சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
உலகின் பல நாடுகளின் நீதிமன்றங்கள் குறிப்பாக உச்சநீதிமன்றங்கள் முக்கியமான வழக்குகள் குறித்த தீர்ப்புக்களை மேற்கோள் காட்டித் தீர்ப்புகளை வழங்குவது நடைமுறையிலுள்ளது.
அவ்வகையில் பன்னாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பைப் புறந்தள்ளுவது சர்வதேசளவில் அந்தந்த நாடுகளுக்கு அவப்பெயரையும் இராஜதந்திர ரீதியில் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும்.
உதாரணமாக நெதர்லாந்து தலைநகர் தி ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றம், நிரந்தர தீர்ப்பாய நீதிமன்றம், சுவிஸ்சிலுள்ள விளையாட்டுத்துறைக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம், லக்சம்பர்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான நீதிமன்றம், ரோமிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான மனித உரிமைகள் நீதிமன்றம் போன்ற பல மன்றங்கள் அவ்வகையில் செயல்படுகின்றன.
இந்த பன்னாட்டு நீதிமன்றங்கள் பெரும்பாலும் ஐ நா மன்றத்தின் தீர்மானம் அல்லது ஆதரவுடன் நிறுவப்பட்டவை. எனவே அந்த நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாடுகளைக் கட்டுப்படுத்தும், அல்லது மரபுப்படி அந்தந்த நாடுகள் அந்தத் தீர்ப்புகளை ஏற்கும்.
ஆனாலும் சில நாடுகள் அந்தத் தீர்ப்புகளை ஏற்று மதித்து நடக்காமலிருந்த சூழல்களும் அதையடுத்து அவை ஐ நா மன்றத்தில் கண்டிக்கப்படுவதும், பல வேளைகளில் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படும்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கான நீதிமன்றமும் அதன் தீர்ப்பும்
அப்படியான நீதிமன்றங்களில் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்குக்கான நீதிமன்றமும் (East African Court of Justice) ஒன்று.

கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம்
தான்சானியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பொன்று பல இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பொருந்தும் வகையில் உள்ளது.
முதலில் கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னவென்று பார்ப்போம்.
ருவாண்டா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் டிரிபர்ட் ருஜுகிரோ அயபட்வா கனடாவில் வாழ்ந்து வருகிறார். ஆப்ரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் கோடிஸ்வரருமான ருஜுகிரோ ருவாண்டாவின் தலைநகர் கிகாலியிலுள்ள யூனியன் டிரேட் செண்டர் எனும் வணிக வளாகத்தை இருபது மில்லியன் டாலர்கள் முதலீட்டில் கட்டினார்.
அதை கடந்த 2006 முதல் இப்போது வரை அதிபராக இருக்கும் பால் ககாமே திறந்து வைத்தார். பின்னர் அவருக்கும் அரசுக்குமான உறவு கசந்தது. இதையடுத்து அவர் கனடாவில் வசித்துவந்த நிலையில், உரிமையாளர் நாட்டில் இல்லை என்று கூறி, `கைவிடப்பட்ட சொத்துச் சட்டத்தின் அடிப்படையில்` அவரது வணிக வளாகத்தை அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

சர்ச்சைக்குரிய வகையில் கையகப்படுத்தப்பட்ட யூனியன் டிரேட் செண்டர்
இதையடுத்து அந்த வணிக வளாகத்தில் அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றை வைத்திருந்தவர்கள் அதற்கான வாடகையை அரசுக்குச் செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது அரசின் கரமான ருவாண்டா வருவாய் அதிகார சபை. அவ்வகையில் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்ட வாடகைக் கட்டணம் மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் அமெரிக்க டாலர்.
பின்னர் அந்த வளாகத்தை முழுமையாகக் கையகப்படுத்த அரசு எடுத்த முடிவே அதற்கு வினையாக அமைந்தது. அதற்கு அரசு கூறிய காரணம் நகைப்புக்குரியதாக இருந்தது என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தனது கட்டுப்பாட்டில் இருந்த வணிக வளாகத்திலிருந்தவர்கள் அரசு கூறிய வங்கிக் கணக்கில் வாடகை செலுத்திய நிலையில், ருஜுகிரோவில் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு வரி கட்டவில்லை எனவே அந்த வளாகத்தை முழுமையாகக் கையகப்படுத்தப்படுவதாக அரசு கூறியது.
தான் நாட்டில் இல்லை எனக் கூறி தனக்கு வர வேண்டிய வாடகையை அரசு தன் கணக்கிற்கு மாற்றிக் கொண்டதையும் , பின்னர் முற்றாக அந்த வளாகத்தை அரசு கையகப்படுத்தியதையும் எதிர்த்து உள்நாட்டு நீதிமன்றத்தில் ருஜுகிரோ தொடுத்த வழக்கில் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வர, அதை எதிர்த்து கிழக்கு ஆப்பிரிக்க நீதிமன்றத்தை அவர் அணுகினார்.
வழக்கில் இரண்டு முக்கிய அம்சங்களை அவர் முன்வைத்தார். முதலாவது`கைவிடப்பட்ட சொத்து சட்டத்தின்` கீழ் தனது சொத்து வகைப்படுத்தப்பட்டது, இரண்டாவது அதை அரசு கையகப்படுத்தி உரிய இழப்பீடு அளிக்காமல் அதை விற்றது தவறு என்று கூறினார்.

கனடாவில் வசிக்கும் ருவாண்டா தொழிலதிபர் ருஜூகிரோ
வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளும் ஒருமனதாக அரசின் இரண்டு முன்னெடுப்புகளும் சட்டவிரோதம் என்று கூறி, அந்த வணிக வளாகம் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் மேலும் அவருக்கு நட்ட ஈடாக ஐந்து லட்சம் டாலர்கள் மற்றும் நீதிமன்றச் செலவுகள் அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதாவது கைவிடப்பட்ட சொத்து என்று கூறி அரசு அதைக் கையகப்படுத்தியது தவறு என்றது நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி மேலும் பல வழக்குகள் ருவாண்டாவில் தொடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. அப்படி ஏற்பட்டால் அது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.
அந்தச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
`கைவிடப்பட்ட சொத்துச் சட்டம்`
ருவாண்டில் நிலவும் `கைவிடப்பட்ட சொத்துச் சட்டம் அடிப்படையிலேயே தவறானது என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மிக மோசமான இனக்கலவரங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்களுக்கு காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களை இலக்கு வைத்தே அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ருவாண்டாவிலுள்ள சொத்துக்களின் நியாயமான உரிமையாளர்கள் சட்டபூர்வமான வாரிசுகளின்றி மரணமடைந்தாலோ, அல்லது பல காரணங்களால் ருவாண்டாவிலிருந்து வெளியேறியவர்கள் நாட்டில் அந்தச் சொத்துக்களைப் பராமரிக்க சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒருவரை நியமிக்காமலிருந்தாலோ அல்லது எந்தச் சொத்துக்களையாவது எவரேனும் சட்டவிரோதமாகத் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தாலோ அப்படியான அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு அவை அரசுடைமையாக்கப்படும்“ என்கிறது அந்தச் சட்டம்.

ருவாண்டா அதிபர் பால் ககாமே
இந்தச் சட்டத்தின்படி, கைவிடப்பட்ட சொத்துக்கள் அதன் சட்டபூர்வமான வாரிசுகளுக்குத் திரும்பும் வரை அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அரசின் பொறுப்பாகும் என்றும் கூறுகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசு செய்தது தவறு என்று கூறப்பட்டுள்ளது.
சரி இந்தத் தீர்ப்பை இலங்கைக்கு எப்படிப் பொருத்தி பார்ப்பது?
அடிப்படையில் இந்த ப் பிரச்சனை, வழக்கு, தீர்ப்பு, பிரதிபலிப்பு, நீண்டகாலத் தாக்கம் ஆகியவை இனப்படுகொலைகளுடன் தொடர்புடையவை.
ருவாண்டாவில் நடைபெற்ற இனமோதல்கள் மற்றும் வரலாறு காணாத வகையில் நடைபெற்ற இனப்படுகொலை மிகவும் கொடூரமானவை. இவ்வளவுக்கும் மோதலில் ஈடுபட்ட ஹூட்டு மற்றும் டூட்ஸி மக்கள் மதம், மொழி, கலாச்சார ரீதியாக ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் இன மோதல்கள் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன. போர் நடைபெற்ற காலத்தில் பலர் விரும்பியோ விரும்பாமலோ தாயகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி அவர்கள் வெளியேறிய போது நிலம், வீடு, வாகனம் போன்ற பலவற்றை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி நாட்டைவிட்டு வெளியேறினர்.

