யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையில் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் இன்று காலை மீன் வாங்கியதாலும் வியாபாரிகள் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாலும் சங்கானையின் சந்தைகள் இரண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பிரதேசசபை தவிசாளர் நடனேந்திரன் கனடா உதயன் இணையத்தள ஊடகவியலாளருக்கு தெரிவித்தார்.
சங்கானை சந்தைத் தொகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற நூறு வரையான வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவற்றில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் இன்று காலை சங்கானை மீன்சந்தையில் இன்று காலையில் மீன் வாங்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்களின் தொடராக மறு அறிவித்தல் வரும் வரையில் மீன் சந்தை, பொதுச் சந்தை என்பன மூடப்படுவதாக நடனேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை சந்தைகள் மூடப்பட்டாலும் வியாபாரிகள் வீதி ஓரங்களில் வியாபாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, சங்கானைத் தொற்றினை அடுத்து வலி.மேற்கில் கொரோனாப்பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதேச செயலக, பிரதேசசபை, சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான அவசர சந்திப்பு நாளை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.