(மன்னார் நிருபர்)
(15-12-2020)
இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கு தெளிவூட்டும் விசேட கருத்தமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(15) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அதன் குழுமத்தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தெழிவூட்டும் கருத்தமர்வு இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் கே.குகநாதன் குறித்த கருத்தமர்வில் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.
அரசின் ஒரு இலட்சம் காணிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர் யுவதிகள் இடம் பெற உள்ள நேர்முகத் தேர்வில் எவ்வாறு முகம் கொடுப்பது, குறித்த காணியை எவ்வாறு பயண்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக தொழிவூட்டப்பட்டது.
குறித்த கருத்தமர்வில் சுமார் 25 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதோடு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த கருத்தமர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.