(மடடக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர்.
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் தந்தை செல்வா பூங்காவில் ஒன்றுகூடியபோது, அவர்களை பொலிஸாரும் புலனய்வாளர்கம் எச்சரித்து பேருந்து நிலைய பக்கம் விரட்டினார்கள்.
பேருந்து நிலையத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றுகூடியபோது, அனுமதி எடுக்காது போராட்டம் நடத்தினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அச்சுறுத்திய போது அதில் இருந்த ஒரு பெண்மணி நீங்கள் கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் போராட்டத்தை நடாத்துவோம். அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா நீங்கள் என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் என கூறியதால் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அனுமதி பெற்றே போராட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் 14 நாட்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்திய நிலையில் காணாமல் போன உறவினர்களுக்கும், பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் எம்.பிக்கள் பா.அரஜயநேத்திரன், ஞா.சிறிநேசன் ஆகியோர் மக்களை மீண்டும் தந்தை செல்வா பூங்காவில் ஒன்று சேர்த்தனர்.
அனுமதியின்றி மக்களை கூட்ட முடியாதென அவர்களிடமும் பொலிசார் தெரிவித்தனர். இதன்போது மீண்டும் தர்க்கம் உருவானது. மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பிள்ளையான் விடுவிக்கப்பட்டு பேரணியாகவந்தபோது பொலிசாருக்கு தெரியவில்லையா, அந்த கூட்டத்தை விட இது சிறிய கூட்டம் என சுட்டிக்காட்டியதையடுத்து பொலிசார் மௌனமாயினர்.
தமக்கு பிரச்சனையில்லை, பொதுச்சுகாதார பரிசோதகரின் அனுமதி பெற்று போராட்டத்தை நடத்துங்கள் என்றார்கள்.
உடனடியாக சம்பவ இடத்திலிருந்தபடியே ஞா.சிறிநேசன், பொதுச்சுகாதார பரிசோதகரை தொலைபேசியில் அழைத்து பேசினார். தாம் போராட்டத்திற்கு தடைவிதிக்கவில்லையென்றும், சமூக இடைவெளி பேணி போராட்டத்தை நடத்தலாமென்றும் கூறினார்.
இதையடுத்து, தந்தை செல்வா பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.