எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக 37 ஆண்டுகள் இருந்த மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் தற்போது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழு, கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதியன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41 பி மற்றும் 95-1 பிரிவுகளின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையகத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
தேர்தல்கள் அணைக்குழுவிற்கு புதிய தலைவராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ.திவாரத்ன, கே.பி.பி.பதிரண மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது