கடந்த 02.12.2020 அன்று வீசிய புரவி புயலின் தாக்கத்தினாலும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதி விவசாயிகள் எவ்வித உதவிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு மரக்கறி, பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முழங்காவில் பகுதி விவசாயிகளிற்கு தற்பொழுது ஏற்பட்ட இந்த இயற்கை அழிவு மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் 350 இற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 1500 மெற்றிக் தொன்னிற்கு மேலான விளைபொருள்கள் அழிவடைந்துள்ளன. இதில் பழப்பயிர் செய்கையில் 90 ஏக்கரிற்கு மேற்பட்ட வாழைச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதுடன், பப்பாசி பயிர்ச் செய்கை அதிகளவில் உள்ள இப்பிரதேசத்தில் 18 ஏக்கரிற்கு மேல் முற்றாக அழிவடைந்துள்ளது.
மரக்கறி செய்கையில் (கறிமிளகாய், கோவா, கத்தரி, தக்காளி) 25 ஏக்கர் அளவிலும், தானியப்பயிர்கள் (மிளகாய், மரவள்ளி, கச்சான், உழுந்து) 30 ஏக்கரிற்கு மேல் முற்றாக அழிவடைந்ததுடன் வீட்டுத்தோட்டங்கள் அதிகம் உள்ள நாச்சிக்குடாவின் ஜேம்ஸ்புரம், முழங்காவிலின் அன்புபுரம், இராஜபுரம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளைக் கிணறுகளைக் கொண்ட இப்பிரதேசத்தில் தற்காலிக மண் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் நீரால் மூடப்பட்டும் கிணறுகள் இடிவடைந்ததால் 20 ற்கும் மேற்பட்ட விவசாயிகள் இராஜபுரம் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி விவசாயிகளிடம் பேசிய போது தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளினால் எதிர் கொண்டுள்ள இப்பகுதி விவசாயிகளிற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க எவரும் இல்லை. மாவட்ட மட்ட அழிவுக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் நெல் அழிவினை மட்டும் கருதியே இக்கூட்டம் முடிவடைந்தது.
நெல் விவசாயிகளிற்கான இலவச காப்புறுதி இருப்பது போல் மரக்கறி பயிர்களிற்கான காப்புறுதி செய்யப்படுவது இல்லை. இதற்கு பொறுப்பாக உள்ள கமநல காப்புறுதி சபையானது உரியவாறு செயற்படாது கனரக வாகனங்கள், மோட்டார் வாகனங்களிற்கான வாகன காப்புறுதிகளை வழங்குவதையே நோக்காக கொண்டுள்ளது. மேட்டுப்பயிர் செய்கையாளருக்கான திட்டங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.
முழங்காவில் கமநல சேவைகள் நிலையத்தால் மேட்டுநில பெரும்போக பசளை தேவை என விவசாயிகளிடமிருந்து பதிவு செய்திருந்தும் இதுவரை பசளை பெற முடியாதிருந்தது. தனிப்பசளைகளே பெறமுடியாதுள்ள நிலையில் தென்னை உரங்களை கொண்டு பயிர் செய்கையை மேற்கொண்டிருந்தோம்.
இப்பிரதேசத்தில் கால்நடைக்கட்டுப்பாடற்ற நிலையில், அதிகரித்த சட்டவிரோத
விவசாய இரசாயன பயன்பாடு மத்தியில் அதிகரித்த விலைகளில் விதைகள் பெற்றும் பயிர் செய்கை ஆரம்பித்த நிலையில் பயன்தரு நிலையில் அனைத்தும் அழிவடைந்துள்ளது. இவ்வாறான மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகளை மேற்கொள்வது இல்லை.
சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழான சிறுபோக பணக்கொடுப்பனவு கூட இதுவரை முற்றாக கிடைக்கவில்லை. கிடைத்த ஒருபகுதி பணத்தினைக் கொண்டு விவசாயம் ஆரம்பித்து இருந்தோம்.
ஆகவே மேட்டுப்பயிர் செய்கையாளர்களையும் கருத்தில் எடுத்து இவ்இயற்கை அழிவிற்கான நட்டஈடுகள், மானியத்தினைப் பெற்றுத் தர உதவி செய்யுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.
பாதிக்கப்பட்டுள்ள மேட்டுநிலப் பயிர் செய்கையாளருக்கான திட்டங்களை அரசாங்கம் உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தான் அவர்களை தொடர்ந்தும் பயிர்ச் செய்கை செய்ய ஊக்குவிக்க முடியும்