவாக் ஆகிய பெருமாநிலங்களை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்ட மலேசியா உருவாவதற்கு அரும்பாடாற்றிய பெருந்தகை துங்க அப்துல் ரகுமான்.
துன் டான் செங் லோக், துன் வீ. தி. சம்பந்தன் ஆகிய இரு தலைவர்களையும் துணை கொண்டு மலாய், சீன, இந்திய இனங்களை ஒருமைப்படுத்தி மலேசிய கூட்டணி கட்சியை உருவாக்கி ஆயுதங்களுக்கு அவசியமின்றி, அறிவுப் பூர்வமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தவர், துங்கு அப்துல் ரகுமான்.
சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் எட்டு மனைவியருள் ஆறாவது மனையியான மஞ்சலாராவிற்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் துங்கு அப்துல் ரகுமான். மன்னர் அப்துல் ஹமீட் ஹலீம் ஷாவின் அரண்மனை வளாகத்தில் இருந்த பௌத்த ஆலயத்தில்தான் துங்குவும் அவரின் உடன் பிறப்பினரும் வசித்து வந்தனர்.
குறும்புத்தனமும் துடுக்குத்தனமும் நிரம்பியிருந்த சிறுவனான ரகுமானை (துங்குவை) அவரின் தாயாரால் கண்டிக்க முடியவில்லை. மலேசியாவின் நவீன தந்தை என்று கூறப்படும் துன் மகாதீரின் தந்தையான முகமட் இஸ்கந்தார் என்பார் நிறுவிய சிறிய ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்ட துங்கு அப்துல் ரகுமான் வகுப்பறையைவிட்டு அடிக்கடி ஓடி விடுவாராம்.
அதனால், ரகுமானை குடும்பத்திலிருந்து கொஞ்ச காலம் பிரித்து வைப்பது என்று பெரியவர்கள் எடுத்த முடிவின்படி பேங்காகில் இருந்த ‘தெப்சிரின்’ பள்ளியில் துங்கு சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு கல்வியும் சயாமிய மொழியும் போதிக்கப்பட்டனவாம். பின்னர் பினாங்கு ‘ஃப்ரி ஸ்கூலில்’ துங்கு சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிதான் துங்குவின் கல்விப் பயணத்தையே மாற்றி அமைத்தது. கல்வி கேள்விகளில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இலண்டனில் வரலாறு, சட்டம் என இரு துறைகளில் இளங்களைப் பட்டம் பெற்ற துங்கு கூலிம், அலோர்ஸ்டார் நகரங்களில் அரசப் பணி புரிந்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் தாம் மன்னர் பரம்பரையில் தோன்றியவர் என்ற எண்ணமெல்லாம் இன்றி பொது மக்களுடன் இயல்பாகப் பேசி பழகுவாராம். அரசப் பணியில் நெடிய அனுபவம் பெற்ற துங்கு, பின்னர் நாட்டின் விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாடு அறியும்.
1908 பிப்ரவரித் திங்கள் 8-ஆம் நாள் தோன்றிய இவர், 1990ஆம் இதே நாளில்(டிசம்பர் 6) இயற்கை எய்தினார். எனினும், மலேசிய வரலாற்றில் துங்கு அப்துல் ரகுமானின் பெயர் எந்நாளும் நிலைத்திருக்கும்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24