இலங்கை இராணுவத்தால் பல இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன
அப்படி அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் பாதுகாப்பு படைகளாலும், இதர அமைப்புகளாலும் கையகப்படுத்தப்பட்டு தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் அவை காலப் போக்கில் `அவர்கள் சொத்தாகியது`.
அந்தச் சொத்துக்களை அரசும் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்குத் திருப்பியளிக்க முன்வரவில்லை அல்லது உரிமையாளர்கள் முயன்று தோல்வியுற்றார்கள்.
குறிப்பாகப் போர்க் காலத்திலும் அதற்கு பின்னரும் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகள், கட்டடங்கள் மற்றும் இதர சொத்துக்கள் இன்னும் முழுமையாக உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை.
போர் முடிந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அந்த சொத்துக்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்ந்து கேள்விக்குரியதாக இருந்தாலும் அதற்கான விடை மற்றும் காணப்படவில்லை.
ஒரு நபர் நாட்டில் இல்லை, அல்லது அந்தச் சொத்துக்களை அவர்களுடைய சட்டரீதியான வாரிசுகள் பராமரிக்கவில்லை என்று கூறி கையகப்படுத்தியதும், உரியவர்களிடம் அதை ஒப்படைக்காததுமே கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்ற தீர்ப்பின் அடிநாதம். அந்தத் தீர்ப்பின் அடிப்படைகள் இலங்கைக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை.
தனியார் சொத்துக்களை ஒரு அரசு தனது விருப்பப்படி கையகப்படுத்துவது தொடர்பிலான வழக்குகளில் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படலாம். ஏனெனில் இந்த விஷயத்தில் ருவாண்டாவுக்கும் இலங்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
என்ன செய்ய முடியும்?
இலங்கையில் தனி நபர்களின் சொத்துக்கள் அரசால் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று தனி நபர்கள் கருதினால், அவர்கள் முறையாக அரசை அணுகி அதை விடுவிக்கும்படி கோரலாம். அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுகி தமக்கு நியாயம் வழங்கும்படி கோரலாம்.

தமது காணிகளுக்காக நீண்டகாலமாகப் போராடும் மக்கள்
அவ்வகையில் உள்நாட்டிலோ அல்லது பன்னாட்டு மன்றத்திலோ முறையிடும் போது கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக் காட்டலாம். அந்த வழக்கு மற்றும் தீர்ப்புக்கும் தமது வழக்குக்கும் பொருந்தும் என்று அவர்கள் எடுத்துரைக்கலாம்.
இதில் மிகவும் முக்கியமான ஒன்று சொத்து தொடர்பிலான ஆவணங்கள். அவை எந்தளவுக்கு பாதுகாப்பாக உள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அரசின் பயன்பாட்டுக்குக் காணி தேவை என்றால் அதை உரிய வகையில் ஆவணப்படுத்தி, உரியவர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்களுக்கு நியாயமான இழப்பீட்டை அளித்த பிறகே அதை கையகப்படுத்த முடியும்.
இதையே கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை குறிப்பிட்ட அந்தக் காணி அல்லது கட்டடமே அரசின் தேவைக்கு உகந்தது மாற்றுக் காணி அல்லது கட்டடம் ஏற்புடையதல்ல என்பதை நீதிமன்றத்தில் அரசு நிரூபிக்க வேண்டும்.
இலங்கை அரசு முதல் படியாக உரியவர்களிடம் சொத்தைக் கையளிக்கும் நடவடிக்கையை விரைவாகத் தொடங்க வேண்டும். அதற்கு நிர்வாக மற்றும் சட்டரீதியாக கால அவகாசம் தேவைப்படும் என்பதை அரசு நியாயப்படுத்தும். அதற்கு முன்னர் எந்நாளிலிருந்து குறிப்பிட்ட சொத்துக்கள் அரசின் பயன்பாடு அல்லது வேறு காரணங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டதோ அதற்கான வாடகையை முறையாகக் கணக்கிட்டு வட்டியுடன் உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
இதையே ரூவாண்டாவின் யூனியர் டிரேட் செண்டர் தொடர்பான வழக்கில் கிழக்கு ஆப்ரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. சொத்துக்களை திருப்பியளப்படுதுடன் அரசின் வசமிருந்து காலகட்டத்துக்கான வாடகை பாக்கியை 6% வட்டியுடன் அளிக்க வேண்டும் என்கிறது நீதிமன்றம்.
ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் நிர்வாகியாக அறியப்படும் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ இதில் உரிய நடவடிக்கையை எடுத்து உரியவர்களிடம் சொத்துக்களைக் குறிப்பாக காணிகளை மீண்டும் கையளிப்பார் என்று நம்புவோம்.
அப்படிச் செய்ய அவர் முன்வந்தால் அது பன்னாட்டரங்கில் அவருக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும்.